அரசு உதவிக்கு மாற்றுத் திறனாளியாயிருந்தால் போதாது.. அனாதையாகவும் இருக்கணும் !!

தமிழ்நாடு அரசின் புதிய ஆணையை எதிர்த்து அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சமூகநலத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் மற்றும் உதவித் தொகை பெற மாற்றுத்திறனாளியாய் இருந்தால் போதாது அத்துடன் ஆதரவற்றோராகவும் இருக்க வேண்டும் என தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை (எண் 26) திரும்பப் பெற வலியுறுத்தி முற்றுகைப் போராட்ட மும், அரசாணை நகலை கொளுத் தும் போராட்டமும் நடத்தப்பட்டது.

‘மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான விதிகளைத் தளர்த்த வேண்டும். அனைவருக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்க வேண்டும். உதவித்தொகை வழங்குவதில் பாரபட்சம் கூடாது. வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். சமூகநலத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம், உதவித்தொகை பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள், பெற்றோரை இழந்தவராக இருக்க வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்’ என ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் வலியுறுத்தினர். போராடியவர்கள் அரசாணையை கொளுத்த முயன்றபோது 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் 2 இடங்களில் இப்போராட்டம் நடந்தது. கே.கே.நகர் மாற்றுத் திறனாளி ஆணையர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் தலைமை வகித்தார். ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு சென்னை மாவட்ட செயலாளர் கே.ராதை தலைமை வகித்தார்.