தற்கொலை செய்துகொள்ள அனுமதி கேட்ட விவசாயி !

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா சரகூரு கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவா என்கிற 42 வயது விவசாயி தான் இப்படி தாசில்தாரிடம் மனு கொடுத்தவர். நேற்று கொள்ளேகால் தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து தாசில்தார் மகாதேவய்யாவிடம் அவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
“நான் சரகூரு கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறேன். எனக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு டிராக்டர் வாங்குவதற்காக சரகூருவில் உள்ள கிராம வங்கியில் ரூ.4½ லட்சம் கடன் வாங்கி இருந்தேன். பின்னர் அந்த பணத்தை வைத்து டிராக்டர் வாங்கி விவசாயம் செய்து வந்தேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த டிராக்டரை சிலர் தீவைத்து கொளுத்தி விட்டனர்.
இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு, கடனை என்னால் திருப்பி செலுத்த முடியவில்லை. மேலும் அந்த டிராக்டர் மூலமாக வந்த இன்சுரன்ஸ் பணத்தையும் வங்கி அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். இதற்கிடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் என்னுடைய கால் ஒன்றை இழந்து விட்டேன், வலது கையும் செயலிழந்து போய் விட்டது. இதனால் எனது குடும்பத்தை காப்பாற்றவே எனக்கு வழி தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது வங்கியில் இருந்து இன்சுரன்ஸ் பணம் போக கடன் தொகையான ரூ.2.25 லட்சமும், வட்டியாக ரூ.8.75 லட்சமும் சேர்த்து மொத்தம் ரூ.11 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறி நோட்டீசு வந்துள்ளது.
மேலும் பணம் செலுத்த தவறியதால் போலீசார் மூலம் பிடிவாரண்டும் எனக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. என்னால் வங்கி கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. கடனை அடைக்க வேறு வழியும் தெரியவில்லை. இதனால் குடும்பத்துடன் நான் தற்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு அந்த மனுவில் அவர் கேட்டுள்ளார்.
இதையடுத்து தாசில்தார் மகாதேவய்யா, சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அரசு உத்தரவின் பேரில் தற்போதைக்கு கடனை திரும்ப கேட்டு மகாதேவாவை தொந்தரவு செய்யக்கூடாது என்று எச்சரித்தார். பின்னர் மகாதேவாவை தாசில்தார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.
10 லட்சம் கடனுக்கு குடும்பத்தோட தற்கொலை செய்யுமளவு டார்ச்சர் செய்யும் இதே பேங்க் அதிகாரிகள் பத்தாயிரம் கோடியை கட்டாமல் ஹாய்யாக கையாட்டிவிட்டுப் போன மல்லையாவை ஆவென்று பார்த்தபடியே தான் நின்றார்கள்.