திப்பு சுல்தானாக ரஜினியா ? – நோ சொல்லும் ராம கோபாலன்.

கன்னடத் தயாரிப்பாளரான அசோக் கெனி, திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்றை தனது கனவுப் படமாகத் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதில் நடிக்க ரஜினிகாந்திடம் பேசப் போவதாகவும் கூறியிருந்தார். இன்னும் படம் குறித்து ரஜினியுடன் பேச்சுவார்த்தையே ஆரம்பிக்காத நிலையில், இந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது இந்து முன்னணி.

இந்தி முன்னணி தலைவர் ராம கோபாலன் ‘திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கக் கூடாது’ என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். “திப்பு சுல்தான் தமிழர்களைக் கொன்றவன், அதனால் அவனது வாழ்க்கை வரலாற்றில் தமிழரை மதிக்கும் ரஜினி நடிக்கக் கூடாது. எம்ஜிஆர் தனது வாழ்க்கை வரலாறான நான் ஏன் பிறந்தேன் புத்தகத்தில், பொள்ளாச்சியில் வசித்து வந்த தமிழரான தனது மூதாதையர்கள் கேரளாவுக்கு இடம் பெயரக் காரணமே திப்பு சுல்தானின் படையெடுப்பும், அவன் தமிழர்களைப் படுகொலை செய்ததும்தான் என்று எழுதியுள்ளரா். எனவே திப்பு சுல்தான் ஒரு இந்து மத விரோதி. அவனது வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்படும் படத்தைத் திரையிட விடமாட்டோம்,” என்றார் ராம கேபாலன்.

அட ராமா ! திப்பு சுல்தான் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மன்னர்களில் ஒருவர். இப்படி இந்துத்துவாவாதிகள் பிரச்சனையை கிளப்பினால் ரஜினி உட்பட இனி யாராவது திப்பு சுல்தானாக நடிப்பார்களா ? சந்தேகமே. இந்துமதவெறியை எதிர்த்து நிற்கும் அளவு பக்குவமானவர்கள் யாரிருக்கிறார்கள் ?