ஆதார் அட்டை என்கிற தொழில்நுட்பம் மூலம் மக்களை கண்காணிக்கும் வசதியான நெட்வொர்க்கை உருவாக்கி வருகிறது மத்திய அரசு. நமது இந்தியச் சட்டப்படி எந்தவொரு அட்டைகளையும் அரசு கட்டாயமாக்கக்கூடாது என்று இருந்தும் மறைமுகமாக கேஸ் இணைப்புகள், பாங்க் அக்கௌன்ட்டுகள் மற்றும் வாக்காளர் அட்டைகளில் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம் மக்களை வேவுபாக்கும் வேலையை எளிதாக்கிக் கொள்கிறது அரசு.
இதுபற்றி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது. ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் ஆதார் அட்டை கட்டாயமல்ல என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

“ஆதார் அட்டை பெறுவதற்காக தனது சொந்த, தனியுரிமை அல்லது அந்தரங்கத் தகவல்களை விட்டுக் கொடுக்க நாட்டின் ஏழை மக்களும் வறியோர்களும் தயாராக உள்ளனர், இது அவர்களுக்கு உணவையும் வருவாயையும் வழங்கும்” என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அப்படி எந்தக் குடிமக்கள் அரசிடம் வந்து சொன்னார்கள் என்பது தெரியவில்லை. மறைமுகமாக ஆதார் இல்லாவிட்டால் கேஸ் மானியம் வராது என்பது போன்ற மிரட்டல்களைச் செய்தே ஆதாரை திணித்தது மத்திய அரசு.

இந்த வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதி சலமேஸ்வர் , “ஏழை மற்றும் வறியோர் என்பதற்காக அவர் தனியுரிமைக் கொள்கையை வைத்துக் கொள்ளக் கூடாதா” என்றார்.

அட்டார்னி ஜெனரல் முகுல் ரஹோட்கி “ஆதார் அட்டையை அனைவரும் விருப்பப்பட்டே எடுத்துக் கொள்கின்றனர். குடிமக்கள் நன்கு அறிந்தே இதற்கான தெரிவை மேற்கொள்கின்றனர்” என்றார். ஆதார் அட்டையை அரசு எப்படி மக்களை கண்காணிக்க உபயோகப்படுத்தும் என்பது ஆதார் அட்டை எடுத்த 30 கோடிப் பேருக்கு எப்படித் தெரியும் ? ஏனென்றால் அது பற்றி அரசு எதுவும் சொல்லவேயில்லையே.

அமர்வின் மற்றொரு நீதிபதி எஸ்.ஏ.போப்தே பதிலளிக்கும் போது, “நன்கு அறிந்தே நான் இந்தத் தெரிவை மேற்கொண்டேன் என்பது பற்றி நான் நன்கு அறியவில்லை. அதாவது நான் அளிக்கும் தகவல்களைக் கொண்டு என்ன செய்யப்படும் என்பதைப் பற்றிய முழு விவரம் என்னிடம் இல்லை. நீங்கள் அதனை எனது சொந்த விவகாரங்களில் தலையீடு செய்வதற்காகவோ, கண்காணிப்பதற்காகவோ பயன்படுத்த முடியும்” என்றார்.

இதற்கு ரஹோட்கி பதிலளிக்கையில், “100 கோடி மக்களுக்காக நீங்கள் பேச முடியுமா? ஆதார் பயன்படுத்துவது ஒருவருக்கு பிரச்சினையாக இருந்தால் பயன்படுத்தாமல் இருந்துவிட்டுப் போகட்டும். தினக்கூலியில் தங்கள் வாழ்வாதாரத்தைக் கொண்டுள்ளவர்கள், உண்ண உணவு இல்லாதவர்களுக்கு ஆதார் ஒரு பிழையற்ற வழிமுறை. ஆனால் இங்கு நீங்களோ சிலரது தனியுரிமை, அந்தரங்க உரிமைகள் பற்றிய அச்சங்களை பேசுகிறீர்கள். நீங்கள் நாட்டுக்காகப் பேசவில்லை” என்றார்.

ஆகஸ்ட் 11, 2015-ல் உச்ச நீதிமன்றம் ஆதார் அட்டை தேவைப்படுபவர்களின் தெரிவே, கட்டாயப்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சமூகப் பயன்பாட்டு திட்டங்கள் பலரை சென்றடையாததற்கு உச்ச நீதிமன்றத்தின் ஆகஸ்ட் 11 அறிவுறுத்தல் தடையாக உள்ளது என்று ஜார்கண்ட், குஜராத் மாநில அரசுகள் மற்றும் ஆர்பிஐ, செபி, டிராய், ஓய்வூதிய கட்டுப்பாட்டு ஆணையம் ஆகியவை உச்ச நீதிமன்றத்தை நாடியது.

அட்டார்னி ஜெனரல் ரொஹாட்கிக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கூறும்போது, “நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு சென்று சேர வேண்டிய பயன்கள் சென்றடைவதை உச்ச நீதிமன்றம் ஏன் தடுக்க வேண்டும்? ஒரு ஏழை, ‘எனது தனியுரிமையை எடுத்துக் கொள்ளுங்கள் பணம் கொடுங்கள்’ என்று கேட்கும் போது, உச்ச நீதிமன்றமோ பணம் வேண்டாம் தனியுரிமையை வைத்துக் கொள் என்று கூறுகிறது” என்றார்.

இதனையடுட்து ரொஹாட்கி கூறும்போது, “மரணத்தின் பிடியில் இருக்கும் ஒரு மனிதனுக்காக நள்ளிரவு 2 மணிக்கு செயல்பட்ட நீதிமன்றமாகும் இது. எனவே 50 கோடி மக்களுக்கான கதவை இந்த உச்ச நீதிமன்றம் அடைக்க முடியாது” என்றார். 50 கோடி மக்களுக்கு ஆதார் தங்கள் வாழ்வை என்னவெல்லாம் செய்யும் என்று தெரியாது. தெரியவந்தால் அவர்கள் ஆதார் அட்டையை தலையைச் சுற்றி தூக்கி எறிவார்கள் என்பது நிச்சயம்.

ஆதாரை எதிர்த்து பல்வேறு தரப்பினர் மற்றும் என்.ஜி.ஓ.க்கள் செய்த மனுவின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஷியாம் திவான் கூறும் போது, “பயோமெட்ரிக்ஸ், என்னுடைய கருவிழி, என்னுடைய விரல் ரேகைப்பதிவுகள் என்னுடைய அந்தரங்கமான சொந்த சொத்து. பயோமெட்ரிக்தான் நான். முன்னாள் எஃப்.பி.ஐ., சி.ஐ.ஏ. க்கள் இதில் உள்ளபோது, கார்ப்பரேட்கள் கோடிக்கணக்கான மக்களிடமிருந்து தனித்துவ சொந்தத் தரவு அறுவடைச் செய்கின்றனர். இந்தத் தரவை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பது பற்றி அரசுக்கு எவ்வித அறிதலும் இல்லை. சட்ட ரீதியான அனுமதியோ, நிர்வாக அதிகாரமோ எதுவும் இல்லாமல் இத்தகைய முக்கிய தரவுகள் திரட்டப்படுகின்றன” என்றார்.

இதற்கு ரஹோட்கி கூறும்போது, ஆதார் அட்டைத் திட்டம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தெரிவு. இதற்கு சட்ட அனுமதியெல்லாம் தேவையில்லை என்றார்.

கார்ப்பரேட்டுகளும், அரசும் மக்களை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதே ஆதார். ஆதார் கட்டாயமானால் உங்கள் அட்டையின் எண்ணை மட்டும் வைத்து நீங்கள் கிரெடிட் கார்டில் வாங்கிய காய்கறி முதல், பேங்கில் ட்ரான்ஸ்பர் செய்த பணம் வரை எல்லாவற்றையும் அரசு எளிதாக ட்ராக் செய்யமுடியும். ஆதாரினால் மக்களுக்கு நன்மை என்று பெரிதாக எதுவும் இல்லை.

Related Images: