சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் பலாத்காரர்களுக்கு கட்டாயமாக ஆண்மை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யும் சட்டத்தை அமல் செய்யலாமா என்று மத்திய அரசிடம் கேட்டுள்ளார்.

மேலும், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாலியல் கல்வியை பாடத்திட்டத்தில் கட்டாயமாக்குவது குறித்து விரைந்து முடிவெடுக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த 2011–ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்கள் காப்பகத்துக்கு வந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர், அந்த காப்பகத்தில் தங்கியிருந்து 9–ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவன் ஒருவருக்கு கல்வி வாய்ப்பு வழங்குவதாக கூறி, அந்த மாணவனை தன்னுடன் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஒய்.எம்.சி.ஏ. சுற்றுலா விடுதியில், அந்த மாணவனுக்கு பாலியல் தொந்தரவு செய்து, வலுகட்டாயமாக இயற்கைக்கு மாறாக உறவு கொள்ள முயன்றுள்ளார். பின்னர் அவர் பிரிட்டனுக்கு ஓடிவிட்டார்.

மேல்கோர்ட்டுக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், “பாலியல் அச்சுறுத்தல்களை கையாள்வதில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் பயனற்றதாக, திறனற்றதாக இருக்கும்போது, இந்த நீதிமன்றம், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் மிகக் கொடூரமான குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை, கூட்டு பலாத்காரங்களை கண்டும் காணாமல் கைகட்டி மவுனியாக, எவ்வித சலனமும் இல்லாமல் இருக்க முடியாது. குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் பலாத்காரர்களுக்கு கட்டாயமாக ஆண்மை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யும் சட்டத்தை அமல்படுத்தினால், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை வெகுவாக குறையும்” எனக் கூறினார்.

நீதிபதி மேலும் கூறும்போது, “கட்டாய ஆண்மை அகற்றும் அறுவை சிகிச்சை முறை என்பது காட்டுமிராண்டித்தனமாகத் தெரியலாம். ஆனால், காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கு அதே பாணியில்தான் தண்டனைகளும் வழங்கப்பட வேண்டும். தண்டனையை நினைத்துப் பார்க்கும்போதே ஒருவர் அந்த குற்றத்தைச் செய்வதை தவிர்க்க வேண்டும்.

‘மனித உரிமை மீறல்’ என்ற பெயரில் இந்த பரிந்துரையை எதிர்க்கப்போகும் சமூக ஆர்வலர்களே, நீங்கள் அனைவரும் முதலில் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி தயவு காட்டுங்கள். அதைவிடுத்து உங்கள் கருணையை குற்றவாளியிடம் காட்டாதீர்கள்.

‘மனித உரிமைகள்’ என்பது குற்றம் செய்பவர்களை பாதுகாப்பதற்காக உள்ள கேடயம் அல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும். அதேபோல், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாலியல் கல்வியை பாடத்திட்டத்தில் கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும்.

ஏனெனில், பதின்ம பருவக் குழந்தைகள், பாலியல் சார்ந்த விவரங்களை தங்களது நண்பர்கள், இணையம், சினிமா ஆகியனவற்றின் மூலம் அரைகுறையாக தெரிந்துகொள்கின்றனர். தவறான புரிதல் ஆபத்தானது. எனவே அவர்களுக்கு பாலியல் தொடர்பாக அறிவியல்பூர்வமான தகவல்களை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ரேப்பிஸ்ட் பார்ட்டிகளே ‘லைன்’ கட்டாகனுமா ? பாத்துக்கங்க. ஜாக்கிரதை.

Related Images: