“படேல் ஜாதிக்காரங்க கிரிக்கெட் பார்க்க டிக்கெட் தரவில்லை !” – ஹர்திக் படேல். போராட்டம்.

வரும் 18-ம் தேதி, ராஜ்கோட்டில் நடைபெறும் இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான போட்டியில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக படேல்கள் இட ஒதுக்கீட்டு போராட்டத்தலைவர் ஹர்திக் படேல் அறிவித்துள்ளார்.

என்ன காரணம் ? கந்தேரி கிராமத்தில் உள்ள படேல் சமூகத்தினருக்கு ஸ்டேடியத்தின் டிக்கெட்டுகள் விற்கப்படாதது தான். இப்படியொரு சப்பைக் காரணம் பற்றி அவர் கூறியதாவது
“பல டிக்கெட்டுகள் விற்கப்படாத நிலையில், அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்டு விட்டதாக சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது ஏன் என்பதை முதலில் அவர்கள் விளக்க வேண்டும். பாஜக அரசு, கிரிக்கெட் ஆட்டம் போராட்டத்துக்கான களமாகக் கூடாது என்று இதுவரை கூறிவருகிறது. ஆனால் தற்போது அரசே போட்டியை முன் வைத்து அரசியல் விளையாட்டை விளையாடுகிறது.
டிக்கெட் விற்பனை விவரங்களை வெளியிட நான் கோரிக்கை வைக்கிறேன், ஏனெனில் சவுராஷ்டிர கிரிக்கெட் சங்கம் அனைத்து டிக்கெட்டுகளையும் பாஜக-வினருக்கு கொடுத்ததாக நாங்கள் கருதுகிறோம். படேல்கள் அமைப்பு இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகள் போட்டி தினத்தன்று மைதானத்துக்கு வரும் வழியை மறிப்போம், பிறகு ஒட்டுமொத்த ஸ்டேடியத்தையும் முற்றுகை இடுவோம். குழப்பம் ஏற்படுத்தி கிரிக்கெட் வீரர்களுக்கு தீங்கு இழைப்பது பாஜக-வாகவே இருக்கும் ஆனால் இவர்கள் படேல் சமூகத்தினர் மீது பழி சுமத்துவார்கள்”. இவ்வாறு ஹர்திக் படேல் பேசினார்.

இந்நிலையில் அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. 90 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. ராஜ்கோட் ரேஞ்ச் ஐ.ஜி. டி.ஆர்.படேல், “சுமார் 2000 போலீஸ், 5 கண்காணிப்பு காவலதிகாரிகள், 24 உதவி காவல் கண்காணிப்பாளர்கள், 32 இன்ஸ்பெக்டர்கள், 183 சப் இன்ஸ்பெக்டர்கள், 1210 கான்ஸ்டபிள்கள், 50 போக்குவரத்து போலீஸ், 171 பெண் போலீஸ் கான்ஸ்டபிள்கள் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்படுவார்கள்” என்றார். இது தவிரவும் மாநில ரிசர்வ் போலீஸ் படை, அதிரடிப் படை போலீஸ் ஆகியோரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகள் ஏற்கெனவே ராஜ்கோட் வந்துவிட்டனர், இவர்கள் நாளை மைதானத்தில் பயிற்சி செய்யவுள்ளனர்.

ஹர்திக் படேலை ஆளும் கட்சியான பி.ஜே.பி வேண்டுமென்றே போராட அனுமதித்து, கடைசியில் காவு வாங்காமலிருந்தால் சரிதான். காவு வாங்கினால் இட ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்கிற காயந் நகர்த்தலை பி.ஜே.பி செய்ய அது வழிவகுக்கும் என்பது நிச்சயம்.