2,626 படுக்கைகள் கொண்ட அரசு ராஜாஜி மருத்துவமனையில் தென்மாவட்டங்களில் இருந்து தினமும் 2,800 உள் நோயாளிகள், 9,000 வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையில், கடந்த ஒரு மாதமாக எப்போதும் இல்லாத வகையில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. பகலிலும் ‘ஈ’க்கள் மொய்ப்பது போல கொசுக்கள் கூட்டமாக வந்து கடிக்கின்றன. உள்நோயாளிகள் இரவில் கொசுக் கடியால் தூங்கவே முடியாமல் அவதியுறுகின்றனர். பகலில் கடிக்கும் கொசு மூலமே டெங்கு பரவுகிறது. மருத்துவமனையில் பகலிலும் கொசுக்கள் கடிப்பதால் நோயாளிகள், உறவினர்கள் டெங்கு பயம் பரவியுள்ளது.

மருத்துவமனைக்கு வரும் டெங்கு, மூளைக்காய்ச்சல், மலேரியா, யானைக் கால் நோயாளிகளை கடிக்கும் கொசுக்கள் மற்றவர்களையும் கடித்தால் அது அவர்களுக்கும் பரவும் வாய்ப்புள்ளது. நோய்க்கு சிகிச்சைப் பெற மருத்துவமனைக்கு வந்து, கடிக்கும் கொசுக்களால் மற்ற நோய்கள் வந்துவிடுமோ என அச்சப்படுகிறார்கள் மக்கள்.

ஏற்கனவே அரசு டெங்கு காய்ச்சல் எண்ணிக்கையை குறைத்துக் காட்டியும், மருத்துவர்களிடம் டெங்கு வந்தால் டெங்கு என்று சொல்லவேண்டாம் என்று ‘அறிவுறுத்தியும்’ உள்ளதால் டெங்கு இருந்தாலும் டெங்கு என்று டாக்டர்கள் சொல்லாமல் மருந்துகளை மட்டும் சொல்கின்றனர்.

ராஜாஜி மருத்துவமனையில் அவுட் சோர்ஸிங் மூலம் 321 துப்புரவுத் தொழிலாளர்கள் மூன்று சிப்ட்களில் 24 மணி நேரமும் பணிபுரிகின்றனர். அவர்கள் காலை, பகல், மாலை, இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகம், வார்டுகளில் கொசு மருந்து அடிக்கின்றனர். மருத்துவமனை வளாகம் மிகவும் சுத்தமாகத் தான் இருக்கிறது. அதனால், இங்கு கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்பே இல்லை. மருத்துவமனை எதிரே பனகல் சாலை கால்வாயில் கழிவுநீர் பல மாதங்களாகத் தேங்கிக் கிடக்கிறது. அங்கு உற்பத்தியாகும் கொசுக்கள்தான் மருத்துவ மனைக்கு வருகிறது. மாநகராட்சியிடம் கடிதம் மூலம், அந்த கால் வாயை தூர்வார ஏற்கெனவே புகார் செய்துவிட்டோம் என்கிறார்கள் மருத்துவமனை அதிகாரிகள். மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரியிடம் கேட்டபோது, கால்வாயைத் தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

சென்னையில் சரியாக கூவம் ஆற்றின் கரையிலேயே தான் அரசு ஸ்டான்லி மருத்துவமனை இருக்கிறது. அங்கும் இதே பிரச்சனை தான். ஆனால் இதே கூவம் அருகே பெரிய ஷாப்பிங் மால் உள்ளது, பெரிய ஸ்டார் ஹோட்டல்கள் உள்ளன. ஆனால் அதுக்குள்ள மட்டும் கொசுவே கடிக்கிறதில்லீங்க. எப்பிடிங்க அது ?

Related Images: