சொந்த வீடு, கார், பைக் இருந்தால் சமையல் எரிவாயு மானியம் அரசால் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மலிவான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி, ஆட்சியில் அமர்ந்த பா.ஜ.க.வின் சாயம் ஒன்றரை ஆண்டு காலத்திலேயே வெளுத்துவிட்டது.

சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை மே 2014 இல் காங்கிரஸ் ஆட்சியின் போது 115 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல் விலை ரூ.74.60 காசாக இருந்தது. டீசல் விலை ரூ.60.05 ஆக இருந்தது. தற்போது பா.ஜ.க. ஆட்சியில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 47 டாலராக குறைந்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை 60 சதவீதம் குறைத்திருக்க வேண்டிய பா.ஜ.க. அரசு மேலும் 4 முறை கலால் வரியை விதித்து அரசு கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் சமையல் எரிவாயு மானியத்தை முற்றிலும் ரத்து செய்யப் போவதாக ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், மத்திய பா.ஜ.க. அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.16, டீசலுக்கு 40 காசுகள் கலால் வரி விதித்திருக்கிறது. இதன் மூலமாக கலால் வரி ஒரு லிட்டர் பெட்ரோலில் ரூ.17.46 ஆக இருந்தது தற்போது ரூ.19.06 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல ஒரு லிட்டர் டீசலில் ரூ.10.26 ஆக இருந்த கலால் வரி தற்போது ரூ.10.66 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் முதல் ஜனவரி வரை கலால் வரியை 4 முறை உயர்த்திய காரணத்தில் ரூ.20 ஆயிரம் கோடி பா.ஜ.க. அரசுக்கு கிடைத்திருக்கிறது. மக்களுக்கு போய்ச் சேர வேண்டிய பயன்களை எல்லாம் கலால் வரி விதித்து அரசு கஜானாவை நிரப்புவதைவிட மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.

சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்துபவர்களுக்கு வருமான வரம்பு விதிக்கப்படுவதோடு, கார், இரண்டு சக்கர வாகனம், வீடு வைத்திருக்கிற எவருக்கும் சமையல் எரிவாயு மானியம் வழங்குவது ரத்து செய்யப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார். இது ஏற்கனவே விலைவாசி உயர்வால் நொந்து போயிருக்கிற மக்கள் மீது பா.ஜ.க. அரசு மிகப்பெரிய தாக்குதலை தொடுத்திருக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை மக்கள் மீது சுமத்தாமல் ஆண்டுக்கு 2 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் மானியமாக மத்திய காங்கிரஸ் அரசு வழங்கி வந்தது. ஆனால் பா.ஜ.க. அரசோ அதை ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்து மக்களின் சுமையை அதிகரித்திருக்கிறது. இந்த நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெறவில்லையெனில் கடும் கொந்தளிப்பான சூழலை மக்களிடையே சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.” இவ்வாறு இளங்கோவன் சாடியுள்ளார்.

சிலிண்டருக்கு கேவலம் 200 ரூபாய் மானியம் தருவதற்கு கார் வெச்சிருக்கியா, கப்பல் வெச்சிருக்கியா என்று கேட்கும் அரசு சாராயக்கடை மல்லையாவுக்கு 20 ஆயிரம் கோடி சும்மா கொடுத்ததே. கார்ப்பரேட்டுக்கு வருமான வரியை 30லிருந்து 25 சதவீதமாக, 5 சதவீதம் குறைச்சதே. 5 சதவீதம் குறைச்சா என்ன பெரிசா போய்டுதுன்றீங்களா ? ஒன்னுமில்லை வருஷத்துக்கு சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் டாட்டா, அம்பானி, விப்ரோ போன்ற ஏழை கார்ப்பரேட்டுகளுக்கு ‘சும்மா’ மானியம் குடுத்த மாதிரி போகுதே. அதெல்லாம் மானியம் இல்லியா ? என்னமோ போங்க.

Related Images: