2011-ல் ஃப்ரெஞ்ச் மொழியில், ஃப்ரெடெரிக் ஜார்டின் இயக்கத்தில் வெளியான `ஸ்லீப்லெஸ் நைட்ஸ்` படத்தின் அப்பட்டமான தமிழ் வடிவமே `தூங்காவனம்`. டைட்டில் கார்டில் இதைப்போடுகிறார்கள் எனினும், அதைப் படிக்க ஒரு நொடி வாய்ப்பு கூட தராமல் சட்டென மறைந்துவிடும்படி ஓட்டப்படுவதால் இத்தகவலை இங்கே பதிவது அவசியமாகிறது.

தன் பட இயக்குநர்களை கமல் எப்போதுமே இரண்டு வகையாகத்தேர்ந்தெடுப்பார். முதல் இனம் கமல் சொன்னாலே கேட்காமல் சுயமாக இயக்கும் தேர்ந்த புத்திசாலிகள். இரண்டாம் இனம் கமல் என்ன சொன்னாலும் தலையாட்டும் தஞ்சாவூர் பொம்மைகள். `தூங்காவனம்` இயக்குநர் இதில் ரெண்டாம் இனம். ஆனாலும் ஒரு பரபர திரைக்கதையின் விறுவிறுப்பை அப்படியே தமிழ்ப்படுத்தியதில் கமலுக்கும் ராஜேஷுக்கும் சரிபாதி சபாஷ்.

தூங்காவனத்தின் ஒரிஜினல் பார்த்தவர்கள் கதை பற்றி அடுத்து வருகிற இந்த பெரும் பாராவை ஜம்ப் பண்ணிவிட்டு அடுத்த பத்திகளுக்கு ஷிப்ட் ஆகலாம்.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவை மய்யமாகக் கொண்ட சப்ஜெக் இது. டிபார்ட்மெண்டில் இருக்கும் கறுப்பு ஆடு ஒன்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் கமல் ஒரு பெரும் போதைப்பொருள் கடத்தலைக் கண்டுபிடித்து, அதைத் தன் வசமாக்குகிறார். அதே பொருளை அடைய நினைக்கும் பிரகாஷ்ராஜ் கமலின் மகனைக் கடத்திவைத்துக்கொண்டு, ப்ளாக்மெயில் செய்ய, இன்னொரு பக்கம் அந்த போதைப்பொருளைக் கைப்பற்ற கிஷோர் கிறுக்குப்பிடித்து அலைய,அவருடன் சக அதிகாரியாக த்ரிஷா திரிய, இன்னொரு பக்கத்துக்கு அடுத்த பக்கம் சம்பத் அதே பொருளுக்கு அலைய, அன்று காலை நடந்த விபத்தில் கத்திக்குத்து வாங்கிய கமல் வயிற்றில் ரத்தம் வழிய வழிய, கேளிக்கை விடுதியில் வில்லன்களிடமிருந்து தப்பிப்பதற்காக எதேச்சையாக சிக்கும் மதுஷாலினியின் உதட்டைக் கவ்வி சுவைத்தபடி களேபரம் செய்ய, பரபரவென ரத்தமும் முத்தமுமாக நகர்கிறது.

கதைத்தேர்வுக்கு அடுத்த படியாக படத்தின் ஆகப்பெரிய பலம் நடிகர்கள். பிரகாஷ்ராஜில் துவங்கி யூகிசேது வரை அனைவருமே பின்னிப்பெடல் எடுக்கிறார்கள்.

ஷானு ஜான் வர்கீஸின் நேர்த்தியான ஒளிப்பதிவும், ஜிப்ரானின் பின்னணி இசையும் கச்சிதம்.
கமலுக்கும் த்ரிஷாவுக்கு இடையில் நடக்கும் மோதல் காட்சியில் கமல்… நீங்க நல்லவரா கெட்டவரா என்ற சந்தேகம் மீண்டும் வந்துபோகிறது.

இந்தப்படம் `வேதாளம்` அளவுக்கு வெற்றியில்லை என்ற ஒருகருத்து ரிலீஸான முதல் காட்சியிலிருந்தே பரப்பப்பட்டு வருகிறது. `குணா` குருதிப்புனல்` போன்ற சில படங்கள் சரியாக ஓடாவிட்டாலும் கமலுக்கு காலங்கடந்தும் பெயரை நிலைநிறுத்தும். அப்படிப்பட்ட தரமான படைப்பு `தூங்காவனம்`.

கமல் ரசிகர்கள் மட்டுமல்ல எல்லோரும் பார்த்தே தீரணும்.

Related Images: