‘ஜெமினி’, ‘சம்திங் சம்திங்’, ‘வேல்’, ‘ஆறு’, ‘பாபாநாசம்’ உட்பட 30-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்தவர் கலாபவன் மணி. கேரளாவைச் சேர்ந்த இவர், மலையாளப் படங்களில் சிறிய வேடங்களில் நடித்து பிரபலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தேசிய விருது, கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருது என பல விருதுகளை பெற்றிருக்கிறார்.

45 வயதான கலாபவன் மணிக்கு நுரையீரல் மற்றும் சிறுநீரக நோய் இருந்து வந்தது. அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால், இரு தினங்களுக்கு முன் கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி கலாபவன் மணி நேற்று இரவு 7.15 மணிக்கு மரணம் அடைந்தார். பின்னர் அவரது உடல், ஆஸ்பத்திரியில் இருந்து சாலக்குடியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு கலாபவன் மணியின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்களும், திரையுலக பிரமுகர்களும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். கலாபவன் மணியின் மரணம் குறித்து திரையுலகினர் அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர். அவரது இறுதிச்சடங்கு கேரளாவில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.

Related Images: