தமிழ் சினிமா உலகின் தகவல் களஞ்சியம் என்று அழைக்கப்பட்ட பிலிம் நியூஸ் ஆனந்தன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 88. தமிழ்சினிமா துவங்கிய காலம் முதல் இன்று வரை வெளிவந்த படங்கள் குறித்த அத்தனை தகவல்களையும் சேகரித்து வைத்திருந்த கலைப்பெட்டகம் பிலிம் நியூஸ் ஆனந்தன். இன்று நண்பகல் காலமானார். இவர் பிரபல பத்திரிகை தொடர்பாளர் டைமன்ட் பாபுவின் தகப்பனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரையுலகத்திற்கு அவர் ஆற்றிய பணிகள் கொஞ்நஞ்சமல்ல. தனது தள்ளாத வயதிலும் படங்களை பற்றிய குறிப்புகளுக்காக அவர் ஓடியாடி உழைத்ததை யாராலும் மறந்துவிட முடியாது. தமிழ் திரையுலக வரலாறு பற்றிய அவரது புத்தகத்தை தமிழக அரசே வெளியிட்டிருந்தது. அரசின் சார்பாக கலைமாமணி விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், மற்றும் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கும் நன்கு அறிமுகமானவர் பிலிம்நியூஸ் ஆனந்தன்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க வந்த போது அவரது முதல் பேட்டியை எழுதியவர் என்பது மட்டுமல்ல, சிவாஜிக்கும் அவரது குடும்பத்திற்கும் மிக நெருக்கமாக இருந்தவர் இவர். திரைப்படங்களுக்கு மக்கள் தொடர்பாளர் என்ற பணியையே புதிதாக துவங்கி அறிமுகப்படுத்தியவரும் பிலிம்நியூஸ் ஆனந்தன்தான். RIP

Related Images: