சில படங்கள் கதை விவாத லெவலிலேயே சுமாராக வந்தால் போதும் என்கிற முடிவோடு, அதிகம் மெனக்கெடாமல் தப்பித்தவறி புதுசாக எதுவும் சொல்லிவிடாமல் வெகு ஜாக்கிரதையோடு துவங்கப்படும். சமீபத்திய சிவகார்த்திகேயன் வகையறா படங்கள் இவ்வழியே செம்மையாக பயணம் செய்து வருகின்றன.

கொஞ்சம் காதல், கொஞ்சம் காமெடி, இன்னும் கொஞ்சமே கொஞ்சமாக கருத்து இருந்தால் போதும் என்கிற உறுதியான முடிவு அவர்களுடையது.

விமல், சூரி, அஞ்சலி நடிக்க, அறிமுக இயக்குநர்  ராஜசேகர் இயக்கியிருக்கும் ‘மாப்ள சிங்கம்’ மேற்படி வகையறாவில் கச்சிதமாக அடங்குகிறது.

பல வருடங்களாக தேர் இழுக்கப்படாமல் பஞ்சாயத்தில் இருக்கும் ஒரு கிராமம். சாதி வெறி தலைவிரித்தாடுகிறது. நாயகன் விமலே காதலுக்கு எதிராக கட்டைப் பஞ்சாயத்து பண்ணுகிற பார்ட்டி. அப்படிப்பட்டவர் ஒரு கட்டத்தில் வேறு சாதிப்பெண்ணான அஞ்சலியுடன் காதல் ஜோதியில் கலக்க வேண்டும். ஊரில் குழப்பம் விளைவித்து அவர் அஞ்சலியைக் கரம் பிடித்து கிளைமாக்ஸ் சுபமாக முடியவேண்டும். அதுதானே கதை என்று நீங்கள் யூகிக்க முதல் ரீலே போதும்.

இந்தக் கதையில் கொஞ்சம் கிராமத்து அரசியல் சேர்த்து அதற்கு மராமத்து பார்த்து கடைசியில் தேரை இழுத்து திருவிழாவை நடத்தி சுபம் போடுகிறார்கள்.

ஏறத்தாழ இடைவேளைக்கு கொஞ்சம் முன்னால்தான் அஞ்சலி எண்ட்ரி தருகிறார் என்பதைத்தாண்டி இயக்குநர் மீது பெரிய குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்சினிமா பார்த்த அத்தனை கிராமியப் படக் காட்சிகளிலிருந்தும் வஞ்சகமில்லாமல் காட்சிகளை எடுத்துக் கையாண்டிருக்கிறார்.

அஞ்சலிக்கு நடிக்க எப்போதும் போல் கிஞ்சித்தும் வாய்ப்பு இல்லை எனினும், இன்னும் கொஞ்சம் சதை போட்டு, அழகிய ஆண்டிகள் பட்டியலை நோக்கிப் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறாரோ என்று கவலை கொள்ளாமல் இருக்கமுடியவில்லை.

விமல்,சூரி காம்பினேசனில் பாஸ்போர்ட் தொலைந்து போன ஒரு ஃபாரின் பார்ட்டியின் கூட்டு கலகலப்புக்கு இன்னும் கூடுதலாய் உப்பு புளி சேர்க்கிறது.

இசை ரகுநந்தன். எல்லாமே எங்கேயோ எப்போதோ கேட்டமாதிரி இருப்பது அவர் குத்தமா, நம் குத்தமா,…யாரைக் குத்தம் சொல்ல?

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்றவை கிராமத்துக் கதைக்கு இவ்வளவு இருந்தால் போதும் என்று ஒரு முடிவோடு இருந்திருக்கிறார்கள் போலும். அது எவ்வளவு என்று பார்த்து அனுபவித்து பட்டுக்கொள்ளுங்கள்.

‘மாப்ள சிங்கம்’ வருத்தப்படவைக்கும் சங்கம்.

Related Images: