தமிழில் பாடினால் இரட்டிப்பு மகிழ்ச்சி – மடோனா செபாஸ்டின்

மலையாளத்தில் தான் நடித்த முதல் ‘பிரேமம்’ தந்த பிரமாண்ட வெற்றியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளிலும் பிஸியான நடிகையாகிவிட்டார் மடோனா செபாஸ்டின்.

அவரிடம் அவரது சமீபத்திய தமிழ்ப் பிரவேசம் பற்றி உரையாடியபோது ..

உங்களது இளவயது வாழ்க்கை பற்றி சொல்லுங்கள்.

கேரளாவில் எர்ணாகுளத்தில் தான் நான் பிறந்தேன். 2வது படிக்கும்போதிருந்தே வீட்டில் பாட்டு, டான்ஸ் என்று அனுப்பியதில் பரதநாட்டியம், கரநாடக இசை, மேற்கத்திய இசை என்று இசையோடே என் சிறு வயது வாழ்க்கை இணைந்துவிட்டது. ஒரு பிரபல சேனலின் நேரடி நிகழ்ச்சியில் பாட ஆரம்பித்து, மேடையில் பாட வாய்ப்புக்கள் பெருகி. ஆல்பங்கள், என்று நான் மிக விரும்பிய பாட்டினாலும் இசையாலும் இதோ சினிமாவுக்கு வந்துவிட்டேன்.

சினிமா பிரவேசம் பற்றி எப்படி உணர்கிறீர்கள்.

மலையாளத்தில் ‘பிரேமம்’ பட வாய்ப்பு முதலில் வந்தபோது சாதாரணமாகத் தான் ஒப்புக் கொண்டேன். படம் இவ்வளவு பெரிய வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. அதைத் தொடர்ந்து தமிழில் ‘காதலும் கடந்து போகும்’ ல் வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு தமிழில் நல்ல அறிமுகமாய் அமைந்திருக்கிறது. இது போக தெலுங்கிலும், மலையாளத்திலும் படங்கள் நடித்து வருகிறேன். சந்தோஷமாய் இருக்கிறது.

பிரமேம் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க விரும்பவில்லையா ?

மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற படம். அதன் கதையம்சமும் சிறப்பானது. அதை தமிழுக்கு அப்படியே தருவது எளிதான விஷயம் இல்லை தான். விஜய் சேதுபதியும், நயன்தாராவும் படத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். இந்தப் பாத்திரத் தேர்வுகளில் எனக்கு வேறு கருத்து இருக்கிறது. இதன் தெலுங்கு ரீமேக்கில் நான் தான் நடித்து வருகிறேன். தமிழில் நான் மலையாளத்தில் செய்ததை விடவும் திறமையாகச் செய்ய நிறையப் பேரால் முடியும் என்பதுவும் உண்மை. .

இசையார்வம் இனியும் தொடருமா ? இல்லை நடிப்போடு சரியா ?

மலையாளத்தில் ஆல்பங்களில் பாட ஆரம்பித்தேன். நிறைய மலையாளப் படங்களில் மிக அருமையான பாடல்களை பாடும் வாய்ப்பு பின்பு கிடைத்தது.நான் பாடிய சோட்டானிக்கரை அம்மன் பாடல்கள் இன்னும் மலையாளத்தில் பிரபலம். தமிழ், தெலுங்கிலும் வாயப்பு கிடைத்தால் கண்டிப்பாகப் பாடுவேன். ஏனென்றால் பாட்டு தான் என்னை நடிகையாக்கியது.

தமிழில் யார் கூட நடிக்க விரும்புகிறீர்கள் ?

தமிழ்ப் படங்கள் நான் நிறையப் பார்த்ததில்லை. நான் பார்த்த வரை எனக்குப் பிடித்த நடிகர்களான விக்ரம், சூர்யா, தனுஷ் உடன் நடிக்க ஆர்வமாயிருக்கிறது.