நடிகர் சத்யராஜின் வாரிசு சிபி திரைத்துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே, கலை வெறிகொண்டு சினிமாவில் நடித்தே தீருவேன் என்று இருந்தவர் அவரது மகள் திவ்யா.
ஆரம்பத்தில் அவரது ஆசைக்கு அணைபோட்ட சத்யராஜ், பின்னர் பிடிவாதத்தை சற்றே தளர்த்தி, ’யாரு கிட்டயும் நான் சிபாரிசு பண்ண மாட்டேன். முடிஞ்சா நீயே சான்ஸ் புடிச்சி நடிச்சிப்பாரு’ என்று தண்ணி தெளித்து அனுப்பி விட்டார்.
தோற்றத்தில் இளம் வயது சத்யராஜ் போலவே காட்சி அளித்த திவ்யா, அந்த சமயம் பல கம்பெனிகளில், படி ஏறி இறங்கியும் ஏனோ ஒரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை.
அவர் எந்த கம்பெனிக்கு, யாரைத்தேடி சான்ஸ் கேட்கப்போகிறார் என்பதை தினமும் தெரிந்துகொண்டு, சான்ஸ் தந்துவிடாதபடி சத்யராஜே பார்த்துக்கொண்டார் என்ற ஒரு செய்தியும் உண்டு.
பின்னர் ஒருகட்டத்தில் இதைத்தெரிந்துகொண்டோ என்னவோ திவ்யா நடிப்பு வாய்ப்பு தேடுவதை நிறுத்திக்கொண்டார்.
ஆனால் படத்தில் நடிக்க வேண்டுமென்ற அவரது ஆசை,பல வருடங்களுக்குப் பிறகு இப்போது ஒரு டாகுமெண்டரி சினிமா மூலம் அதுவும் ஆங்கிலப்படத்தின் மூலம் நிறைவேறியிருக்கிறது.
சர்வதேச திரைப்பட விழாக்களை குறிவைத்து எடுக்கப்பட்ட, சுமார் 45 நிமிடங்கள் ஓடும் அந்த டாகுமெண்டரி படத்தை, மும்பை தியேட்டர் வட்டாரங்களில் மிகவும் புகழ் பெற்றவரான ஷிராஸி இயக்கியுள்ளார்.
’’நடிகை கொங்கனா சென் –ஐ மய்யப்பாத்திரமாக வைத்துக்கொண்டு, முதலில் இந்தப்படத்தை இயக்க திட்டமிட்டிருந்தேன். அவர் பிஸியாக இருந்ததால், அந்தப்பாத்திரத்துக்கு வேறு ஒருவரை தேடிக்கொண்டிருந்தபோதுதான், நான் தற்செயலாக திவயாவை சந்தித்தேன்.குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய கதை இது.
சில குழந்தைத்தொழிலாளர்கள் சம்பந்தமான தொண்டு நிறுவனங்களில் திவ்யா பணியாற்றியிருப்பதை அறிந்த போது, எனது கதாபாத்திரத்துக்கு திவ்யாதான் பொருத்தமாக இருப்பார் என்று தோணியது.எனது திரைப்படத்தில் நடிக்க சம்மதமா என்று கேட்டவுடன் ஒப்புக்கொண்டார். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும்போது, கண்டிப்பாக படமும் திவயாவின் நடிப்பும் பெரிதும் பேசப்படும்.’’ என்கிறார் ஷிராஸி.
இந்தப்படத்தை சத்யராஜ் சாருக்கு காட்டுவீங்களா?