ஏற்கனவே ஏ.வெங்கடேஷ் இயக்கிய ‘சிங்கக்குட்டி’ படத்தில் நடித்து, கர்ஜிக்க முடியாமல் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சிவாஜியின் பேரன் [ராம்குமார் வாரிசு] சிவாஜிதேவ், இப்போது. ’ புதுமுகங்கள் தேவை’ என்ற காமெடி கதையுடன் களம் இறங்கியிருக்கிறார்.
முழுக்க முழுக்க சினிமாவின் நடப்பை நக்கலடிக்கும் இப்படத்தில் சிவாஜி தேவ், இயக்குனராகவும், பிரபல ஒளிப்பதிவாளர் ராஜேஷ்யாதவ் தயாரிப்பாளராகவும் நடிக்கிறார்கள்.
கையில் ஒரு பைசா கூட இல்லாமல் படம் எடுக்க முயலும் இவர்கள், சினிமாவில் என்னவிதமான சீட்டிங்குகள் நடக்கின்றன என்பதை அம்பலப்படுத்தி, அதே பாணியில் ஒரு படத்தை எடுத்து முடிப்பதுதான் கதை. இதை அவர்கள் திரையிட்ட பாடல்களிலும் கூட அப்பட்டமாக காணமுடிந்தது.
மேற்படி தகவல் தெரியாமல் நேற்று பிரசாத் லேப் தியேட்டருக்கு வந்திருந்த இருவருக்கு அதிர்ச்சி. முதல் அதிர்ச்சியாளர் சேரன், ட்ரெயிலர் பாடல்களை பார்த்த கையோடு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் எஸ்கேப் ஆகிவிட ,அடுத்த அதிர்ச்சியாளர் எடிட்டர் மோகன், கைக்கு மைக்கு வந்தபோது தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார். [இவரை சமீபகாலமாக பல விழாக்களில் மைக்கும் கையுமாக பார்க்க நேருவதால் ,விரைவில் மைக்’ மோகன் பட்டம் இவருக்கு கைமாறலாம் என்று ஒரு செய்தி அடிபடுகிறது ]
‘’கிருஷ்ணன் பஞ்சு எவ்வளவு எவ்வளவு பெரிய டைரக்டர் ? ஆனா ‘சர்வ சுந்தரம்’ படத்துல பேக் புரஜக்ஷன் வச்சி சினிமா தொழிலை வெளிச்சம் போட்டு காட்டினாங்கங்கிற ஒரே காரணத்துக்காக அவங்கள நான் வெறுத்தேன். ஏன்னா அதுக்கப்புறம் ஒரிஜினலா எடுத்த பல சேஸ்களைக்கூட மக்கள் கிண்டலா பேக் புரஜக்ஷன்ல எடுத்ததுப்பான்னு பேச ஆரம்பிச்சாங்க. அதனால உங்க எல்லாரையும் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கிறேன். நமக்கு சோறு போடுற சினிமாவை தயவுசெஞ்சி கிண்டல் பண்ணி படம் எடுக்காதீங்க.’’ என்று மேடையில் இருந்த அத்தனை பேரையும் தர்மசங்கடப்படுத்திக்கொண்டிருந்தார் எடிட்டர் மோகன்.
‘புதுமுகங்கள் தேவை’ன்னு படம் எடுத்துட்டு ரொம்ப பழைய முகங்கள கூப்பிட்டு பேசச்சொன்னீங்கன்னா இப்பிடித்தான் ஏதாவது ஏடாகூடமா பேசி ஃபங்சன் மூடையே ஸ்பாயில் பண்ணிருவாங்க’ –பின் வரிசையில் கமெண்ட் அடித்துக்கொண்டிருந்தார் படத்தில் வேலை செய்த உதவி இயக்குனர் ஒருவர்.