இன்று ஆடியோ ரிலீஸ் செய்யப்பட்டு, இன்னும் ஓரிரு வாரங்களில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருக்கும் மிஷ்கின் – ஜீவா காம்பினேஷனின் ‘முகமூடி’ ,அசலுக்கு பிசினஸ் ஆவதற்கே ஏற்கனவே முக்கிக்கொண்டிருக்கும் வேளையில், தியேட்டர் உரிமையாளர்களால் புதிய பூகம்பம் ஒன்று கிளம்பிக்கொண்டிருக்கிறது.
‘மொக்பா த ஹார்பர்’ என்ற 30 ரூபாய் டிவி.டி.யை சுட்டு மிஷ்கின் இயக்கியிருக்கும் ‘முகமூடி’ வழக்கம் போலவே பெரும் பட்ஜெட் படமாக மாறி, தயாரிப்பாளர்களை முகமூடிக்குப்பதில் முக்காடு அணியும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது. ஆனால் ’கோ.வி ஆனந்துக்கு பெரும் பேர் சம்பாதித்து தந்த, ‘ கோ’ படத்தின் ஒரு வெற்றிமட்டும் ஜீவாவின் இந்தப்படத்தை அவ்வளவு பெரிய பிசினஸ் பண்ண உதவவில்லை
இது ஒருபுறமிருக்க, ஜீவாவின் தந்தை ஆர்.பி.சவுத்ரி ஏற்கனவே தயாரித்து வெளியிட்டிருந்த ‘சிங்கம் புலி’ ரவுத்திரம்’ போன்ற படங்களால் பெருத்த நஷ்டத்துக்கு ஆளாகியிருந்த தியேட்டர் உரிமையாளர்கள், அந்தப்படங்களுக்காக தாங்கள் செலுத்தியிருந்த தியேட்டர் அட்வான்சை திரும்பக்கேட்டு பலமுறை சவுத்ரி அலுவலகத்துக்கு காவடி எடுத்து வந்தனர். அப்போதெல்லாம் சவுத்திரி அவர்களை சற்றும் பொருட்படுத்தவில்லை.
இதனால் சமயம் பார்த்து காத்திருந்த தியேட்டர் உரிமையாளர்கள் சவுத்ரியின் மகன் ஜீவா நடித்த ‘முகமூடி’ படத்துக்கு ரெட்’ அடிக்கும்படி தங்கள் சங்கத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
தமிழில் இப்படிப்பட்ட சிக்கல்கள் எந்த சமயமும் வரக்கூடும் என்று எதிர்பார்த்தே வெவரமாக ‘முகமூடி’யின் தெலுங்கு டப்பிங் உரிமையை மட்டும் வாங்கிக்கொண்டு சைலண்டாகிவிட்டார் சவுத்ரி.
ஸோ இனி , தியேட்டர் உரிமையாளர்கள் பிரச்சினையை தீர்த்து படத்தை நிம்மதியாக ரிலீஸ் பண்ணவேண்டுமானால், வழக்கம்போல படத்தை தயாரித்து முழித்துக்கொண்டிருக்கும் யூ.டி.வி. மோஷன் பிக்ஷர்ஸ் ‘குனிய’ வேண்டியதுதான்.