‘ ஒரு கட்டம் வரைக்கும் தமிழ் சினிமாவுல நம்ம லைஃப் நல்லா போய்க்கிட்டிருந்திச்சி. இப்ப கொஞ்ச நாளா நம்மள கூடிக்கூடி கும்மியடிக்கிறாய்ங்களே?’ – சமீப சில தினங்களாக, தனது உதவியாளர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் கேவி அழுகாத குறையாக கே.வி. ஆனந்த் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி இதுதான்.
திருட்டு டி.வி.டி.யில் சுட்டுவிட்டு, தனது சொந்தக்கதை போல் பீலா விட்டால் மீடியா எந்த அளவுக்கு ரிவீட் அடிக்கும் என்பதற்கு சமீபத்திய அத்தாட்சி ஆனந்த்.
விசயம் அத்தோடு போனதா? ஏற்கனவே ‘மாற்றானுக்கு போட்டியாக அவசர அவசரமாக ரிலீஸுக்கு தயாராகிக்கொண்டிருந்த மாற்றாள்’ ‘சாருலதா’வை சன்.டிவி. சக்ஸேனா வாங்கி ரிலீஸ் செய்யப்போவதாக அறிவித்ததற்கே நொந்து நூடுல்ஸ் ஆகிப்போயிருந்தனர் இந்நிலையில், மேலும் இரண்டு இரட்டையர்கள் களம் இறங்க தயாராகி இருப்பது, ‘மாற்றான்’ கோஷ்டிக்கு சொல்லவொண்ணா துயரத்தை உண்டாக்கி இருக்கிறதாம்.
அதில் முதலாம் இரட்டையர் ‘இருவன்’ என்ற பெயரோடு நேற்றைய தந்தி விளம்பரத்தில் அவதரித்தார். பாண்டிபஜாரில் பாதிவிலைக்கு வாங்கிய ஒரு சட்டையை இரட்டையர்கள் போட்டுக்கொண்டு, ஆளுக்கொரு திசையில் இழுத்துக்கொண்டு நின்றது பார்த்ததும், கே.வி. ஆனந்த் மற்றும் கல்பாத்தி கோஷ்டிகளுக்கு மூச்சு நின்று போனதாம்.
இன்னொரு பக்கம் கே.வி.ஆனந்துக்கு ஆகாத ஒரு பிரபல விநியோகஸ்தர், மலையாளத்தில் 1994-ம் ஆண்டு, இஸ்மாயில் ஹஸன் என்பவர் இயக்கத்தில் வெளிவந்த ‘இரட்டக்கல்’ என்னும் இரட்டையர்களைப் பற்றிய படத்தின் டப்பிங் உரிமையை வாங்க விரைந்திருக்கிறாராம்.
அந்தப்படத்தை வாங்கி தமிழில் டப் செய்து ரெடியாக வைத்திருந்து ‘மாற்றான்’ ரிலீஸுக்கு முந்தின வாரம் ரிலீஸ் பண்ணுவது அவரது திட்டமாம்.
‘அயன்’ மாதிரி ஒரு கலைஞனை இப்பிடி ஆளாளுக்கு அணைகட்டி, ‘கோ’ன்னு அழவச்சீங்கன்னா தமிழுக்கு நல்ல மாற்று சினிமா எப்பிடிங்க கிடைக்கும்.