தற்போது இலங்கை மீடியாக்களில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் கைகுலுக்கும் போஸ்டர் ஒன்று பரபரப்பாக அடிபடுகிறது.
முக்கியமாக சிங்கள மீடியாக்களே இந்த போஸ்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளன.
விஸ்வரூபம் படத்தை வாழ்த்தும் வகையில் இந்த போஸ்டர் திருச்சி பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதாக, இலங்கை சிங்கள மீடியாக்கள் செய்தி
வெளியிட்டு அங்கு சூட்டை கிளப்புகின்றன.
எமது திருச்சி செய்தியாளரை கேட்டபோது, தனது கண்களில் இப்படியொரு போஸ்டர் தட்டுப்படவில்லை என்றார்.
போஸ்டரில் உள்ள கமல்-பிரபாகரன் போட்டோ, கிரிஸ்டல் கிளியராக தெளிவாக உள்ளது. இது எந்தளவுக்கு நிஜமான போஸ்டர் என்று புரியவில்லை. ஆனால், இந்த போஸ்டருக்கு இலங்கை மீடியாவில் அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
போஸ்டர் நிஜமோ, இல்லையோ, விஸ்வரூபம் ரிலீஸின்போது, இலங்கை தியேட்டர் வாசல்களில் சில சிங்கள கட்சிகள் கசமுசா பண்ண இந்த போஸ்டர் உதவலாம் என்பதே எமது சந்தேகம்.
சில வருடங்களுக்கு முன் ஈழப் போரில் தமிழர்கள் லட்சம் பேரைப் படுகொலை செய்து முடித்த கையோடு அதை உலகத்தின் கண்களில் மறைக்கும் வேலையிலும் ஜரூராக இறங்கியது சிங்கள அரசு. FICCI என்கிற அமைப்பின் திரைப்படத் துறையின் தலைவராக அப்போது நம் கமல்ஹாசன் இருந்தார். அவருடைய ஒத்துழைப்போடு இலங்கையில் சர்வதேசப் படவிழாவை கொண்டாடி தமிழ் மக்களின் அழுகைக் குரல்களை அதில் மறைத்து விடலாம் என்று கனவு கண்டது.
அமிதாப்பச்சன், சிங்களத்துப் பெண்ணான நம் ஊரில் கல்லாகட்டிய நடிகை பூஜா, திருத்தணியோடு காவடி தூக்கிவிட்ட அண்ணன் பரத், இத்துடன் ‘கலைச் சேவை’ நடிகைகள் சிலர் என்று பலரும் பங்குபெறச் சென்ற அந்த திரைப்பட விழாவில் கமல்ஹாசனும் கலந்து கொள்வதாக இருந்தார். பின்னர் மே 17 இயக்கம், சீமான் போன்றோரால் தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்புக் குரலால் கமல், அமிதாப் போன்றோர் அதில் கலந்து கொள்ளாமல் பின்வாங்கிவிட்டார்கள்.
இதற்குப் பழி வாங்கும் விதமாக இப்போது கமலின் படம் விஸ்வரூபத்துக்கு எதிர்ப்பு அலையை உருவாக்க சிங்கள மீடியாக்கள் முயல்கின்றன என நம்ப நிறைய இடமிருக்கிறது.
கமலுக்கு தலைக்குமேல் உள்ள பிரச்னைகளுக்குள், இது வேறா? கமல் சார்… சிங்களத்தவர்களை மட்டும் நம்பாதீர்கள்..