டைட்டிலைப்படித்துவிட்டு ஜீ.வி.பிரகாஷுக்கும் சைந்தவிக்கும் இடையில் ஏதோ சங்கடகர சதுர்த்தியோ என்று நினைத்து நிம்மதிப்பெருமூச்சுவிட வேண்டாம்.
கண்ணன் என் காதலன் சினிமா படப்பெயர்தான் சமீபத்தில் சைந்தவி நிகழ்த்திய வித்யாசமான இசை நிகழ்ச்சியின் பெயரும் அதுவே. கண்ணன் மேல் கொண்ட காதலை மீராவாய், ராதாவாய், யசோதையாய் அவர் பாடியது அற்புதமாக இருந்தது. இறை வணக்கமாக ஸ்ரீமன்னரயணாவில் தொடங்கி குறை ஒன்றும் இல்லை என்று முடித்த போது அந்த நிகழ்ச்சியில் குறை ஒன்றும் இல்லை தான். ஒவ்வொரு பாடலின் முன்பும் அதைப் பற்றிய வர்ணனை செல்வி.கிருத்திகா ஷுரஜித் தூய தமிழில் வழங்கியது. நம்மை அந்தக் கால கட்டத்திற்கே அழைத்து சென்று பாடலுடன் ஒன்ற வைத்தது. பெரும்பாலான பாடல்கள் எம்.எஸ். திரையிலும் மேடைகளிலும் பாடியவை. காற்றினிலே, கிரிதர கோபாலா, நந்தபாலா, ஜகதோதாரனாவில் மெலோடியை குழைத்து கொடுத்த அவர், பக குங்குரூ என்ற ஹிந்தி பாட்டிலும் , மறவேனேவிலும் விறுவிறுப்பை காட்டினார். . அவருடைய ஆசை முகத்தை கேட்டவர்க்கு கண்ணன் முகம் மறக்குமா என்ன? உடல் உருக என்று அவர் விருத்தம் பாடிய பொழுது அரங்கமே உருகியது. இவருடன் இசைத்த பக்கவாத்ய கலைஞர்களை பக்காவத்யம் என்று சொன்னால் அது மிகை ஆகாது. கிபோர்ட் இசைகலைஞர் ராம் மற்றும் புல்லாங்குழல் வாசித்த விஷ்ணு விஜய் அவர்களும் ஓஹோ என்று இசைந்து வாசித்தனர். ’மறவேனே’ பாடலில் தனியாவர்த்தனம் வாசித்த ராமகிருஷ்ணனின் மிருதங்கமும் வசந்தின் தபலாவும் பலே பலே. இரண்டு மணி நேரம் கிடைத்த இடைவிடா கொசு கடியையும் மேலே பறந்த விமானங்களின் இரைச்சலையும் மீறி ரசிகர்கள் இறுதி வரை இருந்து ரசித்தது இந்த வித்யாசமான நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பு என்று சொல்லலாம்.
சைந்தவியே சரணம். இந்த மாதிரி கச்சேரிகளை அடிக்கடி தரணும்.