தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசாங்கத்தின் சில நல்ல மனிதர்களால் கொண்டுவரப் பட்டது. அதை கொண்டுவந்த போது பெரிதும் கவலைப்படாத அரசு மக்கள் அச்சட்டத்தை பயன்படுத்தி அரசையே நிறுத்தி வைத்து கேள்விகேட்க ஆரம்பித்த பின்னர் இப்போது அதேஅரசு இச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வழிமுறைகளை தேடிக்கொண்டிருக்கிறது. இந் நிலையில், மக்களுக்கு மிகவும் நெருக்கமான திரைப்படத்தின் மூலம் இச்சட்டத்தைப் பற்றி சொன்னால் இன்னும் எளிதில் அது அவர்களை சென்றடையும் என்று எண்ணினார் இயக்குனரும் தயாரிப்பாளருமான மனுக்கண்ணன். அதன் விளைவே
இந்தப் படம். படத்தைப் பற்றி அவர் கூறியதாவது,
உங்களது திரையுலக வாழ்க்கை எப்படி ஆரம்பித்தது…?
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பும் மேலாண்மை முதுகலைப் படிப்பும் முடித்து விட்டு துபாயில் வேலைபார்த்துக் கொண்டிருந்தேன்… நண்பர் ஒருவர் மூலம் பெருமான் என்கிற படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானேன்…
இரண்டாவது படத்திலேயே இயக்குனர் அவதாரம் எப்படி..?
பெருமான் படம் எதிர்பார்த்த வெற்றியினைப் பெறாத நிலையில், மறுபடியும் துபாய்க்குச் சென்று விடலாமா என்கிற சிந்தனையில் தான் இருந்தேன்… அப்படி ஒரு சூழ் நிலையில் ஒரு (தினமலர்) நாளிதழில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி தனது ஊரில் ஆக்ரமிப்பால் காணாமல் போன காவிரி ஆற்றின் ஒரு பகுதியை மீட்டெடுத்தவரும் அதே சட்டத்தைப் பயன்படுத்தி ஊழல் அரசு இயந்திரங்களுக்குக் கிடுக்கிப் பிடி போட்டு வருபவருமான சீனிவாசன் என்பவரைப் பற்றிய செய்தியினைப் படிக்க நேர்ந்தது…
அந்த நொடியில் என் மூளைக்குள் ஒரு பொறி தட்டியது… துபாய்க்குச் சென்று மறுபடியும் வேலை பார்க்க ஆரம்பித்தால் நானும் எனது குடும்பமும் மட்டுமே நன்றாக இருக்க முடியும்… ஆனால் சீனிவாசன் போன்ற நிஜக்கதா நாயகர்களை மையமாக வைத்து ஒரு நல்ல படம் எடுக்கும் பட்சத்தில் தகவல் அறியும் சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி ஒட்டு மொத்த சமுதாயத்திற்கே முன்னேற்றமான சூழ்நிலையை ஏற்படுத்த முடியும் என்று தோன்றியது… உடனே அங்குசம் படத்தினை ஆரம்பித்து விட்டேன்… எனது மேலாண்மை படிப்பு முடித்தவுடன் துபாயில் இருக்கும் நியூயார்க் பிலிம் இன்ஸ்ட்டியூட்டிலும் மும்பை இயக்குனர் பிரிவில் படித்த டிப்ளமோ பட்டங்கள் மற்றும் எனது முந்தைய படத்தில் நான் கற்றுக் கொண்ட அனுபவமும் சேர்ந்து நானே இயக்குவது என்கிற முடிவிற்கும் வந்தேன்… அப்படி ஆரம்பிக்கப் பட்டது தான் அங்குசம் படம்.
நிஜக்கதை, அதுவும் அரசியல் வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அங்குசம் படத்தை எடுக்கிறீர்களே, அதிகாரிகள் மட்டத்திலிருந்து ஏதேனும் பிரச்சினைகள் வந்ததா..?
சீனிவாசனையும் ஊழல் அரசியல்வாதிகள் அதிகாரிகளுக்கு எதிரான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி அவர் விடும் அஸ்திரங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி தான் இந்த அங்குசம் படத்தை எடுத்திருக்கிறோம்… என்றாலும், எந்த ஒரு அரசியல் வாதியையோ அல்லது அதிகாரியையோ நேரிடையாகக் குறிப்பிடாமல் முழுக்க முழுக்க கற்பனையான கதாபாத்திரங்களை உருவாக்கி திரைக்கதை அமைத்திருக்கிறோம்… சொல்லப்போனால் ஊழல் புகாரில் மாட்டிக் கொள்ளும் மாவட்ட ஆட்சியாளராக நடித்திருப்பதே நான் தான்.
இந்தப் படத்தின் மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு பரவுமா?
அங்குசம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விழாவாக சட்ட வல்லுனர்கள் ஊழல் எதிர்ப்பாளர்கள் ஆகியோரை அழைத்து நடத்தியிருந்தோம்… அதில் சீனிவாசனையும் அழைத்து கெளரவப்படுத்தினோம்… அந்த விழாவில் தனது தொகுதி நிலவரங்களையும், ஆட்சியாளரின் பாராமுகப்போக்கையும் கொஞ்சம் காட்டமாகவே சுட்டிக் காட்டினார்… அது வரை தனி நபராகப் போராடிக் கொண்டிருந்தவரின் பேச்சு அடுத்த நாளே அனைத்து ஊடகங்களிலும் பிரசுரமாக, இணையத்தளங்களில் அவரது பேச்சு முழுவதும் அப்படியே ஒளிபரப்பப்பட சம்பந்தப்பட்ட ஆட்சியாளர் அவரை அழைத்து அவரது கவனத்திற்கு வராமல் நடந்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டதுடன், சீனிவாசனின் கேள்விகளுக்கு உரிய தகவல்களை வழங்கியதுடன்…ஊழலுக்குக் காரணமாக இருந்தவர்கள் மீது துறைரீதியிலான நடவடிக்கைகளும் எடுக்க உத்திரவாதம் அளித்திருக்கிறார்…
இந்தச் சம்பவம் எங்களுக்கு பாதி வெற்றியைக் கொடுத்து விட்டதாகவே கருதுகிறோம்…
படம் வெளியான பிறகு நிறைய சீனிவாசன்கள் தோன்றி தகவல் அறியும் சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சி ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டால் அதுவே எங்களுக்குக் கிடைக்கப்போகும் மிகப்பெரிய வெற்றி …
நேர்மையான அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்… பொது மக்கள் அவர்களை எளிதில் அணுகமுடியாதவாறு சிலர் அரண் அமைத்துத் தங்களது சுயநலன்களுக்காக ஊழல்கள் நடப்பதற்கு வழிவகை செய்துவிடுகிறார்கள்…இந்தச் சம்பவம் நிச்சயம் பொதுமக்களின் ஊழலுக்கு எதிரான போரில் அவர்களின் ஆற்றலை அதிகரித்துத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும்…
வணிக சினிமாக்களின் ஆதிக்கம் நிறைந்த இன்றைய தமிழ்சினிமாவில் இப்படி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மையப்படுத்தி படம் எடுத்திருக்கிறீர்களே!
ஆம்… ஒரு திரைப்படம் வணிக நோக்கிலும் வெற்றி பெறுவது அவசியம்… அங்குசம் படத்திற்குத் திரைக்கதை அமைக்கும் போதே இந்தப் படம் ஒரு ஆவணப்படமாக வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாகச் செயல்பட்டுத் திரைக்கதை அமைத்தோம்… அங்குசம் படத்தில் வழக்கமான வணிக சினிமாக்களில் வரும் காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை என்று அத்துனை அம்சங்களும் இருக்கின்றன… மருந்தைக்கூட தேனில் குழைத்து சாப்பிட்டுப் பழகியிருப்பவர்கள் தானே நாம்…
படம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கையிலெடுத்து ஊழல் அதிகாரிகளுக்குச் சிம்மசொப்பனமாக விளங்கும் கதா நாயகன் , அவனது போராட்டத்திற்குத் தோள் கொடுக்கும் கதாநாயகி ஜெயந்தி குஹா மற்றும் அவர்களது நண்பர்கள் என்றுஇளமைத் துடிப்புடன் விறுவிறுப்பாகக் கதை நகரும்…
பாடல்களைப் பற்றி…
ஸ்ரீகாந்த் தேவாவின் அற்புதமான இசையில், மொத்தம் 6 பாடல்கள்… 5 பாடல்களைப் பாடலாசிரியர் திரவியமும் வா மாப்ளே … என்ற ஒரு படாலை பாடலாசிரியர் அண்ணாமலையும் எழுதியிருக்கிறார்கள்… திரவியம் எழுதிய தோழா… நூற்றாண்டின் தொடக்கம் என்கிற பாடல் கேட்கும் ஒவ்வொருவர் மனதிலும் தன்னம்பிக்கை ஊற்றைப் பெருக்கெடுக்கச் செய்வதாக பல நண்பர்கள் சொல்கிறார்கள்… நாட்டிற்காகப் போராடியத் தலைவர்களை அந்தப் பாடல் காட்சியில் காட்சிப்படுத்தியிருக்கிறோம்… திரையில் பார்த்து ரசிப்பவர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும்…
இது தவிர ஓசோன் படலம் என்கிற பாடலில் கதாநாயகன் ஸ்கந்தாவுடன் மும்பையைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் டோலி ஜெயின் வடிவமைத்த 10 க்கும் மேற்பட்ட சேலைகளைக் கட்டிக் கொண்டு கதாநாயகி ஜெயந்தி குஹா ஆடுவதாகக் காட்டியிருக்கிறோம்… பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் மிகவும் பிடிக்கும் விதமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறோம்…
இணைத் தயாரிப்பாளர் மற்றும் எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளர் திருக்குமரன் கூறுகையில், “63 நாட்கள் தான் மொத்தப் படப்பிடிப்பு என்றாலும்… கடந்த 2 வருடங்களாக உதவி இயக்குனர்களுக்கும் படத்தில் சம்பந்தப் பட்ட மற்ற தொழில் நுட்பக்கலைஞர்களுக்கும் மாதா மாதம் சம்பளம் கொடுத்த ஒரே தயாரிப்பாளர் மனுக்கண்ணன் தான்… இவரைப் போன்ற தயாரிப்பாளர்கள் தமிழ்சினிமாவிற்குக் கிடைத்த பெரிய வரம் என்றே சொல்லலாம்..” என்றார்.
அங்குசம் திரைப்படம் வரும் அக்டோபர் மாதத்தில் திரைக்கு வருவதற்கான ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்து வருகிறார் தயாரிப்பாளர்- இயக்குனர் மனுக்கண்ணன். நல்ல விஷயங்களாக நிறைய தென்படுகின்றன. படமும் அதுபோல வித்தியாசமாய் அமையும் என்று எதிர்பார்ப்போம்.