வரம் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான “இருக்கு ஆனா இல்ல” என்ற புதிய படத்தின் இசை வெளியீட்டு விழா குவைத் கேம்ப்ரிட்ஜ் பள்ளி அரங்கில் நவம்பர் 22 மாலை ஆறு மணிக்கு அரங்கு நிறைந்த ரசிகர்களின் மகிழ்ச்சியான ஆரவாரத்துடன் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைப்பெற்றது. குவைத் வாழ் தமிழ் நண்பர்கள் சத்யா நாகராஜன், செல்லதுரை, சாமி வெங்கட், பாலாமணி ஜெயபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்து
இருக்கும் முதல் படம் இது. தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கிய நிகழ்ச்சியை தொடர்ந்து தயாரிப்பாளர்களைப் பற்றிய சிறு அறிமுகம் புதுமையான முறையில் காணொளியாக ஒளிப்பரப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து வரம் கிரியேஷன்ஸ் எப்படி உருவானது என்பதை மிகவும் கச்சிதமாகவும் சுருக்கமாகவும் சத்யா நாகராஜன் விளக்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கென்றே படத்தில் பணியாற்றிய முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சென்னையிலிருந்து வந்திருந்தனர். பிரபல தொகுப்பாளினி பிரியதர்ஷினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவருடன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’ புகழ் ஆதவன் இணைந்துக் கொண்டார். இந்தப் படத்தில் பணியாற்றியுள்ள இயக்குனர் சரவணன் தொடங்கி கதாநாயகன் விவாந்த், நாயகி மனீஷாஸ்ரீ, ஆதவன், இசையமைப்பாளர் ஷமீர், என பலரும் புதுமுகங்கள். நடிகர் ஆதவன் ஒவ்வொருவரையும் மேடைக்கு அழைத்து மிகவும் வித்தியாசமான முறையில் நகைச்சுவை இழையோட அறிமுகப்படுத்தினார்.
முக்கிய விருந்தாளியாக வந்திருந்து இந்நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றவர் எஸ்.ஆர்.எம். பல்கலை கழக நிறுவனர் பாரிவேந்தர். பாடல்கள் அடங்கிய ஒலிப்பேழையை அவர் வெளியிட, குவைத் தொழிலதிபர் முஹம்மது ஹுசேன் பெற்றுக்கொண்டார்.
படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக நிகழ்ச்சியின் இடையிடையே மிகவும் புதுமையான முறையில் காணொளியாக அறிமுகப்படுத்தப்பட்டன. அறிமுக இளம் இசையமைப்பாளர் ஷமீருக்கு இது முதல் படம். பாடகர் தீபக் ‘இது என்ன’ பாடலை மேடையில் பாடினார்.. ”தொல்ல தோளிலே” பாடலுக்கு கதாநாயகன் விவாந்த், நாயகிகள் ஈடன், மனிஷாஸ்ரீ ஆகியோர் நடனம் ஆடினர். சில பாடல்களை எழுதியிருப்பவர் நவின் கண்ணன். அவருக்கும் இது முதல் படம்.
குவைத் கவிஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பதினைந்து கவிஞர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் எழுதிய பாடல்களில் ஒரு பாடலை தேர்வு செய்து இந்த படத்தில் அந்தப் பாடலுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கின்றனர். “கார்கால மேகம்” என்ற அந்தப் பாடலை எழுதியிருப்பவர் குவைத்தில் பணியாற்றும் செங்கை நிலவன் என்பவர். சில பாடல்களுக்கு ஃப்யூசன் நடன குழுவினர் நடனம் ஆடினர்.