ஈவில் டெட் என்கிற 80களில் வந்த ஆங்கிலப் பேய்ப் படம் அப்போது உலகெங்கும் பரபரப்பாய் ஓடியது. அக்காலத்தில் அப்படத்தை தியேட்டரில் தனியாகப் பார்ப்பவருக்கு ஒரு கார் பரிசு என்று விளம்பரப்படுத்தினார்கள் என்றும் தனியே பார்த்த பலர் ரத்தம் கக்கி செத்துப் போனார்கள் என்பது போன்ற வதந்திகள் பரவிய அளவுக்கு பயங்கரமான பேய்ப்படம் அது.
அப்படத்தை சென்ற வருடத்தில் சுரத்தே இல்லாமல் ரீமேக் செய்து வெளியிட்டார்கள். ஒரிஜினல் படத்தின் கால்வாசிதான் அந்தப் படம். கே டி.வி.யில் இந்த ஆங்கிலப்படங்களை டப் செய்து சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவுப் படமாக போடுகிறார்கள்.
இவையெல்லாம் போக ஈவில் டெட்டை தமிழில் கொஞ்சம் உட்டாலக்கடி மசாலா செய்து நம்ம ஊர் சாத்தான், பூதம் என்கிற உள்ளூர்ப் பேய்களையும் சேர்த்து தமிழில் ’13ஆம் பக்கம் பார்க்க’ என்ற பெ;யரில் தயாரித்து வருகிறார்கள். பழமையான ஒரு புத்தகத்தின் 13ஆம் பக்கத்தில் ஒளிந்திருக்கும் சாத்தான் வெளிவந்து செய்யும் அட்டகாசங்களே படம்.
இப்படத்தில் நடிகை நளினி ஒரு முக்கிய வேடத்தில் பேயோட்டும் சூனியக்காரியாக சுருட்டு பிடித்தபடி நடிக்கிறாராம். ரத்தன் மவுலி, ராம் கார்த்திக் ஸ்ரீபிரியங்கா ஆகிய புதுமுகங்கள் நடிக்கின்றனர். திரைக்கதை எழுதி இயக்குபவர் புகழ்மணி.