தமிழ்ச் சினிமாவில் குறும்பட இயக்குனர்கள் சென்ற ஆண்டில் குறைந்த பட்ஜெட்களில் சாதாரண 5டி கேமராக்களில் விறுவிறுப்பான திரைக்கதையோடு, சினிமா தயாரிப்பு என்பதை பெரியதாய் ஊதிப்பெருக்கிய பெரும் ஸ்டார் நடிகர்கள், சினிமா சங்கங்கள், பெரும் தயாரிப்பாளர்கள் போன்றவர்களால் உண்டான மாயவலையை கிழித்தெறிந்திருக்கிறார்கள் என்பதை உணர்த்தியிருக்கும் மற்றொரு படம். இம்முறை அதை உணர்த்தியிருப்பவர் மாயவலையில் பல கோடிகள் செலவில் ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ என்கிற தோல்விப் படத்தைக் கொடுத்த விஜய் மில்டன்.
புள்ளி, சித்தப்பா, குட்டிமணி, கிட்டு ஆகிய நான்கு விடலைப் பையன்கள் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சுமை தூக்கி வாழும் அனாதைச் சிறுவர்கள். அவர்களின் சம்பாத்தியத்துக்கு வழிகோலும் சுஜாதா என்கிற மார்க்கெட் பெண்மணி அவர்களிடம் பாசமாகவும் இருக்கிறார். இரவு முழுதும் மூட்டை தூக்குதல், பகலில் உறங்கிக் கழித்த்ல், மீன்பாடி வண்டியோட்டும் இமான் அண்ணாச்சி விடும் சிகரெட் புகைவட்டத்தில் தெரியும் ஸ்கூல் சிறுமிகளை சைட் அடித்தல் என்று குடியும் கும்மாளமுமாக ஜாலியாக வாழ்கிறார்கள்.
இருக்க இடம் கூட இல்லாத, அடையாளமே இல்லாத அவர்களுக்கு திடீரென்று தாங்களும் தங்களுக்கென்று ஒரு சிறு அடையாளம் வேண்டுமென்று ஆசை வருகிறது. ஆச்சி சுஜாதா கோயம்பேட்டில் உள்ள சிறுவணிகர்களிடம் மீட்டர் வட்டிக்கு விடும் பெரிய தாதாவிடம் உதவி கோர அவர் அவர்களுக்கு பகலில் காலியாய கிடக்கும் குடோனில் மெஸ் வைக்க அனுமதிக்கிறார். மெஸ்ஸின் மூலம் சிறு அங்கீகாரத்தை அடையும் அவர்கள் தங்களது விடலைக் காதல்களுடன் சந்தோஷமாக நின்றுவிடாதபடி தாதவிடம் வேலை செய்யும் அடியாளின் மூலமாக பிரச்சனை வருகிறது மெஸ்ஸிலேயே.
தாதாவை எதிர்த்து நிற்கத் துணியும் அந்தச் சிறுவர்களை அஸால்ட்டாக பிய்த்துப்போட்டு அவர்களை கண்காணாத வட இந்தியாவில் கொண்டுபோய் தனித்தனியாக விட்டுவிடுகிறான் தாதா. அவர்கள் அங்கிருந்து மீண்டு வந்தார்களா ? தங்களது அடையாளமாய் மாறின மெஸ்ஸை மீட்டார்களா? தாதாவுடனான அவர்களது போராட்டத்தின் முடிவு என்ன ? என்பது க்ளைமாக்ஸ்.
படத்தின் முக்கியமான பலம் அதன் திரைக்கதை. படம் நெடுக பார்வையாளர்களை மூட்டை தூக்கிகளாக மாற்றி அந்த விடலைப் பையன்களுடன் ஒன்றவைக்கிறது. தாத ஆச்சியை பிணையாக பிடித்து வைக்கும் போதும், சிறுவர்களை கூலிப்படையினர் சூழ்ந்து நிற்கும் போதும் நாம் மனம் பதைபதைக்கிறோம். தாதாக்களின் வாழ்க்கை முறையும், கூலிப்படையினரின் அனுகுமுறையும் இன்னும் கொடூரமானது எனினும் திரைக்கதையில் அதை மெலிதாக்கி அதே சமயம் நம்பகமாக இருக்கும்படியும் கவனமாகக் கையாண்டிருக்கிறார் விஜய் மில்டன்.
படத்தில் நடித்திருக்கும் நான்கு விடலைப் பையன்களான (கிஷோர், பாண்டி, முருகேஷ், ஸ்ரீராம்) நாலுபேரும் பசங்கள் படத்தில் நடித்த பசங்கள். அவர்களும், ஆச்சியாய் வரும் சுஜாதா, இமான் அண்ணாச்சி, ஒரு செடி ஒரு பூ சீதா, ஆச்சியின் மகளாய் வரும் சாந்தினி அப்புறம் அந்த புதுமுக வில்லனான தாதா மற்றும் அவருடைய அடியாள் மயில் ஆகியோரும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். ‘அடையாளம்’ என்கிற இடத்தில் நாடகத்தனமாய் மாறிவிட்டிருந்தாலும் வசனங்களில் பசங்க பாண்டிராஜ் பெரும்பாலும் வெற்றி பெற்றிருக்கிறார். ஒளிப்பதிவு செய்து இயக்கியிருப்பவர் விஜய் மில்டன். கோயம்பேட்டின் அழுக்கான கடைகளும், குறுகிய சந்துகளும், மீன்பாடி வண்டிகள், தூசு படிந்த சரக்கு லாரிகள் என்று கோயம்பேட்டை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். அவருக்கு ஒரு சபாஷ். அருமையாக இயக்கியதற்கு தனியாக இன்னொரு சபாஷ்.
நிறைய இடங்களில் விடலைப் பசங்களின் செயல்களில் பெரிய மனுஷத்தனம் எட்டிப் பார்க்கும் இடங்கள் இருந்தாலும் படம் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெறவேண்டியதிருப்பதால் அவற்றை மறந்தேவிடலாம். பாடல்களில் நிறைய கானா பாடல்களை சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர். அது பிண்ணனி இசையமைப்பாளர் சீலினுடையதா அல்லது பாடல்கள் இசையமைத்த அருண்கிரியுனடையதா சரியாகத் தெரியவில்லை என்றாலும் மூட்டை தூக்குபவர்களின் வாழ்க்கைத் தரத்துடன் ஒன்றவைக்கிறது என்பதில் சந்தேகமில்லை. மற்றபடி பிண்ணனி இசை பாஸாகிவிடுகிறது. படத்திலேயே ஓரிடத்தில் சொல்வதுபோல ‘சாதாரண கோலிசோடா தான் ஆனா எவ்வளவு காரமா இருக்குதுல்ல’ என்று ரசிகர்களை கேட்கவைக்கும் இந்த கோலி சோடா. தியேட்டர்ல போய் சாப்டுப்பாருங்க..