இசைஞானி இளையராஜா இளவயதிலிருந்தே தனது ஆன்மீகத் தேடல்களுக்குப் பெயர்போனவர். அவரது தற்போதைய பேட்டிகள்வரையிலும் ஆன்மீக தத்துவங்கள் விழுந்துகொண்டேயிருக்கும்.
ஒருவகையில் தமிழ்நாட்டில் இசை என்பது பக்தியுடன் கலந்தே வளர்க்கப்பட்டிருப்பதன் காரணமாகவோ என்னவோ ராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்ற வரிசையில் இப்போது வரவிருப்பவர் ராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா.
தான் இஸ்லாமியராக மதம் மாறத் தீர்மானிததிருப்பதாக அவர் தனது ட்விட்டர் வலைத்தளத்தில் தெரிவித்திருக்கிறார். கடந்த ஒரு வருடமாகவே இஸ்லாமிய பழக்கவழக்கங்களை மேற்கொண்டு வந்த அவர் தற்போது இந்த முடிவை அறிவித்திருக்கிறார். தனது இந்த முடிவு தனது குடும்பத்தாருடன் கலந்துபேசி எடுக்கப்பட்ட முடிவு என்றும், இதற்காக தனது தந்தை இளையராஜா எந்த மனக்கசப்பும் அடையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ராஜாவுடைய ஆன்மீகத் தேடல் அவருடைய இளம் வயதிலிருந்தே உடன் வருவது. ரஹ்மானுக்கும் அப்படியே. ஆஸ்கர் விருது வாங்கியபோதுகூட அடக்கமாக எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று அல்லாவுக்கு அர்ப்பணித்தவர் ரஹ்மான்.
யுவனின் வாழ்க்கையில் தேடினால் அப்படி எந்தத் தடயங்களும் இல்லை. அவர் அமைதியாக மீடியாக்களில் அதிகம் பேசாதவராக இருந்திருக்கிறார். ஆனால் ஆன்மீக விஷயங்களில் அவர் ஈடுபாடு கொண்டவர் என்று எந்தத் தடயங்களும் இல்லை.
இன்னொரு வதந்தி என்னவெனில் யுவன் தான் செய்துகொள்ளவிருக்கும் மூன்றாவது திருமணத்திற்கான சட்டச் சிக்கலை எதிர்கொள்ளவே மதம் மாறுகிறார் என்பது. அது உண்மையானால் யுவன் உங்களை எல்லோரும் மனத்தினுள் எள்ளி நகையாடும் விடயமாகவே அது மாறும். மதமாற்றம் என்பது உண்மையான தேடலாக இருக்கவேண்டுமேயன்றி இதுபோன்ற சந்தர்ப்ப ஆதாயங்களுக்காக அல்ல.