சந்தோஷ் சிவன் நயவஞ்சக ஊசியாக ஏற்ற எடுத்த ‘இனம்’ படத்துக்கு உடனே உலகெங்கும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து ஆடிப்போனார் லிங்குசாமி. இந்த நிலையில் அவருடைய ‘அஞ்சான்’ படத்திற்கு பாடல் எழுதவிருந்த அறிவுமதி இனம் படத்தை அவர் வாங்கி வெளியிட்ட பிரச்சனை வந்ததும் கோபமாகி ‘உன் படத்துக்கு பாடல் எழுத நான் விரும்பவில்லை. அது என் இனத்துக்கு துரோகம் செய்வது போலாகும்’ என்று மெட்டை திருப்பி அனுப்பிவிட்டாராம்.
தனக்கு அண்ணன் ஸ்தானத்தில் இருந்த தமிழ்ப் பற்றாளரும் கவிஞருமான அறிவுமதியின் இந்தப் பதிலால் மேலும் வருத்தத்திற்கு ஆளாகிவிட்டாராம் லிங்குசாமி. ‘இதுவரை தனிப்பட்ட வாழக்கையிலும் சினிமாவிலும் தமிழர்களை ஆத்மார்த்தமாகவே நேசித்து வந்திருக்கிறேன். இனம் படத்தை வாங்கி வெளியிட்டதும் அந்த எண்ணத்தில் தான். அந்தப் படத்தில் இதுபோன்ற விஷமமான விஷயங்கள் இருப்பதை நான் அப்போது உணரவில்லை’ என்று சொல்லி படத்தை வெளியிடாமல் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் மலையாளியான சந்தோஷ் சிவனுக்கு இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை பற்றி மேலோட்டமாக சிங்கள, இந்திய அரசுகளின் பார்வை போலவே தெரிந்திருக்கிறது. எனவே அதுகுறித்து அவரிடம் விரிவாகப் பேசி விளக்கவேண்டும் என்று தமிழ் அமைப்பு ஒன்று அவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாம். அதில் அவர் கலந்துகொள்ளாவிடில் அவர் தமிழில் பணியாற்றும் எந்தப் படமானாலும் அதைப் புறக்கணிப்பது என்றும் அமைப்புகள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
லிங்குசாமியின் அஞ்சான் படத்தின் கேமராமேனும் சந்தோஷ் சிவனே. ஆதலால் அவரை தொடர்ந்து பயன்படுத்தினால் தனது படமும் புறக்கணிக்கப்படும் என்பது உறுதியாகும் பட்சத்தில் அவரை நீக்கிவிட்டு வேறொரு ஒளிப்பதிவாளரை பயன்படுத்தும் எண்ணத்தில் இருக்கிறாராம் லிங்கு.