’காதல், அடிதடி, காமெடி சீசன் போல இது தமிழ் சினிமாவுக்கு பேய் சீசன்.  வாரத்துக்கு இரண்டு பேய்ப்படங்கள் தவறாமல் ஆஜராகிவிடுகின்றன. அந்த வரிசையில் வந்து சேர்ந்திருக்கிறது இந்த பந்து ரன் விக்கெட்.

கதை?

நாயகன் வினய் கிருஷ்ணாவும் நாயகி ஹசிகாவும் சிவகாசியில் காதலித்து வருகிறார்கள்.  ஹசிகாவிற்கும் அவரது மாமா செண்ட்ராயனுக்கும் பெற்றோர்கள் நிச்சயதார்த்தம் செய்து வைக்கிறார்கள். வழக்கம்போல் காதலனுடன் நாயகி திருமணத்துக்கு முந்தினநாள் எஸ்கேப்.

அப்படி எஸ்கேப் ஆனவர்கள் ரெஜிஸ்தர் மேரேஜ் நடக்க இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில்,சென்னையில்,  நண்பன் ஜீவா தங்கியிருக்கும் ஒரு பங்களாவில் தங்குகிறார்கள். அங்கு ஏற்கனவே வாடகை தராமல் ஓசியில் குடியிருக்கும் ஒருபேய்,  நாயகி ஹசிகாவிடம் குடியேறி நாயகன், அவரது நண்பர்கள், மற்றும் சிவகாசியிலிருந்து தேடிவரும் மச்சான் செண்ட்ராயன் அண்ட் கோ க்களை டார்ச்சர் செய்கிறது.

அந்த பேய்க்கு ஒரு ஃப்ளாஷ்பேக். அது கதாநாயகியை விட்டு வெளியேறியதா அல்லது இப்பட டைரக்டர் நம்மை டார்ச்சர் செய்ததுபோல் தொடர்ந்து டார்ச்சர் செய்ததா என்பது மீதிக்கதை.

வழக்கம்போல் தலைப்புக்கும் கதைக்கும் எந்தவித பந்த’முமில்லை. சும்மா ஒரு சீனில் 4 பேர் கிரிக்கெட் விளையாடுகிறார்கள் அம்புட்டுத்தான்.

துட்டு போட்டு தயாரித்தவர் படத்தின் நாயகன் வினய் கிருஷ்ணா தான் என்பது அவரது வினயமில்லாத முழியில் தெரிகிறது.இவர் பேயிடம் சிக்கிக்கொண்ட காட்சிகளில் டைரக்டரிடம் சிக்கிக்கொண்ட தயாரிப்பாளர்போலவே தத்ரூபமாக முழித்திருக்கிறார்.

நாயகி ஹசிகா ஏதோ ஒரு எழுத்து குறைந்த ஹன்சிகா. சாதாரண தோற்றத்தில் வருவதைவிட பேயாக வரும்போது பின்னி எடுக்கிறார்.

பேய்ப்பெடமென்றாலே நாலைந்து குண்டாச்சட்டிகளை எடுத்து உருட்டவேண்டும் என்ற இசைஞானம் இசையமைப்பாளர் உமேஷுக்கு இருந்திருப்பது ஒரு ஆறுதல்.

டைரக்டர் வீரா ஒரு பேய்ப்படத்தை காமெடி கலந்து எடுக்க நினைத்திருக்கிறார் போலும். அந்த பேயின் சுமாரான ஃப்ளாஷ்பேக் தவிர வேறு எங்கேயும் காமெடித்தனமான பேயோ, பேய்த்தனமான காமெடியோ இல்லை.

ஸோ,  இந்த 1பந்து 4ரன் 1 விக்கெட் சரியான அடிவாங்குன பக்கெட்.

 

Related Images: