ஃபேஸ்புக் ட்விட்டர்களில் பவர் ஸ்டாரை கலாய்த்து ஓய்ந்துபோனவர்களின் சமீபத்திய டார்கெட் கேப்டன் விஜயகாந்த். அவரை ஸ்கூல் பக்கமே போகாத ‘கைப்புள்ள மாதிரியும், ஆங்கில அறிவு சுத்தமாக இல்லாத மக்கு போலவும் சித்தரிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடையும் கூட்டம் ஒன்று இங்கே உலாவுகிறது.
ஊர்ல இருந்து உங்க அப்பா அம்மா வர்றாங்கன்னு சொன்ன எப்போ வர்றாங்க என்று தன் மனைவி பிரேமலதாவிடம் கேட்பார். விஜயகாந்த் அதற்கு பிரேமலதா அது எங்க அப்பா அம்மா இல்லீங்க ஓபாமாங்க என்பார். அதேபோல டெல்லி தேர்தலில் வெற்றிபெற்ற காஜல் அகர்வாலுக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று விஜயகாந்த் சொல்வதாக நேற்று முழுக்க கேலிச்சித்திரம் சமூகவலைத்தளங்களில் பரவியது.

அவ்வளவு ஏன் சமீபத்தில் நடந்த அவருடைய மகன் சண்முகப்பாண்டியனின் சகாப்தம் ஆடியோ பங்ஷனில் கூட இந்தமாதிரி ஒரு கேலிச்சித்திரத்தைப் பார்த்து சிரித்ததாக சொன்னார் நடிகர் பார்த்திபன்.

இப்படி தொடர்ச்சியாக விஜயகாந்த்த்தைப் பற்றி சமூகவலைத்தளங்களில் பரவும் கேலிச்சித்திரங்கள் அவருடைய தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுதொடர்பாக சென்னை காவல்துறை ஆணையரிடம் தேமுதிக வழக்கறிஞர் அணியினர் இன்று புகார் அளித்துள்ளனர்.

அதில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் எதிர்கட்சித் தலைவரும், லட்சக்கணக்கான தொண்டர்களின் பேரன்பிற்கு பாத்திரமானவருமான விஜயகாந்தை தரக்குறைவாக விமர்சித்தும், அவரது மனம் புண்படும் வகையில் உண்மைக்குப் புறம்பாகவும், கேலிச்சித்திரங்கள், துணுக்குகள், தரக்குறைவான விமர்சனங்கள் போன்றவை ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும், ட்விட்டர், டெலிகிராம் மற்றும் சமூக வலைதளங்களில்(SOCIAL NETWORKING SITES), தொடர்ந்து உள்நோக்கத்துடனும், அவரது புகழை சீர்குலைக்கும் வண்ணம் குறிப்பிட்ட ஒரு சிலரால் பரப்பப்பட்டு வருகிறது.

இது போன்ற விஷமத்தனமான கேலிச்சித்திரங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள், மற்றும் அபிமானிகளின் மனங்களை பெரிதும் புண்படுத்தியுள்ளது.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தரக்குறைவாகவும், வக்கிரமனதுடனும், அரசியல் காழ்புணர்ச்சியுடனும், தேமுதிக கட்சித்தலைவரும், தமிழ்நாடு சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தை தரக்குறைவாக விமர்சிப்பது எந்தவகையிலும் ஏற்க்க முடியாத செயலாகும்.

மேலும் தற்பொழுது முகநூலிலும், வாட்ஸ்அப்பிலும், ட்விட்டர், டெலிகிராம் ஆகியவற்றில் உள்ள தரக்குறைவான படங்கள், விமர்சனங்களை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எங்கள் தலைவர் விஜயகாந்தை உண்மைக்கு புறம்பாகவும், சமுகத்தில் அவரது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் கேலிச்சித்திரங்கள், படங்கள், துணுக்குகள், தரக்குறைவான விமர்சனங்கள் போன்றவை ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும், ட்விட்டர், டெலிகிராம் ஆகியவற்றில் வெளியிடுபவர்கள் மீது தகவல் தொடர்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் மூலம் குற்ற வழக்குகளை பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டனை திருப்திப்படுத்துவதற்காக ஒரு சில கைதுகள் நடக்கலாம். எனவே கலாய்ப்புகளை நிறுத்திவைப்பது நல்லது.

Related Images: