சில மாதங்களுக்குமுன், முன்னறிவிப்பு எதுவுமின்றி, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த சப்ரூன் என்ற முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்துகொண்ட யுவன் ஷங்கர் ராஜா (எ) அப்துல் ஹாலிக், அப்போது முதல் அவர் செய்தியாளர்களைச் சந்திக்காமலும், படவிழாக்களில் கலந்து கொள்ளாமலும், ஊடக வெளிச்சம் படாத தொலைவில் ஒதுங்கியே இருந்து வந்தார்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஞாயிறன்று (29ஆம் தேதி) மாலை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்தார் யுவன் ஷங்கர் ராஜா. அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
சமீபநாட்களாக நீங்கள் செய்தியாளர்களை சந்திக்க தயங்குகிறீர்களே… என்ன காரணம்?
எப்போதுமே நான் அதிகம் பேசுபவன் இல்லை. எனவே நான் ஆரம்பத்தில் இருந்தே தனியாக இருந்து பழகிவிட்டேன். சமீபத்தில் என்னுடைய வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நடந்து விட்டன. ஆகையால், ஒரு பாதுகாப்பான கூண்டுக்குள் என்னை நானே அடைத்துக் கொண்டேன். மற்றபடி, நான் செய்தியாளர்களை சந்திக்கத் தயங்குவதற்கு வேறு எதுவும் காரணம் இல்லை.
உங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது?
மாஷா அல்லா! என் திருமண வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருக்கிறது.
உங்களது மதமாற்றம், தற்போதைய திருமணம் ஆகியவற்றில் உங்கள் அப்பா இளையராஜாவுக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறதே…?
அப்பா எனது முடிவுகளுக்கு எப்போதுமே தடை போட்டதில்லை. மதமாற்றம் குறித்துகூட அப்பா எதுவும் சொல்லவில்லை. ‘உனக்கு அமைதி கிடைக்கிறது என்றால் செய்’ என்றுதான் சொன்னார்.
அதுபோல, என்னுடைய திருமணம் என் அப்பா சம்மதத்துடன் தான் நடைபெற்றது. திருமணத்தில் அப்பா கலந்துகொள்வதாகத் தான் இருந்தது. ஆனால், பெண் வீட்டார் தரப்பில் இருந்து உடனடியாக திருமணம் என்று கோரிக்கை வந்தது. நான் அப்பாவிடம் போன் போட்டு இது பற்றி சொன்னேன். ‘இரண்டு நாளில் திருமணம் என்றால் என்னால் கலந்துகொள்ள முடியாது. நீ சென்னை திரும்பியவுடன் கண்டிப்பாக சந்திக்கலாம்’ என்றார். அதன்படி, திருமணமான மறுநாளே சென்னை வந்து, அப்பாவை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கினேன். என்றாலும், என்னுடைய திருமணத்தில் அப்பா கலந்து கொள்ளாத வருத்தம் எனக்கு இருக்கிறது.
திலீப்குமார் மதம் மாறியபின் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெயரை பயன்படுத்தி வருகிறார். ஆனால் நீங்கள் மதம் மாறிய பிறகும் அப்துல் ஹாலிக் என்ற பெயரை பயன்படுத்தாமல், யுவன் ஷங்கர் ராஜாவாகவே இருக்கிறீர்களே…?
கீ-போர்டு பிளேயராக இருந்த திலீப்குமார், திரைப்பட இசையமைப்பாளர் ஆவதற்கு முன்பாகவே மதம் மாறிவிட்டார். ஆகவே, அவர் முதல் படத்திலேயே ஏ.ஆர்.ரஹ்மானாகவே அறிமுகம் ஆனார். ஆனால் நான் அப்படி அல்ல. யுவன் ஷங்கர் ராஜாவாக அறிமுகம் ஆனேன். இப்போதும் அதே பெயராலேயே அறியப்படுகிறேன். அப்படியிருக்கும்போது, இப்போது பெயரை மாற்றினால் ரசிகர்கள் என்னோடு கனெக்ட் ஆவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் பெயரை மாற்றவில்லை.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘மாஸ்’ படத்துக்கான உங்கள் இசையமைப்பில் ஏதோ பிரச்சனை என்றும், அதனால் ஒரு பாடலுக்கு தமன் இசை அமைத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறதே?
உண்மையில் நடந்தது என்னவென்றால், இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் தமன், ‘நான் யுவனின் இசையமைப்பில் பணிபுரிய ஏதாவது வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள்’ என்று கேட்டிருக்கிறார். இது குறித்து வெங்கட் பிரபு என்னிடம் கேட்டபோது, ‘ஏதாவது நல்ல சந்தர்ப்பம் வரும்போது பண்ணலாம்’ என்று கூறியிருந்தேன்.
‘மாஸ்’ படத்திற்கு நயன்தாரா தேதிகள் உடனே கொடுத்து விட்டதால், ஒரு பாடல் உடனே அவசரமாக வேண்டும் என்று கேட்டார்கள். அப்போது நான் பிஸியாக இருந்ததால், அந்த பாடலுக்கு நான் மெட்டு மட்டும் போட்டு கொடுத்தேன். தமன் அதற்கு இசை வடிவம் கொடுத்தார். அதாவது ட்யூன் என்னுடையது. ஆர்கஸ்ட்ரேஷனுக்கு ஏற்பாடு செய்தது தமன். அவ்வளவுதான்.