அதீத உலகமயக்கமாலின் ஊடே வாழ்ந்து கொண்டிருக்கும் நம் தமிழ்ச்சமூகத்தின் பலதரப்பட்ட மக்களின் வாழ்வியலை விவரிக்கும் கதையாக உருவாகியிருக்கிறது டாலர் தேசம்.

பொருளாதார படிநிலைகளால் வெவ்வேறாக பிரிக்கப்பட்டுள்ள மனிதர்களும், அவர்களின் பல்வேறு முகங்களும், வெகுஜன மக்கள் அறிந்திராத அவர்களின் அன்பும், வன்மமும், காதலும், வாழ்க்கையும் இந்தக் கதையின் முதுகெலும்பாக இருக்கும்.

சமூகத்தோடு இணைந்து பின்னப்பட்டுள்ள இக்கதையை, தொய்வின்றி நகர்த்திச் செல்லும் நூற்றுக்கும் மேற்பட்ட கதாப்பாத்திரங்களில் புதுமுகங்களை யதார்த்தமாக நடிக்க வைத்திருப்பது இந்த திரைப்படத்தின் தனிச்சிறப்பு. நவீன திரைக்கதை உத்தியோடு சொல்லபட்டிருக்கும் இக்கதை அனைத்து ரசிகர்களையும் கவரும் வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது.

பருத்தி வீரன், யோகி படங்களில் இயக்குனர் அமீரிடம் பணியாற்றிய முத்து கோபால், இப்படத்தின் இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பன்முக அவதாரம் எடுத்து அறிமுகமாகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ராம்ஜீயிடம் பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்களில் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அருண் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் மற்றும் யுவன் சங்கர் ராஜாவிடம் பணியாற்றிய பிரசாத் வி குமார் இப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.  மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் மூடர்கூடம் படங்களில் பணியாற்றிய அத்தியப்பன் சிவா, படத்தொகுப்பை கையாள்கிறார். பாடல்கள் சினேகன். படத்திற்கு வசனம் – சுந்தர் மற்றும் இந்திரஜீத்.

“இக்னைட் பிக்சர்ஸ்” நிறுவனத்தாரின் முதல் படைப்பு “டாலர் தேசம்”. மேலும் பல தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரியும் இத்திரைப்படம் வெகுவிரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

அரசியல், பொருளாதார விழிப்புணர்வு உள்ள இயக்குனர்கள் தமிழில் அரிதுதான். அதனால் தான் பெரும்பாலும் உணர்வுகளைப் பிழியும் படங்கள் இல்லாவிட்டால் காமெடியைப் பொழியும் படங்கள் என்று ரெண்டே ரெண்டு ஜெனர்கள் தான் தமிழில் வருகின்றன. முத்துகோபால் என்ன சொல்றாருன்னு பாப்போம்.

Related Images: