ராமோன் மகசேசே பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைசிறந்த தலைவர்களுள் ஒருவர். பிலிப்பைன்ஸ் அதிபராக இருந்த அவர் நினைவாக பல்வேறு துறைகளில் சிறந்த மக்கள் சேவை புரிபவர்களுக்கு ‘ராமோன் மகசேசே விருதுகள்’ ஆண்டுதோறும் பிலிப்பைன்ஸ் நாட்டு அரசால் அமெரிக்காவின் ராக்பெல்லர் நிறுவனத்துடன் இணைந்து வழங்கப்பட்டு வருகின்றது. அதில் 2014 வருடத்துக்கான சிறந்த மக்கள் சேவைக்காக தேர்வு செய்யப்பட்டிருப்பவர்கள் இந்தியாவைச் சேர்ந்த ஐ.எப்.எஸ் அதிகாரி சஞ்சய் சதுர்வேதி மற்றும் தன்னார்வ நிறுவன செயலாளர் அனுஷ் குப்தா ஆகியோர்.

நம் ஊர் சகாயம் போல மிக நேர்மையான ஐ.எப்.எஸ் அதிகாரியான சஞ்சய் சதுர்வேதி ஐந்து வருடங்களில் இதுவரை 12 முறை அரசியல்வாதிகளால் ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டவர். ஹரியானாவில் ரியல்எஸ்டேட் ஊழல்களை வெளிக்கொண்டுவந்து தூக்கியடிக்கப்பட்டார். டெல்லியில் எய்ம்ஸ்(AIMS) அரசு மருத்துவமனையில் பிரதம கண்காணிப்பு அதிகாரியாக 2012ல் பணியமர்த்தப்பட்டார். மறைந்த இந்திராகாந்தி முதல் நாட்டின் பெரிய தலைவர்கள் எல்லோரும் எய்ம்ஸில் நோயாளிகளாக வருவார்கள். பணியமர்த்தப்பட்ட ஒரு வருடத்திலேயே மருத்துவமனையில் நடந்த 165 லஞ்சப் புகார்களைப் பிடித்தார்.

இவரை ஒழித்துக் கட்ட இவர் மேலே வேண்டுமென்றே தற்கொலைக்குத் தூண்டிய வழக்கு போன்று பல வழக்குகள் ஆளும் அரசுகளால் போடப்பட்டன. எல்லாவற்றையும் விசாரித்த சிபிஐ இவர் மேல் போடப்பட்ட பொய்வழக்குகளை தூக்கி எறிந்தது. இதுபோன்ற பொய்ப்புகார்களால் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதம கண்காணிப்பு அதிகாரி பதவியிலிருந்து விலக்கப்பட்டார். தற்போதைய ஆம் ஆத்மி அரசு இவரது நேர்மையைப் பாராட்டி எய்ம்ஸ் மருத்துவமனையின் பிரதம அதிகாரியாக பதவி உயர்த்தி மீண்டும் பணியமர்த்தியுள்ளது.

தன்மேல் போடப்பட்ட வழக்குகளை நீதிமன்றங்களின் உதவியாலேயே தான் வெற்றிகொள்ள முடிந்ததாகவும், ‘லஞ்சம் வாங்கமாட்டேன் ஊழலை ஒழிப்பேன்’ என்று சபதமிடும் பிரதமர் மோடியின் அலுவலகம் தன் விஷயத்தில் பாராமுகமாக நடந்துகொண்டதாகவும் குற்றம் சாட்டுகிறார் இவர்.

“மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களை என் வாழ்க்கையின் முன்மாதிரியாகக் கொண்டிருக்கிறேன். அவருடைய நேர்மறையான நம்பிக்கையும் தன்னலமற்ற தன்மையும் எனக்கு வழிகாட்டிகளாக இருக்கின்றன. ‘லஞ்சத்தை ஒழிப்பதில் தாய், தந்தை மற்றும் ஆசிரியரின் பங்கு மகத்தானது. சிறுகுழந்தைகளுக்கு இந்த ஒழுக்க நெறிகளை அவர்கள் போதிப்பதிலேயே லஞ்சத்துக்கு எதிரான போராட்டம் ஆரம்பமாகிறது’ என்று கலாம் சொல்லியிருக்கிறார். ”

தன்னை பதவி நீக்கியது பற்றி கேட்டபோது சதுர்வேதி, “ஆர்.டி.ஐ சட்டம் மூலம் என்னை பதவி நீக்கியது பற்றிய ஆவணங்களைப் பார்த்தேன். எனது பதவி நீக்கம் பற்றி பிரதமர் மோடி சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தனுடன் பேசியிருக்கிறார். ஆனால் எனது சம்பந்தமாக அவரிடம் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் தவறானவை.” என்கிறார்.

மேலும் “என்னை எய்ம்ஸின் கண்காணிப்பு அதிகாரி பதவியில் அமர்த்துவதற்கு மத்திய அரசின் பார்லிமண்ட் கமிட்டியும் சம்பந்தப்பட்டுள்ளது. ஆனாலும் தற்போதைய பா.ஜ.க அரசு அதை வசதியாக மறைத்துவிட்டு எனது பணி நியமனத்தில் முறைகேடு என்று என்னை நீக்கினார்கள். என்னைப் பதவியிறக்க 24 மணிநேரத்தில் 20 கையெழுத்துக்களை வாங்க முடிந்தது அரசு. அதே சமயம் எனது பதவி உயர்வு ஆணையை நிறைவேற்ற பல மாதங்கள் இழுத்தடித்தனர். இதுதான் நேர்மைக்கு இங்கு கிடைத்துள்ள பரிசு.”

“என்னுடைய தாத்தா ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். எனது தந்தை மத்தியப் பிரதேச அரசின் மின்சாரத்துறையில் பணிபுரிந்த நேர்மையான அதிகாரி. நேர்மைக்கான அவர்களின் போராட்டமே என்னுள்ளும் விதையாக இருக்கிறது.”

லஞ்சம், கறுப்புப்பணம், ஊழல் ஆகியவற்றை ஒளித்துவைக்கும் பா.ஜ.க ஆட்சியில் நல்லவர்களுக்கு வேறு நாட்டிலிருந்து தான் விருதுகள் வரவேண்டியிருக்கிறது.