வியாழனன்று காலை பதினோரு மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்ட நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்காக இரண்டு நாட்களாக எல்லா சேனல்களும் இரங்கல்களும், நினைவலைகளும் ஒளிபரப்பிய வேளையில் அன்று அதிகாலையில் யாகுப் மேமானும் தூக்கிலிடப்பட்டார். இரண்டையும் மாற்றி மாற்றி காட்டிய சேனல்கள் நமக்கு மறைமுகமாகச் சொல்லிய செய்தி இது “நல்ல முஸ்லீம்களுக்கான மரியாதையும் கெட்ட முஸ்லீம்களுக்கான பாடமும் இதுதான்”.

அவற்றில் ஒன்று கூட ஒரே நாளில் யாகுப் மேனனின் கருணை மனு அவர் விண்ணப்பித்த மறுநாளே ஜனாதிபதியால் மறுக்கப்பட்டதையும் அதற்கு மறுநாள்  வியாழனன்று அவர் அவசர அவசரமாக தூக்கிலிடப்பட்டதையும் குறிப்பிட விரும்பவில்லை. தீவிரவாதிகள் என்றால் காங்கிரஸ் அரசு உறவினர்களிடம் கூட சொல்லாமல் அப்சல் குருவை தூக்கில் போடும். பா.ஜ.க அரசுவும் (இஸ்லாம்?) தீவிரவாதிகளுக்கு காங்கிரஸை விட எதிரானது என்று நிரூபிக்க துடித்துக் கொண்டிருப்பது தானே.

இதில் ஒரு வினோதம் என்னவென்றால் யாகுப் மேனனின் கருணை மனு அப்துல்கலாமின் கையில் முன்பு இருந்தது. ஆனால் அவர் அதற்குப் பதில் சொல்லவேயில்லை. ஏனென்றால் அப்துல்கலாமும் முஸ்லீம் என்பதால் அல்ல. கலாம் மரண தண்டனைக்கு எதிரானவர். இறைவன் கொடுத்ததை மனிதன் நீதியின் பெயரால் எடுப்பதில் அவருக்கு உடன்பாடில்லை. ஆனாலும் பிற ‘அழுத்தங்களால்’ அவரால் மன்னிப்பு வழங்க இயலவில்லை. ஆதலால் பதில் கூறாமல் நிறுத்தி வைத்துவிட்டார். தற்போதைய பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு அத்தகைய ‘மன அழுத்தங்கள்’ ஏதும் இல்லை எனக் கருதலாமா?.

‘யாகுப்பிற்கு மரண தண்டனை கொடுப்பது அநியாயமானது’ என்று அவரை விசாரித்த ரா உளவுத்துறையின் அதிகாரி பி.ராமன் தனது கட்டுரையில், விசாரணைக்கு யாகூப் கொடுத்த அபாரமான ஒத்துழைப்பினால் இப்படி கருத்து தெரிவித்தார். இதை கருத்தில் கொள்ளும்படி முன்னால் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஹெச்.எஸ். பேடி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் கொடுத்த அறிக்கையில் சுப்ரீம் கோர்ட்டுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புக்களும் சுப்ரீம் கோர்ட்டுக்கு இப்படி மனுக்கள் அளித்தன. ஆனால் ராமனின் கட்டுரையை கருத்தில் கொண்டு விஷயத்தை கிளறினால் மேலும் பல பூதங்கள் கிளம்பக்கூடும் என்று பயந்தே அரசு அதை கவனிக்காதது போல இருந்துவிட்டது. யாகூப் மேமான் தீவிரவாதி டைகர் மேமானின் தம்பி என்பதற்காக மட்டுமே தூக்கிலிடப்பட்டாரோ என்கிற ஐயத்தை அவரைத் தூக்கிலிட அரசு காட்டிய அவசரம் மேலும் அதிகப்படுத்துகிறது.

தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டவர்களை அரசு இதுவரை மன்னித்ததே இல்லையா ? இருக்கிறது. 1993ல் டெல்லியில் மணீந்தர் சிங் பிட்டா என்கிற காலிஸ்தான் பிரிவினைவாதிகளை எதிர்த்த ஒரு தலைவரைக் கொல்ல வைக்கப்பட்ட குண்டுவெடிப்பில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட தேவந்தர் பால் சிங் என்வருக்காக அகாலிதளத் தலைவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து வேண்டினர். ஜெர்மனுக்கு தப்பி ஒடிய தேவேந்தர் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டார். கடந்த 2014 மார்ச் மாதம் இவரது கருணை மனு பல வருடங்கள் ஜனாதிபதிகளால் பரிசீலிக்கப்படாததையொட்டி சுப்ரீம் கோர்ட், தேவேந்தரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. யாகுப் மேமானும் சுமார் 20 வருடங்களுக்கு மேல் சிறைத் தணடனை அனுபவித்தவர்தான்.

மும்பைக் கலவரங்கள் பற்றிய ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையில் குற்றம் புரிந்தவர்களாக அடையாளம் காட்டப்பட்டவர்கள் பெரும்பாலோனோர் இன்றும் வெளியில் உலாவிக்கொண்டுள்ளார்கள். தண்டனை பெற்ற ஒரு சிவசேனை எம்பி பெயிலில் வெளியே வந்து 2010ல் இறந்தே போனார். தாக்கரே மும்பை போலீஸ் என்னை கைது செய்து பார்க்கட்டும் என்று பகிரங்கமாய்ச் சவால் விட்டதை நாடே அறியும்.

தீவிரவாதி என்று யாரையாவது பிடித்தால் அவர்களை தூக்கில் போட்டுத் தான் தங்கள் நாட்டுப் பற்றை காட்டவேண்டும் என்று முந்தைய அரசும், தற்போதைய அரசும் கங்கணம் கட்டி இருக்கும் போது மரணதண்டனைக்கெதிராக யார் போராடி என்ன செய்துவிடமுடியும் ?