‘வியாபம்’ என்றால் என்ன அர்த்தம் ? மத்தியப் பிரதேச அரசின் இஞ்சினியரிங், மருத்துவம் மற்றும் அரசின் பல துறைகளில் வேலைக்கு ஆள் எடுக்க நடத்தப்படும் நுழைவுத் தேர்வு ஆணையம் தான் வியாபம். நம்ம ஊரில் டி.என்.பி.எஸ்.சி(TNPSC) என்பார்களே அது போல. இந்த வியாபம் நடத்தும் பல்வேறு துறைகளுக்கான நுழைவுத்தேர்வில் பெரும் அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன.

மத்தியப் பிரதேச அரசுப்பணி நியமனங்களிலும், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரி அட்மிஷன்களிலும் தகுதியில்லாதவர்களை நுழைத்து விடுவதற்காக பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த ஊழலில் தொடர்புடைய பலர் மர்மமான சூழலில் இறந்துகொண்டிருக்கிறார்கள். இதுவரை இந்த ஊழலில் 1930 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய பங்கு உள்ளது எனச் சந்தேகிக்கப்பட்ட 40க்கும் அதிகமானோர் சந்தேகம் என்று போலீஸ் வந்ததுமே மர்மமான முறையில் இறந்துள்ளனர். இப்படி ஊழலும் மர்ம மரணங்களும் நிறைந்த வியாபம் தான் ‘இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் நெட்வொர்க்’ என்கிறார்கள்.

இவ்வளவு பயங்கரமான ஊழலை முதன் முதலில் அம்பலப்படுத்தியவர் தான் ஆஷிஷ் சதுர்வேதி என்கிற இளைஞர், இவர் இந்த ‘மர்ம மரண’ பட்டியலில் எப்போதும் இடம்பெறலாம்! ஆனாலும், இதுவரை 14 முறை தன் மீது நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சி தாக்குதல்களில் இருந்து தப்பி,
உறுதியோடு வியாபம் ஊழலை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறார்.

இஸ்திரி செய்யாத தொள தொள பேன்ட் – சட்டை அணிந்தபடி ஒரு பழைய சைக்கிளில் மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் குவாலியரில் வலம் வரும் 26 வயது இளைஞர் ஆஷிஷ் சதுர்வேதியைப் பார்க்கும் எவருக்கும் ஆச்சரியம் எழும், ‘இவரா இந்த ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர்?’ என! ஆனால் அவரது பாதுகாப்புக்காக உடன் வரும் போலீஸ்காரரைப் பார்த்தால் தான் நம்பிக்கை வரும்.

‘‘என் அம்மாவின் மரணம்தான் இந்த ஊழலை எனக்கு உணர்த்தியது’’ என நெகிழ்ச்சியோடு சொல்கிறார் சதுர்வேதி. கடந்த 2009ம் ஆண்டில் புற்றுநோய் தாக்கிய தன் அம்மாவை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார் அவர். அங்கிருந்த மருத்துவர்களுக்கு அடிப்படை மருத்துவ அறிவுகூட
இல்லாதது கண்டு அதிர்ந்தார் சதுர்வேதி. பலருக்கும் குத்துமதிப்பாகவே சிகிச்சை நடந்திருக்கிறது.

‘‘சிகிச்சை பலனளிக்காமல் என் அம்மா சில நாட்களிலேயே இறந்துவிட்டார். எனக்குக் கோபம் பொங்கி வந்தது. சாதாரண மருந்துக்கடை விற்பனையாளருக்கு மருந்துகள் பற்றித் தெரியும் விஷயங்கள்கூட அறியாமல் இவர்கள் எப்படி எம்.பி.பி.எஸ் முடித்து வந்திருப்பார்கள் என கேள்வி
எழுந்தது. எத்தனை அப்பாவிகள் இந்த அரைகுறைகளால் தினம் தினம் சாகடிக்கப்படுகிறார்கள்! இதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என விசாரணையை ஆரம்பித்தேன்’’ என்கிறார் சதுர்வேதி.

“அங்கு பழக்கமான ஒரு மருத்துவ மாணவரோடு நெருங்கிப் பழகியதில் உண்மைகள் தெரிந்தன. மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு மத்தியப் பிரதேசத்தில் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். உண்மையான மாணவர்களுக்கு பதிலாக வேறு யாரோ தேர்வு எழுதுவார்கள். இப்படி ஆள் மாறாட்டம் செய்வதில் எல்லோருக்கும் பங்கு! தேர்வு நடக்கும் நேரத்தில் யார் கண்ணிலும் படாமல் இருக்க, அந்த மாணவர் எங்காவது சினிமா பார்த்துக் கொண்டிருப்பார். ‘‘ஒரு சினிமா பார்த்தால் எம்.பி.பி.எஸ் அட்மிஷன் கிடைப்பது உலகிலேயே இங்கு மட்டும்தான்’’ என சொல்லி சிரிக்கிறார்
சதுர்வேதி.ashish-chaturvedi-vyapam-scam1

இது ஊழலின் ஒரு துளிதான். நுழைவுத்தேர்வில் மாணவர்கள் போய் விடைத்தாளை வாங்கி, எதுவுமே எழுதாமல் பத்திரமாகத் திருப்பிக் கொடுக்க, வேறு இடத்தில் வைத்து அதை யாரோ ஒரு பேராசிரியர் எழுதி முடிப்பார். ஒன்றுமே தெரியாத ஒரு நபர், முதல் மார்க் வாங்கி நல்ல கல்லூரியில் சீட் பெறுவார். இப்படி மோசடி நடந்தது வெறுமனே மருத்துவக் கல்லூரி அட்மிஷனுக்கு மட்டுமில்லை. எஞ்சினியரிங் அட்மிஷன், அரசு வேலைகளுக்கான
தேர்வுகள் என சகல மட்டத்திலும் இதே ஆள்மாறாட்டம், தகிடுதத்தம்.

நுழைவுத் தேர்வு மையங்கள், கவுன்சிலிங் நடைபெறும் இடங்களுக்குச் சென்று ஆதாரங்களைத் திரட்டி, 2013ம் ஆண்டில் ஒரு உயர் அதிகாரியிடம் புகார் கொடுக்கப் போனார் சதுர்வேதி. அவரோ, ‘இந்த நெட்வொர்க்கில் நீயும் சேர்ந்தால் நல்ல பங்கு சம்பாதிக்கலாம்’ என பேரம் பேசினார்.
அங்கிருந்து விலகி ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியை அணுகினார் சதுர்வேதி. இதேபோல வேறு மூன்று பேர் பல்வேறு தகவல்களைத் திரட்டிக் கொடுத்த புகார்களும் அந்த நேர்மையான அதிகாரி கையில் இருந்தது. ‘இவ்வளவு அப்பட்டமாக மோசடி செய்ய முடியுமா?’ என்ற அவநம்பிக்கை மனதில் சூழ, அரைமனதோடு ஒரு நுழைவுத் தேர்வு மையத்துக்கு திடீர் சோதனை நடத்தச் சென்றார் அந்த அதிகாரி. ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பலர் சிக்கினர். அதன்பின் ஒவ்வொன்றாக முழு பூதமும் வெளியில் வந்தது.

இது எவ்வளவு மெகா சைஸ் ஊழல் என்பது சில புள்ளிவிவரங்களைப் பார்த்தால் புரியும். இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளது 1930 பேர். இன்னும் 500 குற்றவாளிகள் தலைமறைவாக இருக்கின்றனர். மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகானின் மனைவிக்கு இதில் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. மாநில கல்வி அமைச்சர் சிறையில் இருக்கிறார். மாநில கவர்னர் ராம் நரேஷ் யாதவின் மகன் கைது செய்யப்பட்டு, மர்மமான முறையில் இறந்துவிட்டார். இப்படி இதுவரை மர்ம மரணம் அடைந்தது 36 பேர். கவர்னருக்கே இதில் தொடர்பு இருப்பதாக வழக்கு போடப்பட்டுள்ளது.

‘‘இப்போது உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விசாரணை நடக்கிறது. இதுவரை இந்த ஊழலின் சூத்திரதாரிகளை போலீஸ் நெருங்கவில்லை. உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் மட்டுமின்றி பல நீதிபதிகளின் வாரிசுகளும் உறவினர்களும்கூட இதில் பலன் அடைந்திருக்கிறார்கள். அதனால்
விசாரணை எப்படிப் போகும் என்பது தெரியவில்லை. இதில் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த பலருக்குத் தொடர்பு இருக்கிறது. மர்ம மரணங்களுக்குப் பின்னணியை போலீஸ் ஆராயவில்லை’’ என்கிறார் சதுர்வேதி.

இந்த ஊழலை அம்பலப்படுத்திய தினத்திலிருந்து இவருக்குக் கொலை மிரட்டல் வருகிறது. போலீஸ் பாதுகாப்பு கேட்டபோது, ‘மாதம் 50 ஆயிரம் ரூபாய் தருவதாக இருந்தால் பாதுகாப்பு தருவோம். இல்லாவிட்டால் எங்கும் வெளியில் வராமல் வீட்டில் இரு’ என பதில் தந்தது போலீஸ்.பிறகு கோர்ட் உத்தரவிட்டதும் போலீஸ் பாதுகாப்பு கிடைத்தது. சதுர்வேதி ஒரு சைக்கிளில் போக, அவருக்கு பாதுகாப்பாக ஒரு கான்ஸ்டபிள் இன்னொரு சைக்கிளில் வருவார். அந்த கான்ஸ்டபிள் கண்ணெதிரிலேயே ஆறு முறை சதுர்வேதி மீது தாக்குதல் நடந்தது. அவர் வேடிக்கை மட்டுமே பார்த்தார்.

‘‘இப்போது துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை எனக்கு வாழ்நாள் முழுவதும் தரச் சொல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரம்கூட என்னை கண்டம் துண்டமாக வெட்டிப் போடப் போவதாக, என் பாதுகாப்புக்கு வரும் கான்ஸ்டபிளிடம் வந்து சொல்லியிருக்கிறார்கள் சிலர். மரணம் பற்றி எனக்கு பயமில்லை. 14 முறை பிழைத்துவிட்டேன். அடுத்த மர்ம மரணம் எனக்கு நிகழலாம். ஆனால் அதற்கு முன் இதில் சம்பந்தப்பட்ட பெரிய மனிதர்கள் அத்தனை பேரையும் அம்பலப்படுத்த வேண்டும், முதல்வர் உட்பட! இல்லாவிட்டால் என் ஐந்து ஆண்டு உழைப்பு விழலுக்கு இறைத்த நீர்!’’ நீண்ட பெருமூச்சோடு சொல்லி விட்டு சைக்கிளை மிதிக்கிறார் ஆஷிஷ் சதுர்வேதி.

தவறிழைததவர்கள் சட்டத்துக்குப் பயந்து ஓடியது அந்தக் காலம். சட்டத்தின் மேலேயே நின்றுகொண்டு தகிடுதத்தங்கள் புரிவது இந்தக் காலம். ஆஷிஷ் சதுர்வேதி போல இன்னும் எத்தனை பேர் நிஜ வாழ்வில் உயிரைப் பொருட்படுத்தாமல்இப்படிப் போராட வருவார்கள்?

Related Images: