வரும் ஆகஸ்ட் 17 அன்று நடக்கவிருக்கும் இலங்கைத் தேர்தலில் ராஜபக்சே பிரதமர் பதவிக்காகப் போட்டியிடுகிறார். ஏற்கனவே இருமுறை ஜனாதிபதியாகிவிட்டதால் மூன்றாம் முறை ஜனாதிபதியாக நிற்க இயலாது எனவே பிரதமராக நிற்கிறார் ராஜபக்சே.

2012ல் இலங்கையின் தேசிய ரக்பி ஆட்ட வீரரான வாசிம் தஜூதீனின் கார் ஒரு சுவற்றில் மோதி வெடித்து எரிந்ததில் கொல்லப்பட்டார். ஆக்சிடெண்ட் என்று முடிக்கப்பட்ட அந்த வழக்கை மீண்டும் தோண்டியெடுத்த சிரிசேனா அரசு அவர் கொல்லப்பட்டார் என்கிற சந்தேகத்தைக் கிளப்பியது.

வாசிம் ஆடிய தேசிய அணியின் கேப்டனாக இருப்பவர் ராஜபக்சேவின் இரண்டாவது மகன் யோஷிதா. அமைச்சர் ரஜிதா சேனரத்னே வாசிம் ராஜபக்சேவின் சிறப்பு பாதுகாப்புப் படையினரால் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார் என்று சந்தேகம் கிளப்பியதும் கோர்ட் உத்தரவின் பேரில் புதைக்கப்பட்ட அவரது உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. அவருடைய கழுத்தில் கூர்மையான ஆயுதம் தாக்கிய தடம் உள்ளதாலும் உடலில் பல இடங்களில் வலுவான ஆயுதம் கொண்டு அடித்த தடங்களாலும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தேர்தல் நேரத்தில் இந்த விஷயம் கிளம்புவது ராஜபக்சேவுக்கு பாதகமானது என்கிறார்கள். ஈழத்தமிழர்கள் ரணில் விக்ரமசிங்கேவுக்குத் தான் ஆதரவளிப்பார்கள். ஆனால் புத்தமத சிங்களர்களிடையே ராஜபக்சேவுக்கு 36 சதவீதம் வாக்கு உள்ளது. ரணிலுக்கு 31 சதவீதம் தான் உள்ளது.

இதில் ஈழத்தமிழரின் எதிர்காலம் என்ன ? இலங்கை ராணுவத்தினரை சர்வதேசம் விசாரிப்பதை நாங்கள் ஒருபொழுதும் அனுமதியோம் என்று ரணில் தெளிவாக உலகிற்கு சொல்லிய பிறகு, உள்நாட்டு விசாரணை முறையை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று ஐ.நா அதிகாரி எனும் போர்வையில் அமெரிக்கா சும்மாகாச்சுக்கும் மிரட்டியது. பின்னர் உள்நாட்டு விசாரணையே பெரிய விஷயம் என்பது போல நிறுத்திக்கொண்டது. இலங்கையோடு ராணுவ-வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியாவும் சீனாவும் ஏற்படுத்திக்கொண்டுள்ளன. எனவே ஈழத்தமிழருக்கு இவர்களால் எள்ளளவும் பயன் ஏற்படப்போவதில்லை.

இருக்கும் பழைய தலைகள் நம்பிக்கையூட்டாத நிலையில், புதிய நேர்மையான அரசியல் தலைமைகளை முன்னெடுக்கும் பொறுப்பு ஈழத்தமிழ் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் இருக்கிறது. இந்தியாவாலும் , மேற்குலகத்தாலும் ஆளப்படுகிற தமிழர்களின் பிரதான கூட்டமைப்பினை கடந்து புதிய குரல்கள் அடையாளம் காணப்படவேண்டும். அது இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கையில் தான் உள்ளது.

Related Images: