கன்ஸ்யூமர்ஸ் அசோஷியேஷன் ஆஃப் இந்தியா (சிஏஐ) எனப்படும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகிறது. நுகர்வோர் பாதுகாப்புக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக குரல் கொடுத்து வருகிறது இந்த அமைப்பு. பெரும் நிறுவனங்கள் செய்யும் எண்ணெய் கலப்படம் குறித்து இந்த அமைப்பின் துணை இயக்குநர் எம்.ஆர்.கிருஷ்ணன் கூறியதாவது:

“சென்னை, விழுப்புரம், சேலம், தருமபுரி, திருச்சி, ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் 14 நிறுவனங்களின் கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்களை எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் சோதனை செய்தனர். தமிழக சுகாதாரத் துறையின் கீழ் இயங்கிவரும் சென்னை கிண்டி கிங்க்ஸ் பரிசோதனைக் கூடம் உட்பட 3 பரிசோதனைக் கூடங்களில் இவை சோதனை செய்யப்பட்டன. அவற்றின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

‘கடலை எண்ணெய்’ என்று விற்கப்பட்ட 4 பிராண்டுகளின் பாக்கெட்களில் முழுக்க பாமாயில் மட்டுமே இருந்தது. ஒரு பாக்கெட் டில் பருத்திவிதை எண்ணெய் மட்டுமே இருந்தது. ஒரு பாக்கெட் டில் 90 சதவீதம் பாமாயில், 10 சதவீதம் கடலை எண்ணெய் இருந் தது. ஒரு சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்டில் 50 சதவீதம் பாமாயில், 50 சதவீதம் பருத்திவிதை எண்ணெய் இருந்தது.

சமையல் எண்ணெய் பாக்கெட்டில் அக்மார்க் முத்திரை கட்டாயம் என உணவு பாதுகாப்பு விதிமுறை உள்ளது. ஆனால், 42 சதவீத சமையல் எண்ணெய் பாக்கெட்களில் அக்மார்க் முத்திரை இல்லை. உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகள் 2011-ன்படி அனைத்து உணவுப் பொருள் பாக்கெட்களிலும் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) குறியீடு, உரிமம் எண் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால், 79 சதவீத சமையல் எண்ணெய் பாக்கெட்களில் அந்த குறியீடு இல்லை. 64 சதவீத பாக்கெட்களில் உரிமம் எண் இல்லை. கலப்படம் இல்லாத சுத்தமான கடலை எண்ணெய் ஒரு லிட்டர் விலை ரூ.105 முதல் ரூ.120 வரை உள்ளது. ஒரு லிட்டர் பாமாயில் விலை ரூ.52 மட்டுமே. அதனால், பாமாயிலை நிறம், மணம் நீக்கி ரீஃபைண்டு செய்து, கடலை எண்ணெய் என்ற பெயரில் அதிக விலைக்கு விற்று மோசடி செய்கின்றனர்.” இவ்வாறு எம்.ஆர்.கிருஷ்ணன் கூறினார்.

இதில் அதிர்ச்சி சமையல் எண்ணெய்களில் செய்யப்படும் கலப்படம் மட்டுமல்ல. இந்தக் கலப்படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்யும் பிராண்டட் கம்பெனிகள் செய்வது தான் இதில் அதிர்ச்சியான விஷயம். இதை ஏன் எந்த நீதிமன்றமும் கேள்விக் குள்ளாக்கவில்லை? என்று நீங்கள் கேட்டால் உங்களுக்குப் பதில் ‘காசு குடுத்து எங்களை கவனிப்பது யாரு?’ என்பதே. காசு கொடுப்பவர்களுக்கு சட்டம் விசுவாசமாக கண்டுகொள்ளாமல் இருக்கிறது. அவ்வளவு தான்.

Related Images: