‘‘வேலைநிறுத்தங்களின் மூலம் இந்திய நாட்டின் பொருளாதார நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தி விடாதீர்கள்! ’’ –
இது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் வார்த்தைகள். ஜூலை 20, 21 (2015) தேதிகளில் நடைபெற்ற இந்தியத் தொழிலாளர் மாநாட்டில் (மி.லி.சி) ஆற்றிய உரை இது. செப்டம்பர் 2 அன்று இந்தியாவிலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் நடத்தப் போகிற நாடு தழுவிய வேலைநிறுத்தம் பற்றியே அவர் இப்படிக் கூறினார்.
இதுபோன்ற “பன்ச்” டயலாக்குகளை அமைச்சர்களும், கார்ப்பரேட் ஊடகங்களும் பேசுவார்ககள். தேச நலன், பொருளாதார வளர்ச்சி, தொழிலின் எதிர்காலம்,மக்களுக்குப் பாதிப்பு … என நிறைய ஸ்டாக் வைத்திருக்கிறார்கள்.
“ஆமாப்பா! எதற்கெடுத்தாலும் ஸ்ட்ரைக் … போராட்டம்னா நாடு எப்படிப்பா உருப்படும்?” என பஸ் ஸ்டாப்புகளில், பார்க்குகளில், ரயில் பயணங்களில் பலரையும் பேசவைப்பதே இப்பிரச்சாரத்தின் நோக்கம்.
உண்மையில் இவ் வேலைநிறுத்தம் யாருக்காக? இது முன்வைக்கிற கோரிக்கைககள் தேச நலனுக்கு உதவுமா? இக் கேகள்விகளை விவாதிப்போம் வாருங்ககள்.
யாரையா அந்தப் பொதுஜனம் ?
பொதுவாக வேலைநிறுத்தம் என்றாலே, பொதுமக்களுக்கு என்ன பயன் ? என்று கேட்கிறார்ககள். அரசாங்கமும் இக்கேள்வியை தொழிற்சங்கங்களுக்கு எதிராக முன்வைக்கிறது. தொழிற்சங்கங்ககள் முன்வைத்திருக்கிற கோரிக்கைகளை வாசித்துப் பாருங்ககள். முதல் கோரிக்கையே, விலைவாசியைக் கட்டுப்படுத்து; அனைவருக்குமான பொது விநியோகத்தை அமலாக்கு என்பதுதான். இரண்டாவது கோரிக்கை வேலைவாய்ப்புகளை உருவாக்கு என்பது. இக்கோரிக்கைககள் பொதுமக்களுக்கு சம்பந்தமில்லாதது என்றால் யாரையா நீங்க சொல்கிற பொதுஜனம் என்றுதான் கேட்கவேண்டும்.
இந்திய அரசாங்கத்தின் கணக்கை எடுத்துப் பாருங்ககள். 31 கோடி பேர் முழு நேர உழைப்பாளிககள். 9 கோடி பேர் அரைகுறை உழைப்பாளிகள். (அதாவது வருடத்திற்கு 183 நாட்களுக்கு மேல் வேலை கிடைக்காதவர்ககள்). இவ்வேலைநிறுத்தம் முன்வைக்கிற இன்னொரு முக்கியமான கோரிக்கை இந்த 40 கோடி பேருக்கும் சமூகப் பாதுகாப்பு வேண்டுமென்பதுதான். இவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக ரூ 15000 நிர்ணயிக்கப்படவேண்டும் என்பதுதான். 40 கோடி பேர் என்றால் அவர்களை நம்பியிருக்கிற குடும்பத்தினர் எத்தனை பேர். இவ்வளவு பேரும் நீங்ககள் சொல்கிற பொது ஜனத்திற்குகள் வரமாட்டார்ககள் என்றால் யாரையா பொதுஜனம்! அவர்கள் என்ன வேறு கிரக வாசிகளா? ஏதாவது பாதாள லோகத்தில் பதுங்கியிருப்பவர்களா !? எனவே பொது ஜனம் என்று சொல்வது ஏதோ அவர்கள் விரலை வைத்து அவர்கள் கண்களையே குத்துகிற உத்தியோ என்றே தோன்றுகிறது.
அதற்கு ஒரு உதாரணம் மத்திய பி.ஜே.பி அரசின் “விட்டுக் கொடுங்கள்’’ (give up subsidy) பிரச்சாரம். குடிசைகளிலும், கிராமங்களிலும் மரச் சுகள்ளிகளை வைத்து அடுப்பெரிக்கிற தாய்மார்ககள் புகை மண்ட, கண்ககள் கரிக்க படுகிற துயரத்தை மனமுருக பிரதமர் பேசுகிறார். நீங்கள் ஏன் கேஸ் மானியத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என நடுத்தர வர்க்கத்தைப் பார்த்துக் கேட்கிறார். அம்பானி கூட மனம் கசிந்து கேஸ் மானியத்தை விட்டுக் கொடுத்துவிட்டார் என்பது செய்தி. மாதச் சம்பளத்தில் மூச்சுத் திணற குடும்பம் நடத்துகிற ஒருவர் வருடத்திற்கு 1200 ரூபாயை விட்டுக் கொடுப்பதும், மும்பை கடற்கரையில் 27 மாடி மாளிகையைக் கட்டியிருக்கிற முகேஷ் அம்பானி 1200 ரூபாய் கேஸ் மானியத்தை விட்டுக் கொடுப்பதும் ஒன்றா? பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தவுடன் போட்ட முதல் பட்ஜெட்டிலேயே கார்ப்பரேட் வரிகளை 33 சதவீதத்தில் இருந்து 25 சதவீதத்திற்கு படிப்படியாக குறைப்பது என்று அருண் ஜெட்லி அறிவித்தாரே! அதில் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் அம்பானிக்கு வருடத்திற்கு கிடைக்குமே. அதை ‘‘கிவ் இட் அப்’’ என்று அம்பானி விட்டுக் கொடுப்பாரா? ஒரே ஆண்டில் பிரதமரின் ஆத்ம நண்பர் அதானியின் சொத்து மதிப்பு ஒன்றரை மடங்கு அதிகமாகி நாட்டின் முதல் பத்து பணக்காரர்களில் ஒருவராக மாறியிருக்கிறாரே! அவ்வளவு லாபத்தில் அரை வருச, கால் வருச வருமானத்தையாவது ‘‘கிவ் இட் அப்’’ என அதானி கொடுப்பாரா!
இப்படியெல்லாம் விட்டுக் கொடுத்தால் சுள்ளி அடுப்பை மாற்றுவது என்ன, அறுசுவை உணவே கொடுக்கலாமே! காற்றே இல்லாமல் வீட்டுக்கு வெளியே வெட்டவெளியில் தூங்குபவர்களுக்கு ஃபேன் கொடுக்கலாமே! அழுகிப்போன காய்கறியையும், கெட்டுப்போன பாலையும் சாப்பிடாமல் இருக்க ஃபிரிட்ஜ் தரலாமே! இதற்கெல்லாம் ‘‘கிவ் இட் அப்’’ என மனமுருக பிரதமர் அம்பானியிடமும், அதானியிடமும் கேட்கலாமே!
ரூம் போட்டு யோசிக்காமலேயே பளிச்சுன்னு ஒரு உண்மையை சொல்லலாம். ரூ.15000 குறைந்த பட்ச வருமானத்தை தராமல் இருப்பதும், கேஸ் மானியத்தை “கிவ் இட் அப்” என நடுத்தர வர்க்கத்திடம் கேட்பதும் எதை நிரப்புவதற்கு? யாருடைய பைகளுக்காக? சொல்லுங்கள் பார்ப்போம்! இதையெல்லாம் செப்டம்பர் 2 வேலைநிறுத்தம் பேச இருக்கிறது.
பெட்ரோல் விலை சர்வதேச சந்தையில் ஏறினால் இங்கே எப்படி ஏறாமல் இருக்கும் என்று முந்தைய காங்கிரஸ் ஆட்சி கேட்டது வினயம். இன்றோ சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இங்கே எக்ஸ்சைஸ் வரிகளைப் போட்டு விலையை குறையாமல் பார்த்துக் கொகள்வது விசமம். யாரிடமிருந்து பறிக்கப்படுகிறது, யார் பைககள் நிரம்புகின்றன என்பதை விவாதிக்கிற கோரிக்கைககள் வேலை நிறுத்தத்தில் முன்வைக்கப்பட்டுகள்ளன.
அண்ணாத்த ஆடுறான் ஒத்திக்கோ…
‘‘வேலை நிறுத்தங்கள் தொழில் வளர்ச்சியை பாதித்து விடக் கூடாது’’ என்பது அருண் ஜேட்லியின் கவலை. இவ் வேலைநிறுத்தமும் வளர்ச்சியைப் பற்றி விவாதிக்கிறது. எது வளர்ச்சி? யாருடைய வளர்ச்சி ?
நமது பிரதமர் ஜப்பானுக்கு போனபோது ‘‘ட்ரம்’’ வாசித்தார். அவரின் இசை ஈடுபாடு பற்றி எழுதி மகிழ்ந்தன ஊடகங்கள். உள்நாட்டிலோ மாஜிக் மன்னன் சர்க்காருக்கு நம் பிரதமர் சவால் விடுகிறார். ஆமாம். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கடைசி ஆண்டில் 4.6 சதவீத ஜி.டி.பி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) வளர்ச்சியை தனது மந்திரக் கோல் அசைவால் 6.7 சதவீதமாக மாற்றிவிட்டார். தொழில், விவசாயம், சேவை என்கிற ஜி.டி.பி_யின் மூன்று துறைகளும் கடந்த ஆண்டில் வளரவில்லை. ஆனால், மோடி அளவு கோல்களை தந்திரமாக மாற்றி வளர்ச்சியை அதிகமாக காண்பித்துவிட்டார்.
இப்போது அடுத்த ஆண்டிற்கு 7.4 சதவீதம் வளர்ச்சி என அறிவித்துள்ளார். கமல் காலை மடக்கி ‘‘உன்னை நெனைச்சு பாட்டுப் படிச்சேன்’’ என்று சோகமாக பாடினால் அப்பு. அதே கமல் கால்கட்டை அவிழ்த்து ஆடினால் அண்ணாத்தே ஆடுறான் ஒத்திக்கோ.. ஒத்திக்கோ… ஜி.டி.பியும் மோடியின் டைரக்சனில் காலை மடக்கி ஆடு என்றாலும் ஆடுகிறது. விரித்து ஆடு என்றாலும் ஆடுகிறது. அதுமாதிரிதான் 4.6 என்பதும், 6.7 என்பதும்…
இன்னொரு விசித்திரம். வேலை நிறுத்தம் அறிவித்தவுடன் ‘‘வளர்ச்சி.. பாதிப்பு’’ என்பார்கள். வேலைநிறுத்தம் அன்று ‘‘பிசுபிசுத்தது’’ ‘‘மாமூல் வாழ்க்கை பாதிக்கவில்லை’’ என்பார்ககள். முடிந்தவுடன் ‘‘ஒருநாள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு இழப்பு’’ என்று தொழிலதிபர்கள் அமைப்புககள் அறிக்கை விடும். காட்சிக்கு காட்சி மாறுகிற டயலாக்குககள் ஒவ்வொன்றுக்கும் ஒரு நோக்கம் உள்ளது. வளர்ச்சி என்ற வார்த்தையில் அதிகம் மயங்குபவர்ககள் படித்த, உயர் நடுத்தர, நுனி நாக்கு ஆங்கிலக் காரர்கள்தான். வளர்ச்சி என்றால் என்ன? நிறைய பேருக்கு வாழ்வு கிடைக்கவேண்டும். பெரும்பான்மை மக்களின் வருமானம் அதிகரிக்க வேண்டும். இதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் யார் வருமானம் அதிகரிக்க இந்த மோடி, காங்கிரஸ் அரசுகள் வேலை செய்திருக்கின்றன?
ஐ.டி.வேலைப் பறிப்புகள்
ஜனவரி 17, 2015_ல் டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் ‘‘டெக் வளாகங்களில் 25000 இளஞ்சிவப்பு சீட்டுகள்… இன்னமும் எண்ணுவது நிற்கவில்லை’’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை. சாப்ட் வேர் நிறுவனங்களில் பல்லாயிரக் கணக்கான ஊழியர்களின் வேலை பறிபோவது பற்றி அதில் எழுதப்பட்டிருந்தது. ஐ.பி.எம், டெல், சிஸ்கோ, எச்.பி, டி.சி.எஸ் நிறுவனங்களில் இருந்து பணிப்பாதுகாப்பு இல்லாமல் துப்பிச் சிதறும் கரும்புச்சக்கை போல ஊழியர்கள் தூக்கி எறியப்படுகிறார்கள். 2014 ல் யாகூ நிறுவனம் தனது பெங்களுரு அலுவலகத்தில் பெரும்பான்மை ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது. வாழ்க்கை பற்றிய கனவுகளோடு வரும் இளைஞர்களை 30 வயதுக்குகள் சீட்டுக் கிழிப்பது எவ்வளவு குரூரம்! பணிச்சுமையின் அழுத்தம் மனப் பிறழ்வுகளை உருவாக்குகிறது என்பதற்கு எவ்வளவு உதாரணங்ககள்! மனக்குமுறல்ககள் முக பாவனையில், முணுமுணுப்புகளில் வெளிப்பட்டால் கூட அடுத்த நிமிடம் கம்ப்யூட்டர் ஆக்சஸ் துண்டிக்கப்பட்டு, இமெயிலில் பணிநீக்க ஆணையை அனுப்பப்படுகிற அராஜகங்ககள் எத்தனை. கிங் பிஷர் ஏர்லைன்ஸ் வீழ்ச்சிக்கு யார் காரணம்? சத்யம் நெருக்கடிக்கு காரணம் யார்? விஜய் மல்லையாக்களும், ராமலிங்க ராஜுக்களும்தானே! இங்கேயெல்லாம் தொழிற்சங்கங்கள் இல்லை. ஜிந்தாபாத் கோசங்கள் இல்லை. வேலை நிறுத்தங்கள் இல்லை. ஆனால் நிறுவனங்ககள் வீழ்ந்தன. அப்படி எனில் யார் வளர்ச்சியின் எதிரிகள்? கடிவாளம் இல்லாத குதிரை கண்மூடித்தனமாக ஓடுகிறது. முட்டித் தகள்ளுகிறது. காலில் மிதிக்கிறது.
வேலை நிறுத்தம்தான் வளர்ச்சியை பாதிக்கிறது என்று சொல்பவர்கள் கொஞ்சம் அரசின் புள்ளி விவரங்களைப் பாருங்கள். 1981-_90 காலத்தில் மனித உழைப்பு நாட்கள் இழப்பில் வேலைநிறுத்தமே 53 சதவீதக் காரணமாக இருந்தது. 1990_-2000_ல் மனித நாட்கள் இழப்பிற்கு நிர்வாகங்களின் லாக் அவுட் தான் 60 சதவீத காரணமாக மாறிவிட்டது. 2002-_2005 காலத்தில் கம்பெனிகள் செய்த ‘லாக் அவுட்’ 74 சதவீத மனித உழைப்பு நாட்கள் இழப்பிற்கு காரணமாக உயர்ந்துள்ளது.
செயற்கை கண் இரக்கம்
ஒரு தொழிலதிபர் இடதுபக்கம் செயற்கை கண்ணை பொருத்தினார். அவருக்கு சந்தேகம். பார்ப்பவர்களுக்கு வித்தியாசம் தெரியுமா என்று. ஒரு தொழிலாளியை அழைத்து நான் ஒரு கண்ணில் செயற்கை கண்ணை பொருத்தியிருக்கிறேன், எது என்று தெரிகிறதா? என்று கேட்டார். அவன் சற்றும் தயங்காமல் இடது கண்தான் என்றான். எப்படி சரியாகக் கண்டுபிடித்தாய்? கேட்டார். முதலாளி! அக்கண்ணில்தான் கொஞ்சம் இரக்கம் தெரிகிறது என்றானாம். தனியார் மூலதனத்திடம் லாப நோக்கம்தான் இருக்குமே தவிர இரக்கம் இருக்காது என்று விளக்குகிற கதை.
தற்போது ரூ.15000ஐ குறைந்தபட்ச ஊதியமாக தருவதில் அரசுக்கு என்ன பிரச்சினை? அதைக் கொடுக்க வேண்டுமானால் எங்கேயிருந்து எடுப்பது? தொழிலகங்களின் லாபத்தில் இருந்துதான். அமெரிக்காவில் ஊதிய வேறுபாடு விகிதம்- அதாவது, கீழ்நிலைச் சராசரி ஊழியர் ஊதியத்திற்கும், உச்சபட்ச நிலை எக்சிகியூடிவ் ஊதியத்திற்கும் இடையேயான வித்தியாசம் 373 மடங்குககள். இந்தியாவில் சில நிறுவனங்களில் 2920 மடங்குககள் கூட உள்ளது. (உ.ம்: -டெக் மகேந்திரா). மேட்டில் இருந்து எடுத்துதான் பள்ளத்தில் போட முடியும். இவர்கள் தோண்டுவதிலேயே குறியாக இருக்கும்போது எப்படி நிரப்புவார்கள். மத்திய அரசு அண்மையில் குறைந்தபட்சக் கூலியாக ரூ 160 அறிவித்துள்ளது. 30 நாட்களும் வேலை பார்த்தாலும் ரூ.4800 தான் மாதத்திற்கு கிடைக்கும்.
உலகமய போதை..
கிராமங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான ஒதுக்கீடு வெட்டப்பட்டதால் மொத்தமுள்ள 6576 ஒன்றியங்களில் 2500ல் மட்டுமே அமலாகிறது. அண்மையில் வெளியான அரசின் சமுக, பொருளாதார மற்றும் சாதி ஆய்வு தருகிற தகவல் என்ன! இந்தியக் கிராமங்களில் 90 சதவீதமான குடும்பத் தலைவர்களின் ஊதியம் ரூ.10000 க்கு கீழே உள்ளது. 74 சதவீத குடும்பத் தலைவர்களின் ஊதியம் ரூ.5000 க்கும் கீழே. கிராமங்களின் தற்கொலைககள் 26 சதவீதம் அதிகரித்துள்ளன. அரசாங்கம் என்ன சொல்கிறது? அது தற்கொலைகளை ஆய்வு (?) செய்துள்ளது. விவசாய நெருக்கடியால் எத்தனை பேர்? குடும்பப் பிரச்சினைகளால் எவ்வளவு பேர்? குடிப் பழக்கத்தால் எவ்வளவு பேர்? இப்படிப் பட்டியல் போட்டு விவசாய நெருக்கடியால் தற்கொலைகள் செய்வது குறைந்துவிட்டது என்று கண்டுபிடித்துள்ளது. விவசாய நெருக்கடி வேறு.. குடும்ப பிரச்சினை வேறு… என்று பிரிக்கிற இவர்களின் ஞானத்தை என்ன சொல்வது! குடிப் பழக்கத்திற்கும், வாழ்க்கை சோகத்திற்கும் சம்பந்தமில்லை என்பது என்ன தெளிவோ! உலகமய போதை போலிருக்கிறது. எல்லாம் ரெண்டு ரெண்டாய்த் தெரிகிறது.
தேசம், மக்கள், வளர்ச்சி ..கடுகு, மிளகு, வத்தல்.
பி.ஜே.பி யின் தேர்தல் அறிக்கையில் “விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உற்பத்திச் செலவினத்தை விட 50 சதவீதம் அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்போம்” என வாக்குறுதி தரப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் 50 சதவீதம் என்பதற்குப் பதிலாக குவிண்டால் அரிசிக்கு ரூ 50 ருபாய் கூடுதலாக தந்தார்கள். உச்ச நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக ஒரு பொது நல வழக்கு வந்தது. மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், “உற்பத்திச் செலவினம் + 50 சதவீதம் என்பதெல்லாம் சந்தையை தகர்த்து விடும்” என்று கதவை மூடிவிட்டார். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆகிற குவிண்டால் கோதுமைக்கு 225 டாலர் அதாவது ரூ 1625 தருகிற அரசாங்கம் இங்கே உள்ள விவசாயிக்கு 200 ருபாய் குறைவாகத் தருகிறது. அது சந்தையின் ஜீவன். விவசாயிகளின் ஜீவன்களைப் பற்றி என்ன கவலை! தேசம், மக்கள், வளர்ச்சி என்பதெல்லாமே இவர்களுக்கு சந்தையில் உள்ள கடுகு, மிளகு, வத்தல் மாதிரிதான்.
இப்படிக் கிராமங்களில் இருந்து வாழ்வு தேடி நகரத்திற்கு அத்தக் கூலிகளாக வருபவர்களை ரூ 100க்கும், 200க்கும் சக்கையாய் பிழிய முடிகிறது. வறுமை, வேலை இல்லாமை எல்லாம் இருந்தால்தான் இப்படி ஆட்ககள் கிடைப்பார்ககள். லாபப் பெருக்கத்திற்கான இந்த ஏற்பாட்டையே செப்டம்பர் 2 வேலை நிறுத்தம் கேள்வி கேட்கிறது.
பொன்மகள் வந்தாள் – வெளிநாட்டிலிருந்தா வந்தாள் ?!
‘மேக் இன் இந்தியா’ என்பது பி.ஜே.பி அரசின் கவர்ச்சிகரமான முழக்கம். இந்தியாவுக்கு வாருங்கள்… என்று அழைப்பு விடுத்தவுடன் “பொன்மகள் வந்தாள்” என முதலீடுககள் வானத்தில் இருந்து கொட்டுமென்று கனவுகளை உலவவிட்டார்கள். மேக் இன் இந்தியா நடந்தேற என்னென்ன தேவை? ஆதாரத் தொழில் வளர்ச்சி தேவை. அதற்கான நிதியாதாரங்கள் தேவை. இந்திய ரயில்வேக்கு அடுத்த ஆண்டுகளில் 1,50,000 கோடிகள் தேவை என்றால் யார் கதவைத் தட்டுவது? பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியின் வாசலில்தான் நின்றார்கள். வட்டி எவ்வளவு என்று கூட இறுதி செய்யாமல் இவ்வளவு பெரிய தொகைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடமுடியுமா! போட்டார்ககள். அந்நிய முதலீட்டை நம்பி ஆதாரத் தொழில் வளர்ச்சியை எட்ட முடியாது; உள்நாட்டுச் சேமிப்பே உறுதியான வழி என்பது மீண்டும் நிரூபணமானது.
அடுத்த தேவை சந்தை விரிவாக்கம். ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் ‘‘மேக் ஃபார் இந்தியா’’ என்றார். என்ன அர்த்தம்? மோடி சொல்வது ‘‘இந்தியாவில் உருவாக்கு’’, ரகுராம் ராஜன் சொல்வது ‘‘இந்தியாவுக்காக உருவாக்கு’’. உள்ளூர் மாடு வெளியூரில் விலை போகாது என்கிற பழமொழி உலகமயத்திற்கும் பொருந்தும். உள்நாட்டுச் சந்தையை விரிவுபடுத்தாமல் உலக சந்தையைப் பிடிக்க முடியாது. இப்போது இந்தியாவின் ஜி.டி.பி 2 ட்ரில்லியன் டாலர்கள். சீனாவின் ஜி.டி.பியோ 11 ட்ரில்லியன் டாலர்ககள். இந்தியாவின் ஜி.டி.பி யில் தொழில் துறையின் பங்கு 16 சதவீதம்தான். சேவைத்துறையே 57 சதவீதம். ஆனால் சீனாவிலோ தொழில்துறை 34 சதவீதம். தொழில்துறை சார்ந்த வருமானம் வளர்ச்சி அடைந்தால் அது உள்நாட்டு உற்பத்திக்கான சந்தையை உருவாக்கும். சேவைத்துறை சார்ந்த வருமானம் அதிகரித்தால் வெளிநாட்டு பொருட்களின் நுகர்வையே பெருக்கும். சென்னை ஒ.எம்.ஆர் ரோடு, இ .சி .ஆர் ரோடுகளைச் சுற்றிப் பார்த்தால் இதை பளிச்சென்று பார்க்க முடியும். எனவே வளர்ச்சியின் சதவீதத்தை விட வளர்ச்சியின் தன்மை முக்கியம். இதுவே சீனாவின் பலம். இந்தியாவுக்கு பாடம். ஒருமுறை அன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் “நாங்ககள் சீனாவைப் பார்த்து பொறாமைப் படவில்லை. அதனை பின்பற்றவே விழைகிறோம் என்றார். ஆனால் அதைச் செய்யவில்லை.
செத்தும் கொடுத்த மாடு!!
ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி என்பதே மத்திய அரசின் இலக்கு. ஆனால் உலகளாவிய மந்தம் இந்தியாவின் ஏற்றுமதி வாய்ப்புகளையும் பாதித்துள்ளது. ஒரு விசித்திரமான உண்மை. பசுவின் புனிதம் பேசி மாட்டுக் கறியை தடை செய்கிற சட்டத்தை தாங்கள் ஆளுகிற மாநிலங்களில் கொண்டு வருகிறது பி.ஜே.பி. ஆனால் மாட்டுக் கறி ஏற்றுமதி 2014-15 ல் ரூ.28,000 கோடிகள். முந்தைய 2013-14 ஆண்டைக் காட்டிலும் ரூ 3000 கோடி ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மேக் இன் இந்தியா “சிங்கம்” இலட்சினையை “மாடு” என மாற்றிவிடலாம் போலிருக்கிறது.
இன்னொரு வேதனையான உண்மை. இவர்கள் முதலீடுகளை இந்தியாவுக்குள் கொண்டு வருவதைப் பற்றிப் பேசுகையில், இந்திய முதலீடுகள் இங்கேயிருந்து வெளியேறுவதும் நடைபெறுகிறது. ஒரு உதாரணம் பாருங்கள். ‘‘மேக் இன் இந்தியா’’ அறிவிப்பை அகம் மகிழ்ந்து வரவேற்றவர்களில் ஜெயவிலாஸ் குழுமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராம்குமாரும் ஒருவர்.
கோவிந்தராஜன் டெக்ஸ்டைல்ஸ் என்கிற கோயம்புத்தூரை தலைமையகமாகக் கொண்ட நிறுவனத்தின் சி.இ .ஓ இவர். ரூ.230 கோடி முதலீட்டை முதலில் குஜராத்திலோ, ஆந்திராவிலோ போடுவதாக இருந்தவர் அதை அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்திற்கு கொண்டு போய் விட்டார். காரணம் என்ன? இங்கு யூனிட் மின்சாரம் ரூ 6.90. வட கரோலினாவில் ரூ.3 மட்டுமே. இங்கேயிருந்து இவர்களின் ஏற்றுமதி கப்பலில் சீனாவுக்குப் போக தூத்துக்குடி துறைமுகம்- சிங்கப்பூர் வழியாக 31 நாட்கள் எடுக்கிறது. வட கரோலினாவில் இருந்து 20 நாட்களே ஆகிறது. சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு நிறையக் கப்பல்களில் ஏற்றுமதி நடப்பதால் அங்கிருந்து திரும்பும் போது கப்பல்கள் பாதியாகவோ, காலியாகவோ இருக்கின்றன. இதனால் அதில் பேரம் பேசி போக்குவரத்துக் கட்டணத்தைக் குறைக்க முடிகிறது. இதனால் கோவிந்தராஜன் 230 கோடி முதலீட்டை அமெரிக்காவில் போய் போட்டுவிட்டார். ஒரே உதாரணத்தில் எவ்வளவு படிப்பினைககள் பாருங்ககள். மின்சாரப் பற்றாக்குறைக்கு அரசின் முதலீடுககள் அத்துறையில் குறைந்தது முக்கியக் காரணம். சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால் கப்பல் போக்குவரத்திற்கான காலம் குறைந்திருக்கும். ஆனால் அது குறித்தெல்லாம் முயற்சியேதும் இல்லை.
இந்தியாவில் முதலீடுகளை ஈர்க்க இருக்கிற ஒரே அம்சம் மலிவான உழைப்பே. அது கூட மேற்கூறிய பலவீனங்களால் ஒர்க் அவுட் ஆவதில்லை. என்ன செய்வது? உழைப்பை இன்னும் மலிவாக்கு! அதற்கு எதிரான குரல்களை மௌனமாக்கு! அதற்கான உரிமைகளை முடமாக்கு! என்பதே மேக் இன் இந்தியா.
இருப்பதையும் பறிப்பதா?
தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்த முனைந்துள்ளார்கள். ‘‘சிறு தொழில்ககள் மற்றும் இதர நிறுவனங்ககள்’’ (பணி வரையறை மற்றும் விதிமுறைககள்) 2014 சட்ட வரைவு 40 தொழிலாளர்களுக்கு கீழ் பணியாற்றுகிற எந்தவொரு நிறுவனமும், மின்சாரப் பயன்பாடு இருப்பினும், இல்லாவிடினும் – தொழிலகச் சட்டம் மற்றும் 14 தொழிலாளர் சட்டங்களில் இருந்து விதிவிலக்கு பெற்றுவிடும் என்ற அம்சத்தைக் கொண்டுள்ளது. இச்சட்டங்களில் குறைந்த பட்ச ஊதியச் சட்டம், போனஸ் சட்டம், காண்ட்ராக்ட் ஊழியர் வரைமுறை மற்றும் ஒழிப்புச் சட்டம், ஊழியர் வைப்பு நிதிச் சட்டம், தொழிலாளர் அரசு காப்புறுதி சட்டம் ஆகியனவெல்லாம் உண்டு. 80 சதவீதமான தொழிலாளர்ககள் இப்பாதுகாப்புகளில் இருந்து கழற்றி விடப்படுவார்ககள்.
இருப்பதைப் பறித்தால் கோபம் வராதா! போராடுவார்கள் அல்லவா! அதற்காகத்தான் இன்னொரு அஸ்திரத்தை ஏவுகிறார்கள். அதுதான் தொழிற்சங்கச் சட்டம் 1926, தொழில் பணியமர்த்தல் (நிலையாணை) சட்டம் 1946, தொழில் தகராறு சட்டம் 1947 மூன்றையும் ஒன்றாகப் பிசைந்து உருவாக்கப்பட்டுள்ள தொழிலுறவு மசோதா.
தொழிலாளர்களில் 10 சதவீதம் அல்லது 100 பேர், எது குறைவோ, அவ்வளவு பேர் ஒன்று சேர்ந்தால் மட்டுமே புதிய தொழிற்சங்கத்தை ஆரம்பிக்க முடியும். அணிதிரட்டப்பட்ட தொழில்களில் வெளியாட்ககள் சங்கப் பொறுப்புகளில் இருக்க முடியாது. (தற்போது மூன்றில் ஒரு பங்கு இருக்கலாம்). அணிசாராத் தொழிலாளர் அமைப்புகளில் இரண்டு பேருக்கு மிகாமல் வெளியாட்கள் தலைவர்களாக இருக்கலாம். (தற்போது 50 சதவீதம் வரை இருக்கலாம்). பதிவு பெற்ற சங்கங்களில் பொறுப்பிலுள்ள ஒருவர் 10 சங்கங்களுக்கும் மேலாக பொறுப்பில் இருந்தால் தகுதி நீக்கம் அடைவார். 300 பேருக்கு குறைவாகத் தொழிலாளர்ககள் உள்ள நிறுவனங்களில் அரசின் அனுமதியின்றி அவர்களைப் பணிநீக்கம் செய்யலாம். (90 சதவீதமான தொழிலாளர்களின் பணிப்பாதுகாப்பு காலி). சட்ட பூர்வமற்ற வேலைநிறுத்தம் எனில் பங்கேற்பவர்களுக்கு ரூ 20000 லிருந்து ரூ.50000 வரை தண்டத்தொகை அல்லது ஒருமாதச் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும். ‘‘தூண்டுவோருக்கு / உதவுபவர்களுக்கு’’ ரூ.25000 லிருந்து ரூ.50000 வரை தண்டத்தொகை அல்லது ஒரு மாதச் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும். தொழிலாளர்களின் கோபங்களையும், குமுறல்களையும் அடக்குவதற்கு ஆயுதங்களையும் தயார் செய்கிறார்கள்.
குருவிகளுக்கு சாணம் கூட இல்லை
‘‘நிறுவனங்ககள் வளர்ந்தால் தொழிலாளர்களின் ஊதியம் அதிகரிக்கும்; வளமான தேசம் உருவாகும்; அது உழைப்பாளிகளின் தேவைகளை கவனித்துக் கொள்ளும்” இது இந்தியத் தொழிலாளர் காங்கிரஸ் கூட்டத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசியது. நிறுவனங்கள் வளர்ந்திருந்தாலும் ஊதிய உயர்வுப் பிரச்சினைகளில் அரசாங்கம் குறுக்கே நிற்பதை இன்சூரன்ஸ் துறையில் பார்க்கிறோம். நெருக்கடி காலங்களில் தொழிலதிபர்களின் செல்வம் பன்மடங்கு பெருகுவதையும், தொழிலாளர்களின் பங்கோ பறிக்கப்படுவதையும் எத்தனையோ தொழில்களில் பார்க்கிறோம். ‘‘குதிரைகளுக்கு ஓட்ஸ் கொடுத்தால் அது கொழுத்து சாணம் போடும்; அதைக் குருவிகள் கொத்தித் தின்னலாம் என்பதே உலகமயத்தின் சாகசவாதம். அதையே அருண் ஜெட்லி ‘நிறுவனம் வளர்ந்தால் தேசம் வளரும், தொழிலாளர் வருமானம் உயரும்’ என்கிறார். குதிரை கொழுத்தது உண்மை. ஆனால் குருவிக்கு சாணம் கூடக் கிடைக்கவில்லை.
பிரதமர் காப்பீடு திட்டம், பிரதமர் வங்கிக் கணக்கு என்றெல்லாம் அறிவிக்கிறார்ககள். விபத்துக் காப்பீட்டிற்கு வருடத்திற்கு ரூ.12, இயற்கை மரணங்களுக்கு ரூ.330 என்று வசூலிக்கிறார்ககள். இதில் அரசாங்கம் ஒரு பைசா கூட போடவில்லை. இன்சூரன்ஸ் நிறுவனங்களே பணத்தைத் தரப்போகின்றன. ஆனால் பிரதமர் என்கிற லேபில்லை இத்திட்டங்களில் ஒட்டிவிட்டார்கள். வங்கிக் கணக்கு என அறிவிக்கப்பட்டதில் 95 சதவீதமான கணக்குகளை அரசு வங்கிகளே திறந்தன. இவர்ககள் தாலாட்டிச் சீராடுகிற தனியார் வங்கிககள் குடிசைகளுக்கு, கிராமங்களுக்கு போகத் தயாராக இல்லை. தனிப்பெரும்பான்மையோடு பி.ஜே.பி அரசு அமைந்திருப்பதால் இந்த ஐந்தாண்டை தங்களுக்கு கிடைத்த ‘‘பொற்காலமாக’’ பன்னாட்டு மூலதனம் மற்றும் இந்தியத் தொழிலதிபர்கள் பார்க்கிறார்கள். 2015 பட்ஜெட்டில் தரப்பட்ட வரிச்சலுகைககள் ரூ 5,89,000 கோடிகள். வரி பாக்கிகள் ரூ 8,27,000 கோடிகள். வங்கி வராக்கடன்கள் மார்ச் 2016ல் 5,70,000 கோடிகளைத் தொடும் என்கிறார்கள். எத்தனை லட்சம் லட்சம் கோடிகள். இவற்றில் பெரும் பெரும் பகுதி கார்ப்பரேட்டுகளால் விழுங்கப்பட்டதே. ஒரு உதாரணம். 17 தனிநபர்கள் வைத்துகள்ள வரிபாக்கி மட்டுமே 2,14,000 கோடிகள் என நாடாளுமன்றத்தில் மத்திய நிதி இணை அமைச்சர் ஜெயந்த் சின்கா தெரிவித்தார். (பி.டி.ஐ – ஆகஸ்ட் 1, 2015).
இவ்வளவு லட்சம் லட்சம் கோடிகளை சுவைத்து, சவைத்து, செரிக்கிற கார்ப்பரேட்டுகளை பார்த்து ‘‘கிவ் இட் அப்’’ என்று சொல்ல முடியாத பிரதமர்தான் சமுக நலத் திட்டங்களில், பென்சனில், மானியங்களில் கைவைக்கிறார். கார்ப்பரேட்டுகளுக்கு நிலத்தை தங்கத் தாம்பாளத்தில் வைத்து தருவதே நிலம் கையகப்படுத்துகிற சட்டவரைவு. விவசாயிகளின் ஒப்புதலுக்கு கூட இடமில்லை. நிலத்தை நம்பி இருக்கிற, நிலமே இல்லாதவர்கள் 52 சதவீதமானவர்கள். அவர்களுக்கு திருவோடுதான். இப்பாதையில் சமுகநீதிக்கு இடம் கிடையாது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான துணைத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் கைவைக்கிறார்கள். பல்லாயிரம் கோடிகள் பறிக்கப்படுகின்றன.
கிரீஸ் நெருக்கடி. ‘‘சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே’’.
இன்று நாம் அனுபவிக்கிற பேச்சுரிமை, எழுத்துரிமை. வாழ்வதற்கான உரிமைகள் அனைத்துமே நீண்ட நெடிய போராட்டங்கள் வாயிலாக ஈட்டப்பட்டவை. இவற்றையெல்லாம் பறிக்கிற “இருண்ட காலத்தை, 1975 ல் சந்தித்திருக்கிறோம். ஆளுங்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி, “அவசர நிலை வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன’’ என்று அண்மையில் கூறினார். இது உண்மையான அக்கறையா! உட்கட்சிப் பூசலா! உலவ விட்டு ஆழம் பார்க்கிற உத்தியா! என ஆராய்ச்சி செய்யலாம். எனினும் ஜனநாயக மறுப்பிற்கான சூழலை வெளிப்படுத்துகிற வார்த்தைகள். பன்னாட்டு நிதி மூலதனம் தேசங்களின் இறையாண்மையை, நாடாளுமன்ற ஜனநாயகத்தை, உட்கட்சி விவாதங்களைக் கூட மௌனிக்கச் செய்கிறது.
கிரிசில் 61 சதவீதமான மக்ககள் ‘சிக்கன நடவடிக்கைகளுக்கு’ எதிராக கருத்தெடுப்பில் வாக்களித்தார்கள். ஆனால் வாக்கெடுப்பு முடிந்த ஓரிரு நாட்களுக்குள்ளாக கடுமையான சிக்கன நடவடிக்கைகளை ஏற்றுக் கொண்டு ஐ.எம். எப் – ஐரோப்பிய இணைய வங்கி – ஐரோப்பிய இணையம் என்கிற திரிசூலத்திற்கு கிரீஸ் இரையாக வேண்டியிருந்தது-. சர்வதேச மூலதனத்தின் சுருக்குக்கயிறு தேச இறையாண்மையின் கழுத்தில் விழுந்துள்ளது. ஐரோப்பிய இணையத்தைவிட்டு வெளியேறலாம்; கிரிசின் நாணயத்தை உயிர்ப்பிக்கலாம் என்பது போன்ற வலிகள் நிறைந்த ஆனால் தேச நலன் சார்ந்த மாற்றுப்பாதைக்கு அங்குள்ள ஆட்சியாளர்கள் முனையவில்லை. இந்தியாவில் இருப்பவர்களும் ‘திரிசூல’ பக்தர்ககள் அல்லவா! இதனால்தான் இவர்களே ஆறு ஆண்டுகளாக எதிர்த்த இன்சூரன்ஸ் அந்நிய முதலீட்டு மசோதாவை ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் கொண்டு வந்தார்கள். அதை ஆதரிக்கத் தயங்கிய காங்கிரசும் நாடாளுமன்றத்தில் கடைசியில் கைதூக்கியது. ஆளுங்கட்சி_எதிர்க்கட்சி விளையாட்டெல்லாம் வீதிகளில் நடத்தப்படும் கீரி, பாம்பு சண்டை மாதிரிதான். சர்வதேச நிதி மூலதனம் – இந்தியப் பெரும் தொழிலகங்கள் மகுடி ஊதுகின்றன. நிலம் கையகப்படுத்துகிற அவசரச்சட்டம் நான்காவது முறையாக பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது. சுரங்க தனியார் மயம், அந்நிய முதலீடுகளுக்கு “ஃபாஸ்ட் ட்ராக் என்பதெல்லாம் அடுத்தடுத்து விரைவுபடுத்தப்படுகின்றன.
“உள்ளடக்கிய உலகமயம்” என்ற பெயரில் பொருளாதாரப் பாதைக்கு மனிதமுகம் இருப்பதாகச் சித்தரிக்க முந்தைய ஆட்சியாளர்கள் முயற்சித்தார்கள் “உள்ளடக்கிய இந்துயிசம்” என்ற பெயரில் மதவெறியைத் தூண்டவும், ஒடுக்கப்பட்ட மக்களை காலாட்படைகளாக சிறுபான்மையினர்க்கு எதிராக முன்னிறுத்தவும் முயற்சிக்கிறார்கள். நவீன தாராளமயப் பாதையோடு மதவெறியும் கை கோர்த்துக் கொள்கிறது. மக்களின் பிரச்சனையின் பால் எழுகிற ஒற்றுமையை சீர்குலைக்கிறது. உட்கட்சி விவாதங்களுக்குரிய ஜனநாயகம் கூட மறுதலிக்கப்படுகிறது. அந்நிய முதலீடுககள் குறித்து பி.ஜே.பி.யின் முன்னாகள் இராஜ குருக்களில் ஒருவரான கோவிந்தாச்சார்யாவின் குரல்ககள், அவ்வப்போது சுதேசி ஆட்டம் போடுகிற ஆடிட்டர் குருமூர்த்தியின் கருத்துக்கள் போன்றவை குப்பைக் கூடையில் வீசியெறியப்படுகின்றன. இம் மாற்றுக் கருத்துக்களெல்லாம் கூட அதிருப்தியை அவர்களே அறுவடை செய்கிற உத்தியாகக்கூட இருக்கலாம். ஆளுங்கட்சியின் தொழிற்சங்கமான பி.எம்.எஸ் கூட அரசின் கொள்கைகளுக்கு எதிராக வீதிகளுக்கு வருகிறது. ஒருமுறை மூத்த பி.எம்.எஸ். தலைவர் கூடச் சொன்னார். “தொழிலகங்களின் வாசல்களில் கூட மனித உழைப்பை இவர்கள் மறுத்து விடுவார்ககள். காவலாளர்களுக்குப் பதிலாக நாய்களைப் போட்டுவிடுவார்கள்’’ என்று ஆட்குறைப்பை, உரிமை பறிப்புகளைச் சாடினார். ஒருவேளை இதற்கு கூட இன்றைய அரசு அந்நிய நாய்களை வரவழைத்தாலும் ஆச்சரியமில்லை. இத்தகைய ஜனநாயகமற்ற சூழலை நோக்கி தேசம் நகர்வதை யார் தடுப்பது? “மக்களைத் தாக்குவதற்கு மக்களிடமிருந்தே இசைவைப் பெறுவது’’ உலகமயப் பாதையின் தந்திரம். கார்ப்பரேட் கைகளிலுள்ள ஊடகங்ககள் தங்களது “எஜமானர்களின் குரலை’’ எதிரொலிக்கின்றன. இவற்றுக்கெல்லாம் எதிராகப் பெருமுயற்சி தேவைப்படுகிறது.
பாவேந்தர் பாரதிதாசன் வார்த்தைகளில்
“அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
உன்னைச் சங்கமமாக்கு
மானுட சமுத்திரம் நானென்று கூவு’
-க.சுவாமிநாதன் (தமிழ்நாடு ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர்.)