தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் சா.காந்தி, மூத்த பொறியாளர்கள் சங்க தலைவர் அ.வீரப்பன் ஆகியோர் சமீபத்தில் நடத்திய கூட்டத்திற்குப் பின் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–

“தமிழ்நாடு மின்சார வாரியம் 3,300 மெகாவாட் மின்சாரத்தை சந்தை விலையை விட அதிகவிலையில் கொள்முதல் செய்ய 11 தனியார் நிறுவனங்களுடன் 15 ஆண்டு கால ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் 40 ஆயிரத்துக்கும் கோடிக்கு மேலாக இழப்பு ஏற்படும். மின்சாரம் விற்கும் எல்லா தனியார் நிறுவனங்களும் 2013–14 ஆண்டுகளில் தான் உற்பத்தியை தொடங்கியவை.

இதே காலத்தில் தொடங்கப்பட்ட வடசென்னை மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்தி யூனிட் விலை ரூ.2.87 ஆகும். ஆனால் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகின்ற மின்சார விலை ஒரு யூனிட் ரூ.4.91 ஆகும். மேலும், தேவைக்கு மிக அதிகமாகவே மின்சார கொள்முதலில் மின்சார வாரியம் ஈடுபட்டு வருகிறது. எனவே மின்சார வாரியம் பெரும் ஊழலில் சிக்கி இருப்பதாக கருதுகிறோம். எனவே மின்சார வாரியத்தின் மின் உற்பத்தி தேவை மற்றும் கொள்முதல் விவரங்களை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும்.” இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின் போது திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி உடன் இருந்தார்.

மின்சார வாரியம் பல ஆண்டுகளாகவே வேண்டுமென்றே நஷ்டத்தில் இயக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியிலும் சரி அதிமுக ஆட்சியிலும் சரி இதே நிலை தான். 2013-14 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை படி அந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நஷ்டம் 13,985 ஆயிரம் கோடி ரூபாய். தேவையான மின்சாரத்தை தனியாரிடம் வாங்குவதாகச் சொல்லப்பட்டாலும் நகரங்களில் வருடத்தில் 4 – 5 மாதங்கள் கடுமையான மின்வெட்டில் தான் மக்கள் காலம்தள்ளி வந்திருக்கிறார்கள்.
இன்றைய தேதியில் மின்சார வாரியம் அடைந்திருக்கும் மொத்த கடன் தொகை 74,113 கோடிகளாகும். இது தமிழ்நாட்டின் மொத்த கடனில் 50 சதவீத அளவு ஆகும். அரசின் கடனில் பாதியை ஒரே ஒரு நிறுவனம் வைத்திருக்கிறது.

நஷ்டங்கள் வரும் காரணம் என்ன ? ஏன் வேண்டுமென்றே தனியாரிடம் அதிக பணம் கொடுத்து அதிக அளவு மின்சாரம் வாங்கப்படுகிறது? 2013-14ல் மட்டும் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மின்சாரம் தனியாரிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது. இந்த நட்டங்களுக்கெல்லாம் வட்டி மற்றும் தண்டத்தொகைகளையும், செக்யூரிட்டிகளையும் தனியார் பாங்குகளிடமிருந்து மின்சார வாரியம் வாங்கியிருக்கிறது. இந்தக் கடன்கள் எப்போது அடைக்கப்படும் என்பது தெரியாது. அரசு மின் உற்பத்தி நிலையங்களை கண்டுகொள்வதில்லை. பழுதானால் சரி செய்வதில்லை. புதிதாக அரசு மின் உற்பத்தி நிலையங்கள் ஆரம்பிப்பதில்லை.

தமிழ்நாடு அரசு எல்லாவற்றிலும் முன்னேற்றம் என்று வாய் கிழியச் சொன்னாலும் மின் உற்பத்தியில் தன்னிறைவு அடையாத நிலையில் அதன் எதிர்காலம் தனியாரின் கைகளில் வசமாக சிக்கி இருக்கிறது. இனியொரு நாள் தமிழகத்தில் மின்சாரத்திற்கு அரசு வழங்கும் மானியம் நிறுத்தப்படும். தனியாரிடமிருந்து மக்கள் மின்சாரம் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவர். தமிழகத்தின் நலன்கள் தனியாரிடம் மொத்தமாக அடகு வைக்கப்படக்கூடும்.

Related Images: