கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளான நவம்பர் 15 ஆம் தேதியை தியாகிகள் தினமாக கடைபிடிக்கப் போவதாக அகில பாரத இந்து மகாசபையின் தலைவர் சந்திர பிரகாஷ் கெளசிக் அறிவித்துள்ளார்.

தேசப்பிதா என்றழைக்கப்படும் நமது தேசியத் தலைவர் மகாத்மா காந்தியை 1948ஆம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதியன்று சுட்டுப் படுகொலை செய்தவன் வலதுசாரி இந்துத்துவா பயங்கரவாதி கோட்சே. அதற்கு அவன் சொல்லிய காரணம் ‘காந்தி இந்துவாக இருந்தாலும் மதச்சார்பின்மை என்று சொல்லி சொல்லி முஸ்லீம்களுக்கு ஆதரவாகவே எப்போதும் இருக்கிறார்’ என்பது.

இந்த வழக்கில் கோட்சே 1949ஆம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதியன்று தூக்கிலிடப்பட்டான். இவனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட ஒரே வாரத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. மத்தியில் பாரதிய ஜனதா அரசு அமைந்ததிலிருந்தே கோட்சேவுக்கு சிலை வைப்பதும், கோட்சேவை மாபெரும் வீரனென்பதுமாக ஆர்.எஸ்.எஸ் பகிரங்கமாகப் பேசிவந்தது. தற்போது தேசத் தந்தையை படுகொலை செய்த கோட்சேவுக்கு சிலைவைப்போம் என வலதுசாரி இந்துத்துவா அமைப்பான இந்துமகா சபா கூறியிருக்கிறது.

சந்திர பிரகாஷ் கெளசிக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்து தேசியவாதியான நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்ட நவம்பர் 15-ந் தேதி தியாகிகள் தினமாக கடைப்பிடிக்கப்படும். அன்றைய தினம் நாடு முழுவதும் மாவட்ட அளவில் கோட்சே நினைவு தினம் கடைப்பிடிக்கப்படும்; ரத்ததான முகாம்கள் நடத்தி அரசு மருத்துவ மனைகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்தி படுகொலையை நியாயப்படுத்தும் புத்தகங்களும் அன்றைய தினம் விநியோகிக்கப்படும் என்று இந்து மகா சபை அறிவித்துள்ளது.

Related Images: