நாட்டின் பல்வேறு பகுதிகளில் கருத்துரிமை மீது நடைபெறும் தாக்குதல்களை அதிகாரத்தில் இருப்பவர்கள் தடுத்து நிறுத்தாமல் இருப்பது மிகப்பெரிய அநீதி என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் சாகித்ய அகடமி விருது பெற்ற கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி தீவிரவாதிகள் சிலரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தியை அறிந்ததும் கடும் கண்டனம் தெரிவித்ததை நினைவுகூர்ந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரியில், மாட்டிறைச்சியை சமைத்துச் சாப்பிட்டதாக முதியவர் இக்லாக் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ஜவகர்லால் நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டின் மகளும் பிரபல எழுத்தாளருமான நயேந்திரா ஷேகல் சாகித்ய அகாடமி விருதை திருப்பிக் கொடுத்ததையும் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார். இதை பின்பற்றி அசோக் வாஜ்பாய், சசி தேஷ்பாண்டே போன்ற எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதைத் திருப்பிக் கொடுத்தனர் என்றும்,இந்தப் பட்டியல் ஒவ்வொரு நாளும் பெருகிக் கொண்டே உள்ளது என்றும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
இவ்வளவுக்கும் பிறகு பிரதமர் மோடியிடமிருந்தோ, மத்திய அரசிடமிருந்தோ எந்தவிதமான விளக்கமோ, பதில் அறிக்கையோ இல்லை என்பது மிகவும் வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். கருத்து சுதந்திரத்தின் மீதும் நீண்டகாலமாக இந்தியாவில் பாதுகாத்துப் பராமரிக்கப்பட்டு வரும் பன்முகப் பண்பாட்டுக் கலாச்சாரத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதும் அதை தடுத்து நிறுத்தும் அதிகாரம் படைத்தோர் நமக்கென்ன என்று இருப்பதும் அநீதி மட்டுமல்லாமல் வரலாற்றில் கருப்பு அத்தியாயமாகவும் ஆகிவிடும் என்று கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.