பரப்பான சண்டைகளுடனும், திருப்பங்களுடனும் ஞாயிறன்று நடந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் இரவு முழுமையாக அறிவிக்கப்பட்டன.

3139 வாக்காளர்கள் கொண்ட இந்த தேர்தலில் 2607 வாக்குகள் மட்டுமே பதிவானது. இதில் 1824 வாக்குகள் நேரடியாகவும் 783 வாக்குகள் தபால் மூலமாகவும் பதிவானது. முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல நடிகர்களும், நடிகைகளும் வந்து வாக்களித்தனர். காயம் காரணமாக அஜித் வந்து வாக்களிக்க முடியவில்லை.

மாலை 6 மணியளவில் தொடங்கிய வாக்குகள் என்னும் பணி பின்னிரவில் முடிவடைந்தது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதையடுத்து நேரடியான செலுத்திய வாக்குகளை எண்ணினர். பாண்டவர் அணி முக்கியமான பதவிகளான தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளைக் கைப்பற்றினர்.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் வெற்றி பெற்றுள்ளார். நாசர் 1344 வாக்குகளும், எதிர்த்து போட்டியிட்ட சரத்குமார் 1231 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் 1445 வாக்குகுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ராதாரவி 1138 வாக்குகள் பெற்றார். பொருளாளராக கார்த்தி வெற்றி பெற்றுள்ளார். கார்த்தி 1493 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட எஸ்.எஸ்.ஆர் கண்ணன் 1090 வாக்குகளும் பெற்றனர்.

தோல்வியடைந்த சரத்குமார பேசுகையில் வெற்றியடைந்தவர்களைப் பாராட்டுவதாகவும், அவர்கள் தங்கள் பணியைத் தொடர முழு ஒத்துழைப்பும் தருவோம் என்றும் கூறினார். ராதாரவி கூறுகையில் வெற்றி பெற்ற அணியினர் நடிகர் சங்க இடத்தில், சத்யம் குழுமத்துக்கு வணிகவளாகம் கட்டி 30 வருடங்கள் உபயோகப்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய சத்யம் குழுமத்துடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்து தருவோம் என்றார்.

Related Images: