பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துவரும் படம் ‘கபாலி’. சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இதில்தான் பிரச்சனையே. ரஜினி மலேசியாவுக்கு போனதும்தான் போனார். அவர் எங்கு சென்றாலும் ரசிகர்கள் கூட்டம் கூடி இன்றைக்கு இந்த இடத்தில் இந்த மாதிரியான காட்சிகளை படமாக்கினார்கள். இன்றைக்கு இந்த இடத்தில் இவருடன் ரஜினி நடித்தார் என போட்டோக்களுடன் வீடியோக்களுடன் செய்திகளை உடனுக்குடன் பரப்பிவருகின்றனர்.
இந்த வகையில் ரஜினி மலேசியா சென்றது முதல் அவர் அணிந்து நடித்த காஸ்டியூம்களும் லொக்கோஷன்களும் கதையோட்டமும் காட்சிகளும் அப்பட்டமாக வெளியாகிவிட்டது.
இது தீவிர ரஜினி ரசிகர்களை மிகுந்த வருத்தத்துக்குள்ளாக்கியிருக்கிறது. திரையில் நாம் பார்த்து ரசிக்க வேண்டிய சூப்பர் ஸ்டாரின் தோற்றத்தை இப்படி அன்றாடம் இணையத்தில் சுண்டல் விநியோகம்போல் வெளியிட்டுக்கொண்டிருந்தால் அது படம் பார்க்கும்போது பெரிய தாக்கத்தைக் கொடுக்காது.
இன்னும் சொல்லப்போனால் மற்ற ரசிகர்களுக்கு ‘கபாலி’ படத்தை பார்க்கவே தோன்றாமல் போகும் அபாயம் ஏற்படும். இதன் விளைவுதான் சமீபத்தில் ‘கபாலி’ படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட ஸ்டில்களுக்கு ஃபர்ஸ்ட் லுக் அளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்காதது.
ரஜினி ஷங்கர் இயக்கத்தில் ‘சிவாஜி’ படத்தில் நடித்தபோது ரஜினி செக்கச் செவெலென இருக்கும் ஒரு ஒற்றை ஸ்டில்லைதான் வெளியிட்டார் ஷங்கர். அந்த ஒற்றை ஸ்டில்லே கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு படம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பை தந்தது. அதேபோல் திரையில் முதன்முதலாக ரஜினியை வெள்ளைக்காரர் போல் பார்த்ததும் ஒவ்வொரு ரசிகனுக்கும் புல்லரித்தது. திரும்ப திரும்ப தியேட்டருக்கு வந்தார்கள்.
அந்த மேஜிக் கபாலியில் நிகழாமல் போய்விடுமோ என ரஜினியின் தீவிர கலக்கத்தில் இருக்கிறார்கள். இப்படி எல்லாமே கசிந்துகொண்டிருப்பதை குறித்து படக்குழுவினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பெரிதாக ஆர்வம் காட்டுவதாகவும் தெரியவில்லை.
இப்படியே போனால் ரஜினி ரசிகர்களே ரஜினிக்கு வில்லனாக மாறி நிற்க வேண்டிய நிலை வரும். அப்படியொரு நிலை வரக்கூடாது என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.