’உதயம் என் ஹெச்4’ படத்தை இயக்கிய மணிமாறனின் இரண்டாவது படம். வேலூர் வாலாஜாபேட்டையில் பிறந்தவரான மணிமாறன் இம்முறை தனது சொந்த மண்ணைக் கதைக்களமாக்கி ‘புகழ்’ பெற முயல்கிறார்.

கோபக்கார இளைஞர்கள் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் குதித்துக்கொண்டே இருப்பார்கள். ‘புகழ்’ நாயகன் ஜெய் அவ்வகையான கோபக்கார இளைஞன்தான்.

கதை என்ன? வேலூர் வாலாஜாபேட்டையில் நண்பர்களுடன் அரட்டை அடித்து, கிரிக்கெட் விளையாடி, பீர் அடித்து பார்களில் குரூப் டான்சர்களுடன் குத்து டான்ஸ் ஆடும் இளைஞன் புகழ். ஊருக்கு ஒரு பிரச்சினை என்றால் முன்னால் போய் நிற்பவன். இந்நிலையில் அவர்கள் காலம் காலமாய் பயன்படுத்தி வரும் விளையாட்டு மைதானத்தை நகராட்சி கவுன்சிலரை கையில் வைத்துக்கொண்டு ஒரு அமைச்சர் ஆட்டயப்போடத் துடிக்கிறார். புகழ் அதைத் தடுக்கிறார். அடி,தடி வெட்டுக்குத்துமாக அப்படியே கதை நகர்ந்து மிகச்சாதாரணமான ஒரு க்ளைமாக்ஸுடன் படம் நிறைவு பெறுகிறது.

கோபக்கார இளைஞன் பாத்திரத்துக்கு ஜெய்யைப் போட இயக்குநருக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கவேண்டும் என்று யோசிக்க ஆரம்பிக்கும்போதே, படம் பார்க்க வந்த ஒவ்வொரு ஜீவனுமே கோவக்கார ஜீவனாகிவிடுவதை பல்லைக்கடித்துக்கொண்டு பார்க்க நேர்ந்துவிடுகிறது. ‘உங்க ஆத்திரம் சர்தாங்க’ என்று உப்புச்சப்பில்லாத எக்ஸ்பிரசன்களால் உணர்த்திக்கொண்டே இருக்கிறார் ஜெய்.

எதிர்வீட்டில் நாயகிகளை அடிக்கடி பார்த்து ரசிகர்களுக்கு போர் அடித்துவிட்டதால் இம்முறை நாலு வீடுகள் தாண்டி நாயகி சுரபி வருகிறார், பத்து சீன்களுக்கு ஒரு முறை ஒரு வெத்து காதல் சீன் இவருக்கு. எது மிஸ்ஸிங் என்று சொல்லத்தெரியாமலே ஹீரோயினாக இவரை ஏற்க மனது மக்கர் செய்கிறது. தங்கமான தங்கச்சி வேடங்களுக்கு சுரபி ஒரு அமுதசுரபி.

ஜெய்யின் நண்பனாக ஆர்.ஜே.பாலாஜி, அண்ணனாக கருணாஸ்,வில்லனாக இயக்குநர் மாரிமுத்து ஆகிய மூவரும் முத்துக்கள் மூன்று. அதிலும் பாலாஜி கையில் பேட்டும்,பந்தும் இல்லாமல் வறட்சியான இடங்களில் சிக்ஸரும்,ஃபோருமாய் ஸ்கோர் செய்கிறார்.

ஒளிப்பதிவு வேல்ராஜ், இசை விவேக் மெர்வின்,ஸ்டண்ட் திலீப் சுப்பராயன்.மூவரும் தத்தம் கருமமே கட்டளைக்கல் என்று இயங்கியிருக்கிறார்கள்.

தேவையற்ற மசாலாக்காட்சிகள், அதிகம் பாடல்கள், காமெடிக்காட்சிகள் இல்லாமல் இயக்குநர் மணிமாறன் சமூக நோக்குடன் ஒரு நல்ல சேதியைத்தான் சொல்ல முயன்றிருக்கிறார்,

ஆனால் ரீலுக்கு ரெண்டுவாட்டியாவது கொட்டாவி வருவதை தவிர்க்க முடியவில்லையே…என் செய்வோம்…என் செய்வோம்…?

Related Images: