பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் முழுக்க ரயிலில் நடக்கிறது. அதனால் இதற்கு முதலில் ‘ரயில்’ என்ற பெயரை தேர்வு செய்தனர். ரயில் என்பது ஆங்கிலம் என்பதால் வரிச்சலுகை கிடைக்காது. அதனால், மிரட்டு என பெயரை மாற்றினர். ஆனாலும் ரயிலைவிட பிரபுசாலமனுக்கு மனசில்லை. தற்போது படத்துக்கு தொடரி என தூய தமிழ்ப் பெயர் வைத்துள்ளார்.
இந்த தொடரி தமிழ்தானா என்று பிரபல வார இதழ் ஒன்று கவிஞர் மகுடேசுவரனிடம் கருத்து கேட்டுள்ளது. அதற்கு அவர் ஃபேஸ்புக்கில் பதிலளித்துள்ளார்.
“தொடரி என்னும் பெயர் திரைப்படமொன்றுக்கு வைக்கப்பட்டுள்ளதாம். இப்பெயர் சரியா என்று முன்னணி இதழிலிருந்து அழைத்துக் கேட்டார்கள். தொடர் என்பது வினைவேர். தொடர்க என்னும் ஏவல் பொருள் தருவது.
இவ்வினைவேருடன் இ என்னும் விகுதி சேர்த்தால் தொடர் + இ = தொடரி என்னும் விகுதிபெற்ற தொழிற்பெயர் கிடைக்கும். தொடர்கின்றமையால் கிடைக்கின்ற /அமைகின்ற எவ்வொன்றுக்கும் இப்பெயர்ச் சொல்லைப் பொருத்தலாம்.
இச்சொல்லைக் கேட்டதும் சொற்பொருள் அடிப்படையில் எனக்குத் தோன்றுவது இது. எடுத்துக்காட்டாக, அகழ் என்ற வினைவேர் உள்ளது. அகழ் என்றால் தோண்டு என்று பொருள். நிலத்தைத் தோண்டுவது அகழ்வது ஆகும். ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல’ என்னும் உவமைத்தொடரை அறிவோம்.
அகழ்ந்து பெறுவது அகழி. அகழ் + இ. கோட்டைகளுக்குக் காப்பாக சுற்றுக்குழி தோண்டி அமைப்பது அகழி.
அதுபோல் தொடரி. இருப்பூர்திக்கான பெயராக அவ்வியக்குநர் இப்பெயரைத் தேர்வு செய்தாராம். நல்ல முயற்சிதான். இப்படித்தான் புதுச்சொற்கள் எல்லாத் தரப்பிலிருந்தும் ஆக்கி நிறுவப்படவேண்டும் என்று சொன்னேன்.”
தூய தமிழ்ப் பெயர்கள் வைப்பதால் என்ன சார் பெருசா வரப் போகுது என்பவர்கள் கவனிக்க. ஒவ்வொரு படமும் ஒரு நல்ல தமிழ் வார்த்தையை தமிழை கண்டுகொள்ளாத தமிழனுக்கும் கற்றுக் கொடுக்கிறதே !
எப்படியோ தமிழ் வளர்வது நல்லதே. வரியெல்லாம் மல்லையாகிட்டே வசூல் பண்ணிக்கோங்க போதும்.