பாப் இசை உலகின் முடிசூடா சக்ரவர்த்தி என்று கூறப்பட்ட, தனது நடனத்திறமையால் ஒட்டுமொத்த உலகையும் கட்டிப் போட்ட பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன்.
மைக்கேல் ஜாக்சனின் கோடானு கோடி ரசிகர்களில் ஒருவரும், சென்னையில் இயங்கி வரும் ஆர்.சி.கோல்டன் கிரானைட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான சந்திரசேகரன். ஒரு தீவிர மைக்கேல் ஜாக்சன் பக்தர். அவரது முயற்சியால் மைக்கேல் ஜாக்சனுக்கு கிரானைட்டிலான பிரம்மாண்ட சிலையொன்ற வடித்துள்ளார்.
மூன்றரை டன் எடையில், 10 அடி உயரத்தில் ஐந்தரை அடி அகலத்தில் அதிபிரமாண்டமாய் கருப்பு கிரானைட் கற்களில் உருவாகியுள்ளது மைக்கேல் ஜாக்சனின் இந்தச் சிலை. கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கனகபுரா என்ற ஊரில் செயல்பட்டு வரும் சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த கருப்பு கிரானைட் கல்லை, காஞ்சிபுரத்தில் வைத்து 45 நாட்கள் கைவினைக் கலைஞர்கள் பார்த்து பார்த்து ஜாக்சனின் சிலையை செதுக்கியுள்ளனர்.
12 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மைக்கேல் ஜாக்சன் சிலை, பார்ப்பவர் கண்களை விரியச் செய்கிறது. இந்தச் சிலையை ஆர்.சி.கோல்டன் கிரானைட் நிறுவனத்தினர் சென்னை பல்லாவரத்தில் இயங்கி வரும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் திரு.ஐசரி கணேஷ் அவர்களுக்கு வழங்கியுள்ளனர். வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் வேல்ஸ் பிலிம் கிராப்ட் என்ற இரண்டு நாள் கருத்தரங்கில் இந்த சிலை பல்கலை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக தென்னிந்திய மைக்கேல் ஜாக்சன் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், இயக்குனருமான திரு.பிரபுதேவா அவர்களும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் திரு.ஐசரி கணேஷ் அவர்களும் இந்த சிலையை திறந்து வைத்தனர்.
சிலை டேன்ஸ் ஆடியதா என்று யாரும் கவனித்தார்களா ? தெரியவில்லை.