‘சுதந்திர’ தினத்தன்று தில்லி செங்கோட்டையில் கொடியேற் பிரதமர் மோடி நிகழ்த்திய உரை பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. காஷ்மீரில் கண் வைத்தால் நாங்கள் பலுசிஸ்தானில் கால் வைப்போமாக்கும் என்று மறைமுகமாக பாகிஸ்தானுக்கு எச்சரிகை விடுத்த மாவீரர் என கொண்டாடுகின்றன பார்ப்பனிய ஊடகங்கள். முதலாளிய அறிஞர்களோ.. “இப்படி சண்டை போட்டுக் கொண்டிருந்தால் ‘வளர்ச்சி’ என்னவாவது என சத்தமின்றி முனகிக் கொண்டிருக்கிறார்கள்”.

முதலாளிய ஊடகங்களில் ஒரு சில, ‘இப்படி பலுசிஸ்தானின் பெயரை வெளிப்படையாக இழுத்து எங்கப்பன் குதிருக்குள் இல்லை என நாமே சொல்லியிருக்க வேண்டாம்’ என சுருதி சேர்க்கின்றன. அப்பன் குதிருக்குள் போனது பற்றி இந்த ஊடகங்களுக்கு கேள்வியில்லை – ஆனால், அதை பிரதமரே சொல்லிக் காட்டியிருக்க வேண்டாம் என்பது தான் பிரச்சினை. அதுவும், வளர்ச்சியின் நாயகனாக தாம் வைத்த கட்டவுட்டை விட பெரிதாக மைக் செட் போட்டு “நானும் ரவுடி தான்” என கூவியிருக்க வேண்டாம் என்பதும், இந்த சவுண்டு சர்வீசின் சத்தத்தில் ’வளர்ச்சியை’ அண்ணாரது சமூகம் மறந்து விடக்கூடாது என்பதுமே முதலாளிய அறிஞர்களின் கவலை.

என்றாலும் மோடி இவர்களுக்கும் குறை வைக்கவில்லை. செங்கோட்டையில் அவர் ஆற்றிய உரையின் பெரும் பகுதி நாடெங்கும் பாரதிய ஜனதா வாயிலேயே வெட்டிய காவாயில் எத்தனை டி.எம்.சி தேன் பாய்ந்தோடுகின்றது என்பதைப் பற்றி பல்வேறு புள்ளிவிவரங்களை அள்ளித் தெளித்தவாறே இருந்தார். இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்திக் குறியீட்டு வளர்ச்சி அமோகமாக உள்ளதென மோடி குறிப்பிட்டார் – இந்தியாவில் பின்பற்றப்படும் வளர்ச்சிக் குறியீட்டு கணக்கீட்டு முறையே மோசடியானது என புள்ளியியல் மற்றும் பொருளாதார தரவரிசை நிறுவனங்கள் சிரிப்பாய்ச் சிரிக்கின்றன.

அடுத்து பெரும் திட்டங்களை தாமதப்படுத்தக்கூடாது என அம்பானி மற்றும் அதானிகளின் சுரண்டல் சுதந்திரத்திற்காக வாள் வீசிய பிரதமர், பணவீக்க அதிகரிப்பால் ஏழையின் சாப்பாட்டு விலை கூடுவதை நான் அனுமதிக்க மாட்டேனாக்கும் என தெரிவித்தார். அவர் பணவீக்கத்தோடு வாயாலேயே மூன்றாம் உலக யுத்தத்தை ஆரம்பித்த அதே வேளையில் தான் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சந்திர மண்டலத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தன.

இவ்வாறான சவடால்களின் வரிசையில் நாடெங்கும் மின்சார இணைப்பு வழங்கி விட்ட தனது ‘சாதனையையும்’ அவர் குறிப்பிட மறக்கவில்லை. ”தில்லியிலிருந்து மூன்று மணி நேர பயண தூரத்தில் உள்ள நாகலா பதேலா கிராமத்துக்கு மின்சாரம் சென்று சேர 70 ஆண்டுகள் ஆகியிருக்கிறது” என பிரதமர் முழங்கியதை கேள்விப்பட்ட நாகலா பதேலா கிராம மக்கள் விரக்தியோடு சிரிக்கிறார்கள்.

தில்லியில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாகலா பதேலா கிராமத்தில் மொத்தம் 600 வீடுகள் உள்ளன. மொத்த மக்கள் தொகை 3,500. இந்த கிராமத்தில் உள்ள மொத்த வீடுகளில் வெறும் 150 வீடுகளுக்குத் தான் மின்சார இணைப்பு உள்ளது – மீதமுள்ள 450 வீடுகளுக்கு மின்னிணைப்பு வழங்கப்படவில்லை. மின்னிணைப்பு உள்ள வீடுகளும் ஆழ்துளைக் கிணறுகளை இயக்குவதற்குத் தேவையான மின்சார டிரான்ஸ்பாமர்களில் இருந்து சட்டவிரோதமாக இணைப்பு பெற்றுள்ளன. இந்த சட்டவிரோத மின் இணைப்பிற்காக இருமாதங்களுக்கு ஒருமுறை 400 ரூபாய்கள் வரை ஒவ்வொரு வீட்டாரும் கட்ட வேண்டியுள்ளது என்கிறார் கிராமத் தலைவர் யோகேஷ் குமார்.

உண்மையில், ”தீன்தயால் உபாத்யாயா கிராம ஜோதி யோஜனா” என்கிற திட்டத்தின் அடிப்படையில் இந்த கிராமத்திற்கு மின்சார இணைப்பு வழங்க தேவையான மின்சார கம்பங்கள் நடப்பட்டு அதற்கான மின் கம்பிகளும் இழுக்கப்பட்டு விட்டது. ஆனால், மின் கம்பங்களை அமைத்து மின் வினியோகத்திற்கான அடிப்படைக் கட்டுமானங்களை நிறுவும் ஒப்பந்தம் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் தடையில்லாச் சான்று வழங்க தாமதப்படுத்துவதாலேயே மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது.பிரதமரின் உரையைத் தொடர்ந்து “நாகலா பதேலா கிராமத்தவர்கள், பிரதமரின் உரையில் தங்களது கிராமத்தின் பெயர் குறிப்பிடப்பட்டதை ஊரின் பொதுத் தொலைக்காட்சியில் கண்டு ரசித்த போது எடுத்த அரியவகைப் புகைப்படம்” என பிரதமர் அலுவலகம் புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. அந்த புகைப்படத்தில் இருப்பது தங்கள் கிராமமே இல்லை என்கிறார்கள் அந்த மக்கள். போட்டோ ஷாப் மூலம் சீனாவையே பெயர்த்தெடுத்து வந்து அகமதாபாத்தில் நிறுவிய மோடியின் முந்தைய சாதனையை அறிந்திருந்தால் அந்த அப்பாவிகள் வாயடைத்துப் போயிருப்பார்கள்.

எல்லா மக்களுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டிய அடிப்படை கடமையில் இருந்து கைகழுவியதோடு, அந்தப் பொறுப்பை தனியாருக்குத் தாரைவார்த்துக் கொடுத்ததையே தனது சாதனையாக பீற்றிக் கொண்டிருக்கிறார் மோடி. இதற்கிடையே நாகலா பதேலா கிராமத்தில் சட்டவிரோதமாக மின்ணினைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் 150 வீடுகளையும் ஆய்வு செய்து அவர்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகளை அனுப்பியுள்ளார் மாவட்ட மாஜிஸ்டிரேட்டு.

பிரதமரின் வாயில் முப்பது நொடிகள் விழுந்ததற்கே நாகலா பதேலாவை பீடை சூழ்ந்து விட்டது – அவர் அல்லும் பகலும் அயராது நாட்டைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதாக அரை டவுசர்கள் பீற்றிக் கொள்வதைக் கேட்டால் நமக்கும் பீதி பற்றிக் கொள்கிறது.

நன்றி. வினவு இணையதளம்.

Related Images: