கடந்த 15 வருடங்களாகப் பல படங்களுக்கு இசையமைத்த பரணி , ஒண்டிக்கட்ட படம் மூலம் இயக்குநர் ஆக அறிமுகமாகிறார்.

தங்களது சகாவைக் கெளரவப்படுத்தும் விதமாக இசையமைப்பாளர்கள் தினா, எஸ்.ஏ.ராஜ்குமார், சத்யா, அம்ரீஷ் ஆகியோர் இந்தப் படத்தின் இசையை வெளியிட பரணியின் புகுந்த வீடான இயக்குநர் குழுமத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் சக்தி சிதம்பரம், மனோஜ்குமார், பாரதிகணேஷ், சாய்ரமணி, விஜய்சந்தர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

பாடலாசிரியர்கள் கபிலன், தர்மா ஆகியோருடன் சேர்ந்து பரணியும் பாடல்கள் எழுதி இசையும் அமைத்திருக்கிறார். நடன இயக்குநர்கள் சிவசங்கர், ராதிகா ஆகியோரின் சிறப்பான நடன அசைவுகள் மற்றும் ஆலிவர் டெனியின் ஒளிப்பதிவில் அனைத்துப் பாடல் காட்சிகளும் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.

பல்வேறு படங்களில் துணைக்கதாபாத்திரமாக நடித்த விக்ரம் ஜெகதீஷ் நாயகனாகவும் , உச்சத்துல சிவா –  நேகா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஏ.ராஜ்குமார், ” டிரெண்ட் என்று எதுவும் கிடையாது.. நல்ல இசையை மக்கள் என்றுமே விரும்புவார்கள்… அதுவும் தான் இயக்கும் படம் என்பதற்காக இசை கொஞ்சம் தூக்கலாகவேஅமைந்து  நம்மைத் தாலாட்டுகிறது….” என்றார்.

“இசையமைப்பாளர்கள் ஹீரோ ஆகிக் கொண்டிருக்கும் போது, இசையமைப்பாளர் பரணி இயக்குநராகியிருக்கிறார்… அவரது முதல் படமான பார்வை ஒன்றே போதுமே படத்திலேயே தான் ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்று நிரூபித்தவர்… ஒண்டிக்கட்ட படத்தின் மூலம் சிறந்த இயக்குநராக அறியப்படுவார்..” என்றார் சத்யா.

” தலைப்பை ஒண்டிக்கட்ட என்று வைத்திருந்தாலும் பரணி ஒண்டிக்கட்ட இல்லை என்பதற்காகத்தான் நாங்கள் எல்லாம் வந்திருக்கிறோம்..” என்று வழக்கம் போல கலகலப்பூட்டினார் அம்ரீஷ்.

இயக்குநர் மனோஜ் குமார் பேசும் போது, ” பரணியுடன் இசை சேர்ப்பில் ஈடுபடும் போது மிகவும் மென்மையாகப் பேசுவார்.. கொஞ்சம் விட்டால் அவரைக் காதலித்துவிடலாமா என்று கூடத்தோன்றும்… அப்படிப்பட்டவருக்குள் இவ்வளவு திறமைகளா என்று வியக்கிறேன்.. இந்தப் படத்தைப் பார்க்கும் போது பார்த்திபனின் புதிய பாதையைப் பார்த்த மாதிரி இருக்கிறது ஒண்டிக்கட்ட..” என்றார்.

” விக்ரம் ஜெகதீஷ் மண்ணின் நடிகராகக் கருப்பாக இருக்கிறார் அதுதான் தமிழ் சினிமாவுக்கு வேண்டும்… கருப்பாக இருக்கும் நடிகர்கள் இங்கே உச்சத்தைத் தொடுவார்கள்…

நாயகி  நேகா நாலுபாடல்களில் வந்தாலும் சலிக்கவில்லை…

நாம் ஒற்றுமையாக ஜி.எஸ்.டி யைக் குறைக்கப் போராட வேண்டும்..” என்றார் சக்தி சரவணன்.

” தெலுங்கில் 96 வயதிலும் கே.விஸ்வநாத், மூத்த இயக்குநர் விஜயேந்திரப்பிரசாத் இன்றும் படங்கள் இயக்குகிறார்கள்… கோடிக்கணக்கான ரூபாய் சம்பளமும் வாங்குகிறார்கள்… ஆனால், தமிழ் சினிமாவில் மட்டும் தான் தொழில்நுட்பக் கலைஞர்களை ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள்…”என்றார் பாரதி கணேஷ். நாயகன் விக்ரம் ஜெகதீஷ், வாலு- ஸ்கெட்ச் இயக்குநர் விஜய்சந்தரின் அறைத்தோழர் என்பது குறிப்பிடத்தக்கது.

” இசை சிறப்பாக இருந்தால், படத்துக்கு ரசிகர்கள் படையெடுப்பார்கள்… ஒண்டிக்கட்ட படத்தின் இசை மிகச்சிறப்பாக இருக்கிறது…” என்றார் சாய்ரமணி. சாய்ரமணியின் சிங்கம் புலியில் வில்லனாக நடித்த ஜாக் தான் ஒண்டிக்கட்ட விக்ரம் ஜெகதீஷ் என்பது கூடுதல் தகவல்.

சிவசங்கர் நடனம் அமைத்த கெட்ட கெட்ட கனவா வருது, நிலாக்காயுது நேரம் நல்ல நேரம் … பாடலை விட செம ரொமாண்டிக் ரகம் என்றால் அது மிகையாகாது. படத்தின் வெற்றிக்கு இந்த மாதிரி ஒரு பாடல் வேண்டும் என்று  நடன இயக்குநர் சிவசங்கர் தான் , இயக்குநர் பரணியை விரட்டி விரட்டி வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒண்டிக்கட்ட நாயகன் விக்ரம் ஜெகதீஷுக்கு ஒரு கடிகாரம் அணிவித்து மகிழ்ந்தார் சிவசங்கர்.

வழக்கமாக எல்லோரும் பட்ட கஷ்டத்துடன் , பத்து வருடம் போராடி பத்து படம் நடித்திருக்கும் விக்ரம் ஜெகதீஷ், அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் ஏதாவது ஒரு வருடத்தில் பத்து படம் நடிப்பார் என்றால் அது மிகையாகாது.

ஒண்டிக்கட்ட படத்தை Friends Cine Median மேகலா.ஆர்.தர்மராஜ் தயாரித்திருக்கிறார். இவர் நேகாவுடன் பாடி ஆடும் கட்டம் போட்ட சட்டை… பட்டி தொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பும் ரகம்.

Related Images: