2017 சுவாரஸ்யங்கள் அதிகமில்லாத ஆண்டுபோலவே தோன்றுகிறது. ‘நாய்க்கு வேலையில்ல. நிக்க நேரமில்ல’ என்பதாகக் கழிந்ததாக நினைவு. ஆனால் அக்டோபரில் ஒரு மூன்றுநாட்கள் புழல் சிறையிலிருந்ததை விதி விலக்காகச் சொல்லலாம். அதற்காக யாரும் மகிழ்ச்சியடையவோ பீதியடையவோ தேவையில்லை. சாப்பாட்டு மேசையைத் தவிர வேறெங்கும் உயிரினங்களை வதைக்கக் கூடியவனல்ல நான். (மாணவர்களைத் தவிர்த்து) புழல் சிறைவாசிகளுக்கான பயிலரங்கு ஒன்றில் கலந்துகொள்ளும் ஒரு அரிய வாய்ப்பை பழைய மாணவரும், நண்பரும், நாடக்காரரும், சினிமா இயக்குநருமான அனீஸ் ஏற்படுத்தியிருந்தார்.
‘Prison Theatre’ எனும் அவருடைய அமைப்பு ஏற்கனவே சிறைவாசிகளுக்கான நாடகச் செயல்பாடுகளைச் செய்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக எழுதவிரும்புபவர்கள், பாடல்களை உருவாக்க விரும்புபவர்களுக்கான ‘இலக்கிய, இசைப் பயிலரங்காக’ அது திட்டமிடப்பட்டிருந்தது. அங்கு ஒரு இசைக்குழுவும் இயங்கிவருகிறது. ஏற்கனவே சிறைவாசிகளுக்குள் சிறைவாழ்க்கைபற்றிய அற்புதமான கானாக்கள் உலவிக்கொண்டிருப்பதன் தொடர்ச்சியாக பாடல் உருவாக்கத்தை மேம்படுத்த ஒரு அடிப்படைப் பயிற்சி என்று இதைச் சொல்லலாம். இலக்கியப்பகுதியை பேராசிரியர் டி.தர்மராஜும், எழுத்தாளர் பாக்கியம் சங்கரும் கவனித்துக்கொண்டார்கள். இசைப்பகுதியை நானும் இசையமைப்பாளர் ஜிப்ரானும் கவனித்துக்கொண்டோம். (பேராசிரியர் அ.ரா வர இருந்து வராமல் போனார்)
சரி. கதைக்கு வருகிறேன். இசை அமர்வின்போது இசைக்கு துளி சம்மந்தமுமில்லாமல் அழிச்சாட்டியம் பண்ணிக்கொண்டிருந்த சிறைவாசி ஒருவரை ‘இலக்கியவாதி ஆக்கிவிடும் திட்டத்தில்’ தேநீர் இடைவேளையில் ஓரங்கட்டி நீங்க? என்றேன், சார் நானும் மதுரைதான் சார். நீங்க மதுரையில எங்க என்றார். கோரிப்பாளையம் என்றேன். நான் செல்லூர்சார் என்றார். என்ன விசயமா இங்க இருக்கீங்க? என்று கேட்டேன். நம்மூர்ல ஒரு சம்பவம் ஆயிப்போச்சு சார். (சம்பவம் என்பது சின்னதாய் ஒரு கொலை) அப்பறம்? அப்பறம் என்ன, பேசாம மதுரையிலயெ இருந்துருக்காலாம். சென்னை வந்தேன். அந்தா இந்தான்னு 16 சம்பவமாகிப்போச்சு. நேரடி சாட்சி எதுவும் கெடையாது சார்.. நம்ம பய ஒருத்தன் சிக்கி எல்லாத்தையும் போட்டுவிட்டுட்டான். அவர் சொல்லிக்கொண்டே போக எனக்கு வைரமுத்து சொன்ன உருவமில்லா உருண்டைகள் தொண்டைக்குள் உருள ஆரம்பிக்க, ஏன்சார் எனக்கு மியூசிக் வருதா என்றார் அப்பாவியாக. ஏன்…வராம… வந்தே தீரும் என்றேன்.
மாலைநேரங்களில் வளாகத்திற்குள் உற்சாக நடைபயணத்தில் பலர் இருந்தார்கள். அருகிலிருந்த நண்பர் சொன்னார் அந்தா போராரே அவர் தான் …. ஐ.ஏ.எஸ்.,கேஸ்ல உள்ள இருக்கார். கூட பேசிக்கிட்டே போராரே அவர் ஒரு ஆளயே வெட்டி பிரியாணி போட்டவர் சார். சாப்பிடும்போது ஒருத்தன் வாயில கட்டைவெரல் கடிபட்டு மாட்டிக்கிட்டார். கதை சொன்னவரிடம் நீங்க என்றேன். ஹார்டுவேர் எஞ்சினியர் சார். கல்யாணம் ஆச்சு. அவங்க மனசில என்ன இருந்துச்சோ… தீ வச்சுக்கிட்டாங்க.. நான் இங்க… எங்க அம்மா பெண்கள் சிறையில…அடக்கடவுளே என்றேன்…. நீங்கவேற தீக்காயங்களோட ஆஸ்பத்திரில இருக்கும்போது வந்து பாக்கக்கூட இல்லைன்னு எதிர்வீட்டுக்காரனையும் லிஸ்ட்ல சேர்த்துவிட்டுட்டாங்க சார். அது எப்டிங்க? என்றேன். மரண வாக்குமூலம் சார். எதிர்வீட்டுக்காரனும் உள்ளதான் இருக்கான்.
20களின் தொடக்கத்தில் இருக்கும் சிவகங்கை இளைஞர். சென்னைல ஒரு எஞ்சினியரிங் காலேஜ்ல படிச்சேன். கோஷ்டி தகறாறு. கிளாஸ் மேட் ஒருத்தன மிரட்டுறதுக்காக வகுப்பறைல ஒரு நாற்காலிய தூக்கி அடிச்சேன். ஸ்பாட்ல அவுட் ஆயிட்டான் என்றார்.
எங்க குழுவில் ஒரு பிரிட்டிஷ் பிரஜையும் (வில்லியம்ஸ்) உண்டு. ஆறு அடி உயரத்தில் கித்தாருடன் வந்துவிடுவார். ஆயுதக்கடத்தல் வழக்கில் சிக்கிய மாலுமிகளில் ஒருவர். ஃபிளாஸ்க்கில் அட்டகாசமான காபி, சாக்லெட்களுடன் வந்துவிடுவார்.ஆண்ட பரம்பரையல்லவா? தனிச்சலுகைகள் நிறைய இருக்குமாம். வழக்கு 3ஆண்டுகளுக்கு மேலாக நடக்கிறதாம். சிறையிலிருக்கும் பிரிட்டிஷ்காரர்கள் பலருடைய மனைவிகள் விவாகரத்து வாங்கிச் சென்றுவிட்டார்களாம்.(துன்பத்துலயும் ஒரு ஆறுதலப்பாருங்க)
இவர்கள் எல்லாம் நம்ம இசைக்குழு உறுப்பினர்கள். கூலிக்கு கொலை செய்பவர்கள். சந்தர்ப்பசூழ்நிலையில் குற்றங்கள் செய்தவர்கள். அப்பாவிகளாகத் தண்டனை அனுபவிப்பவர்கள். விதவிதமான மனிதர்கள் விதவிதமான கதைகளோடு ஒன்றி வாழும் சூழல். அசாத்தியமான தோழமையை அவர்களுக்குள் உணரமுடிந்தது. எங்க ஜெயில்ல சாதிப்பாகுபாடு கெடையாது என்று பலரும் சொன்னார்கள். மத்த சிறைகள்ள இருந்து வற்ரவங்கதான் (குறிப்பா பாளையங்கோட்டை, மதுரை) சாதியக் கொண்டு வந்துர்றாங்க என்றார்கள். சிறைச்சாலைகளில்கூட காஸ்மோபாலிட்டனிசம் இருக்கமுடியும் போலும்.
முதல் பார்வையிலேயே புழல் சிறை, ‘சிறை’ பற்றிய என் கற்பனையைத் தகர்த்துவிட்டது. ஆசியாவின் மிகப்பெரிய திறந்தவெளி சிறைச்சாலை (open prison) என்கிறார்கள் அதை. 100 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் ஒரு பல்கலைக்கழக வளாகம் போன்றதான தோற்றம். என்ன….எல்லோருமே பேராசிரியர்கள்தான். காலையில் வெளியே வந்தால் மாலை 5மணிக்கு செல்லுக்குள் சென்றால் போதுமாம். கூட்டிக்கழித்துப் பார்க்கும்போது ஒரு ரெண்டு வருசம் உள்ளே இருந்துட்டு வரலாம் போல தோண ஆரம்பித்துவிட்டது. அதுக்குத் தக்கபடி சின்னக் கொலையாய் செய்யவேண்டும். என்ன ஜட்ஜ் அய்யாவிடம் எஜமான் புழலுக்கு அனுப்பி வைய்யிங்கங்கிற நம்ம கோரிக்கையை அவர் கேக்கணும்.
சிலவாரங்களுக்குமுன்னால் ஆயுதக்கப்பல் வழக்கில் தீர்ப்பு வந்து அனைவரும் விடுதலையாகி விட்டதாகச் செய்தி படித்தேன். வில்லியம் கித்தாரை புழல் இசைக்குழுவிற்கு அன்பளிப்பாகத் தந்துவிட்டுச் சென்றதாகச் சொன்னார்கள். ஆனால் நிறைய சுதேசி சிறைவாசிகள் தண்டனைக் காலம் முடிந்தும் அரசின் மெத்தனத்தால் விடுதலையாகாமல் இருக்கிறார்கள். ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்றுள்ள ராபர்ட் பயசும், பேரறிவாளனும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கிறார்கள் அதே வளாகத்தில்.
முடிவில் சிறைவாசிகளின் எழுத்துக்களைப் பதிவேற்ற ஒரு வலைப்பூ ஆரம்பிக்க அதிகாரிகளிடம் பேச உத்தேசித்திருக்கிறார்கள் ப்ரிசன் தியேட்டர் அமைப்பினர். அவர்கள் எழுத ஆரம்பித்தால் அது சிறை இலக்கியம் (prison literature ) எனும் புதுவகை இலக்கியமாக இருக்கும் என்றார் பேராசிரியர் தர்மராஜ். அவர்களே எழுதி இசையமைக்கும் பாடல்களை அங்கேயே பதிவு செய்வதுபற்றிய தீவிரப்
பரிசீலனையோடு இருக்கிறார் ஜிப்ரான்.
எந்தப்புதுமையும் நிகழ்ந்துவிட முடியாத புத்தாண்டுக்குள் நுழையப்போகும் புழல் இல்லவாசிகளுக்கு சென்று சேரமுடியாத இந்தப் புத்தாண்டு வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அப்புறம் உங்களுக்கும்…
— பேராசிரியர், இசையமைப்பாளர் இரா.பிரபாகரின் முகநூல் பக்கத்திலிருந்து