தமிழ்நாட்டில் சிவகாசியருகே பிறந்து, வட இந்தியா சென்று பெரும் புகழ் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகளில் ஸ்ரீதேவி முக்கியமானவர். இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீ தேவி கடந்த சனிக்கிழமை துபாயில் மரணமடைந்தார், இவரது மரணம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
முதலில் அவரது மரணத்தை ஹார்ட் அட்டாக் என்றார்கள். எடைக்குறைப்புக்காக நிறைய மருந்துகள் எடுத்தது காரணம் என்றார்கள். கடைசியில் அதிகமாக சரக்கடித்து பாத்டப்புக்குள் தண்ணீரில் மூழ்கி இறந்து போனார் என்று கதையை முடித்திருக்கிறார்கள்.
எல்லோரும் எந்த சலனமும் இன்றி அவரை வழியனுப்ப தயாராகிவிட்டார்கள். இதனையடுத்து துபாய் அரசின் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முடித்து நேற்று இரவு அவரது உடல் மும்பை கொண்டு வரப்பட்டது. இவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து மகாராஷ்டிரா அரசு அவருக்கு தேசிய கொடியை போர்த்தி மரியாதை செய்தது, பின்னர் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. இந்த விவகாரம் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு நடிகைக்கு எப்படி தேசிய கொடியை போர்த்தலாம் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அவ்வளவு தூரம் ஊடகங்களால் முக்கியத்துவம் தரப்பட்டு ஸ்ரீதேவியின் மரணம் காட்டப்படுகிறது. ஆனாலும் அவர் மரணத்தின் மர்ம முடிச்சுகள் அப்படியே நிற்கின்றன. அதற்கு யாரும் முயற்சி எடுக்கவில்லை. எவ்வளவு பிரபலமாய் இருந்தாலும் நம்பிக்கைக்குரியவர்கள் உடன் இல்லாத பட்சத்தில் ஒருவரின் மரணம் அவர் கையில் இல்லை என்பது ஜெயலலிதாவிற்கு மட்டுமல்ல ஸ்ரீதேவிக்கும் உண்மையாகிப்போனது.