இந்திய சினிமாவின் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அத்தனை மொழிகளிலும் மகத்தான வெற்றி கண்ட ‘த்ரிஷ்யம்’பட இயக்குநர் ஜீத்து ஜோஸப்பின் நேரடி தமிழ்ப்படம்.நடிகர் சூர்யாவின் குடும்பப்படம்.

கதைக்கு வருவோம்.மேட்டுப்பாளையத்தில் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் சத்யராஜ். இவர், தாய் சௌகார் ஜானகி, மனைவி சீதா, மகள் ஜோதிகா என வாழ்ந்து வருகிறார். இவருடைய மகன் 15 வருடத்திற்கு முன்பு காணாமல் போகிறார். இதே சமயம் கோவாவில் பல பேரை ஏமாற்றி பணம் சம்பாதித்து வரும் கார்த்தி, நான்தான் காணாமல் போன மகன் என்று சத்யராஜ் வீட்டுக்கு கொண்டுவரப்படுகிறார். இங்கு வந்த பிறகு கார்த்தி குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்தாலும், அவரை கொல்ல சதித்திட்டம் நடக்கிறது. அது யார்? எதற்கு கொல்ல நினைக்கிறார்கள்? சத்யராஜின் காணாமல் போன மகன் கார்த்தி தானா? காணாமல் போக என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் கார்த்தி, திருடனாகவும், மகனாகவும் திறம்பட நடித்திருக்கிறார். திருடனாக மற்றவர்களை ஏமாற்ற செய்யும் சேட்டைகளும், பெற்றோர் மற்றும் அக்காவின் பாசத்திற்கு ஏங்கும் பரிதாபமான நடிப்பும் நெகிழ வைத்திருக்கிறது. ஆனால் நடுநடுவே வந்து எட்டிப்பார்க்கும் அவரது மனசாட்சி கேரக்டரின் டார்ச்சர் சகிக்கவில்லை.டீச்சராக வரும் ஜோதிகா, கண்டிப்பு, துணிச்சல், பாசம் என தன் திறமையை வழக்கமான ஓவர் ஆக்டிங்குடன் வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக கிளாமாக்ஸ் காட்சியில் 100 ரூபாய் சம்பளத்துக்கு 1000ரூபாய்க்கு நடித்துத்தள்ளியிருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் நிகிலா விமல், காதல் காட்சிகளிலும், அப்பா தவறு செய்தவுடன் வருத்தப்படும் காட்சிகளிலும் கவனிக்க வைத்திருக்கிறார்.ஆனால் பாவம் படத்தில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி ஒரு காட்சி கூட இல்லை.

எம்.எல்.ஏ.வாக வரும் சத்யராஜ், தன்னுடைய அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். ஒரு தந்தை குடும்பத்தின் மீது வைத்திருக்கும் பொறுப்புள்ள அப்பாவாக நடிப்பில் பளிச்சிடுகிறார். அமைதியான அம்மாவாக நடித்திருக்கிறார் சீதா. பார்வையிலேயே பேசுகிறார் சௌகார் ஜானகி. இவரது நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. இந்த வயதிலும் இப்படி நடிக்கிறாரே என அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். வழக்கம்போல் அசுரமான நடிப்பால் கவர்ந்திருக்கிறார் அம்மு அபிராமி. காமெடியில் கலக்கி இருக்கிறார் அஸ்வந்த். இளவரசு, பாலா, ஆகியோர் மசாலா திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள். கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் அலட்டல் இல்லாமல் இருக்கிறது. ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. மேட்டுபாளையம் மற்றும் கோவாவின் அழகை கண்முன் நிறுத்துகிறார்.

த்ரிஷ்யம் படத்தின் சாயல் அப்படியே பல காட்சிகளில் இப்படத்திலும் இருக்கிறது.இயக்குநர் பயங்கர ட்விஸ்ட் என்று நினைத்து வைத்திருக்கிற பல காட்சிகள் சுலபத்தில் யூகிக்கும்படி இருப்பது படத்தின் பயங்கர மைனஸ்.சண்டைக்காட்சிகளில் வழக்கமான ஹீரோயிஸம் சலிப்பை ஏற்படுத்துகிறது. ஜீத்து ஜோஸப் என்கிற நல்ல இயக்குநரின் படம் என்று நம்பிப்போகாமல் கார்த்தியின் மசாலாப்படம் என்ற எண்ணத்துடன் போனால் மட்டுமே படத்தை ஓரளவு சகித்துக்கொள்ள முடியும்.

Related Images: