சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் குலக்கல்வியை ஒழித்த பெரியார் இயக்கம் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர் சத்தியராஜ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் கலந்து கொண்டனர். நூலை ஆ ராசா வெளியிட சத்யராஜ் பெற்றுக்கொண்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ், ’வாழ்க்கையில் பெருமை, மகிழ்ச்சி இரண்டும் முக்கியம். எனக்கு பெருமை, மகிழ்ச்சி இரண்டுமே பெரியார் தொண்டனாக இருப்பதுதான் என்றார். குலம் என்ற ஒன்றே கிடையாது. நடிப்பிற்கு என்ன குலம் இருக்கிறது..? குலம் என்று ஒன்று இருந்திருந்தால் நான் நடிக்கவே வந்திருக்க முடியாது, விவசாயம்தான் பார்த்து கொண்டிருக்க முடியும். இன்றும் பெரியார் என்ற பெயரைக் கேட்டாலே அனைவரும் நடுங்குகின்றனர். பெரியாரின் கருத்துகளை ஆழமாக உள்வாங்கியவர் காமராஜர். எனவேதான் பல்லாயிரக்கணக்கான பள்ளிக்கூடங்களை காமராஜர் திறந்தார்.

விஞ்ஞான வளர்ச்சியினால் இன்று சலவை தொழில் டிரைகிளீனாக மாறியுள்ளது, அழகு நிலையம் பார்லராக மாறியுள்ளது. தெரு கூத்து என்பது சினிமாவாக மாறும்போது சாதிகள் கிடையாது. எனவே, விஞ்ஞானமே சாதிகளை ஒழித்துக்கொண்டிருக்கிறது. மற்றவர்கள் அதற்கு ஆப்பு வைக்காமல் இருந்தால் சரி. ஆனால், அதைத்தான் தற்போது சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். கல்வி, வேலைவாய்ப்பை மறுப்பது மிகப்பெரிய சமூக துரோகம்’என்றார்.

Related Images: