கொரோனா வைரஸை அலோபதி மருத்துவம் இன்னதென்று கண்டுபிடித்துச் சொல்லிவிட்டது. ஆனாலும் இன்னும் அதற்கு குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அலோபதி மருத்துவத்தில் மலேரியாவுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் சிலவற்றை பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆணையம் பரிந்துரைத்துள்ளது. கியூபா நாட்டு மருத்துவர்கள் இன்டர்பெர்ரான் 2பி என்ற மருந்து கொரோனாவை குணப்படுத்த பெரிதும் உதவியுள்ளது என்று பரிந்துரைக்கின்றனர். இது போல ஹோமியோபதி மருத்துவர்களும் இத்தகைய அறிகுறிகளுக்கு சில மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். அலோபதி மருத்துவம் போலவே இந்த வைரஸானது எல்லா மருத்துவ முறைகளுக்கும் புதிதான கிருமியாகும்.
இந்நிலையில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் வந்தபோது அதைத் தடுக்க நோய் தடுப்பு சக்தி பெற நிலவேம்புக் குடிநீர் தமிழ்நாட்டில் பரவலாக உபயோகப்படுத்தப்பட்டதானது நல்ல விளைவுகளை ஏற்படுத்தியது. நோயை தடுக்க உதவியது. இப்போது புதிதான இந்த கொரோனா வைரஸூக்கும் சித்த மருந்துகள் உள்ளனவா என்கிற எதிர்பார்ப்பு நம் மக்களிடம் எழுந்துள்ள நிலையில் பல இயற்கை மருந்துகளும், சித்த மருந்துகளும் வாட்ஸப்பில் பலரால் பகிரப்படுகின்றன. இது போன்ற உறுதி செய்யப்படாத சித்த மருந்துகளை பெரிதும் நம்பிவிட வேண்டாம் என சென்னையில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, நிறுவனத்தின் இயக்குனர், மீனாகுமாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
எந்த காய்ச்சலாக இருந்தாலும், சித்த மருத்துவத்தில் உள்ள, 64 வகையான காய்ச்சல்களில் ஒன்றாகவே கருதப்படும். அந்த வகையில், கொரோனா வைரஸ் பாதிப்பை, ‘ஐயஜூரம், சந்நிபாத ஜூரம்’ என்று கணித்து சிகிச்சை அளிக்கலாம்.
அதன்படி, ‘பிரம்மானந்த பைரவம், வசந்த குசுமாகரம், திரிதோடம்’ என, மூன்று வகையான சித்த மருந்துகளில் ஏதேனும் ஒன்றை, தினசரி இரண்டு நேரம், தேனில் கலந்து நோயாளிகளுக்கு கொடுக்கலாம்.
அதேபோல், ‘விஷஜூர குடிநீர், கபஜூர குடிநீர், நொச்சி குடிநீர்’ ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை, நோய் பாதிக்கப் பட்டோருக்கு, தினமும், 30 மில்லி அளவில் கொடுக்கலாம். எனினும், இந்த மருந்துகளுக்குரிய, முறையான மருத்துவ அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மருத்துவரின் ஆலோசனைகள் பெறப்பட்டே இவற்றை உட்கொள்ள வேண்டும். இவற்றின் குணப்படுத்து திறன்கள் இன்னும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படவில்லை.
இந்த மருந்துகளை தவிர, இணையதளத்தில் உலா வரும் நம்பகமற்ற தகவல்கள், அதிகாரப்பூர்வமற்ற விளம்பரங்கள் மற்றும் சிகிச்சை முறைகளை, பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.